Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலையாள சினிமாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நடிகைகள் - ஹேமா அறிக்கை கூறுவது என்ன?

Advertiesment
girl abuse

Prasanth Karthick

, வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (15:06 IST)

கேரள உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம், மலையாள திரையுலகில் “பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியில் பெண்கள் பயன்படுத்தப்படுவதை (காஸ்டிங் கவுச்)” உறுதி செய்துள்ளது மற்றும் அதன் வரையறையை விரிவுபடுத்தியுள்ளது.

“சமரசம்” மற்றும் “ஒத்துப்போதல்” போன்றவை மலையாள திரையுலகின் பல்வேறு மட்டங்களில் “வாய்ப்புக்கான” கடவுச் சொற்களாக இருப்பதாக, அந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.

 

“தேவைப்படும் போதெல்லாம் பெண்கள் பாலியல் உறவுக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்பதுதான் இந்த இரு வார்த்தைகளின் அர்த்தம்.

 

திரையுலகில் 'காஸ்டிங் கவுச்' நடப்பதாக இருக்கும் பரவலான நம்பிக்கையைப் பயன்படுத்தி, புதிதாக இத்துறைக்கு வருபவர்களுக்கு தயாரிப்பு மேலாளர்கள் (production controllers) இத்தகைய உணர்வை வழங்குகின்றனர். இதற்கு இரையாகும் நபர்களுக்கு “குறியீட்டு எண்களும்” வழங்கப்படுகின்றன.

 

நீதிபதி கே.ஹேமா தலைமையிலான ஆணையம் இது தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கையை நான்கரை ஆண்டுகள் கழித்து கேரள அரசு வெளியிட்டுள்ளது.

 

இந்த அறிக்கை 290 பக்கங்களைக் கொண்டது. இருப்பினும், தங்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய அல்லது சுரண்டலில் ஈடுபட்ட ஆண்களின் பெயர்களை பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளதால், அதுதொடர்பான 54 பக்கங்கள் வெளியிடப்பட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை.

 

அந்த அறிக்கையில் நீக்கப்பட்ட இரண்டாவது பகுதியில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண், “அடுத்த நாள் முதல் அதே நபருடன் கணவன் - மனைவியாக, கட்டிப்பிடித்துக்கொண்டு நடிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது, இவ்விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்தும் அதிர்ச்சிகரமான உதாரணம்.

 

“சினிமா துறைக்கு வரும் பெண்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்கள், அவர்கள் எதற்கு வேண்டுமானாலும் இணங்குவார்கள் என்ற பொதுவான அனுமானம் இருக்கிறது. ஆனால், கலை மற்றும் நடிப்பு மீதான ஆர்வத்தாலேயே பெண்கள் நடிக்க வருகின்றனர் என்பதை சினிமா துறையில் உள்ள ஆண்களால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. ஆனால், பெண்கள் புகழுக்காகவும் பணத்துக்காகவுமே இத்துறைக்கு வருகிறார்கள், எனவே பட வாய்ப்புக்காக அவர்கள் எந்தவொரு ஆணுடனும் படுக்கையைப் பகிர்ந்துகொள்வார்கள் என்ற கருத்து நிலவுகிறது” என அந்த அறிக்கை கூறுகிறது.

 

புகழ்பெற்ற நடிகை ஒருவர் சில ஆண்களால் தன்னுடைய காரில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, திரையுலகில் பணிச்சூழல்கள் குறித்து ஆய்வு செய்யக் கோரி முதலமைச்சர் பினராயி விஜயனிடம் மலையாள சினிமாவில் பணிபுரியும் பெண்களுக்கான அமைப்பான வுமென் இன் சினிமா கலெக்டிவ் (WCC) அமைப்பினர் மனு அளித்தனர்.

 

இதைத்தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் மூத்த நடிகை டி.சாரதா, ஓய்வுபெற்ற கேரள முதன்மைச் செயலாளர் கே.பி. வல்சலாகுமாரி ஆகியோர் இடம்பெற்றனர்.

 

கடந்த 2017ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட வுமென் இன் சினிமா கலெக்டிவ், சினிமா துறையில் ஆதரவு மற்றும் கொள்கை மாற்றம் வாயிலாகப் பெண்களுக்கான பாலின சமத்துவத்தை நோக்கிப் பல செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த அமைப்பில் மலையாள சினிமாவை சேர்ந்த பெண்கள் இடம்பெற்றுள்ளனர். தங்களுடைய கவலைகள் இறுதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

 

“இந்தத் துறையில் அமைப்பு ரீதியான பிரச்னை இருப்பதாக, நாங்கள் பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பாலியல் துன்புறுத்தல் அத்தகைய பிரச்னைகளுள் ஒன்றுதான். இந்தப் பிரச்னைகளை எழுப்பும்போதெல்லாம் எங்களை பிரச்னைகளை உருவாக்குபவர்கள் என்றனர்."

 

"ஆனால், நாங்கள் நினைத்ததைவிட இந்தப் பிரச்னை மோசமாக உள்ளது என்பதை இந்த அறிக்கை நிரூபித்துள்ளது” என விருது பெற்ற மலையாள படத் தொகுப்பாளரும் WCC உறுப்பினருமான பீனா பால் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

 

‘மாஃபியா'வாக செயல்படும் குழு

 

பன்மொழி கொண்ட இந்திய திரைத்துறையில், இதுவே பெண்களின் பணிச்சூழல் குறித்து வெளிவரும் முதல் அறிக்கை.

 

“இதன்முன் வைக்கப்பட்ட ஆதாரங்களின்படி”, பாலியல் துன்புறுத்தல் இத்துறையில் அதிர்ச்சிகரமான விதத்தில் பரவலாக உள்ளது. மேலும், “அவை கண்காணிக்கப்படவோ கட்டுப்படுத்தப்படவோ இல்லை” என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

 

“ஆண்களால் நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை நிரூபிக்கப் பலரும் வீடியோ, ஆடியோ பதிவுகள், ஸ்க்ரீன்ஷாட்கள், வாட்ஸ் ஆப் மெசேஜ்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.”

 

மலையாள திரையுலகில் வலுவான கூட்டம் ஒன்று “மாஃபியா” போலச் செயல்பட்டு வருவதாகவும், முக்கியமான இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் மீது அக்குழு தடை விதிக்கும் என்றும் அந்த ஆணையத்திடம் “முக்கிய நடிகர்” ஒருவர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

 

வாய்வழி மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள அந்த ஆணையம், “சில ஆண் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அல்லது இயக்குநர்கள் பெரும் புகழ் மற்றும் பணத்தைச் சம்பாதித்து, மலையாள திரையுலகைத் தற்போது தங்களின் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்." எனக் குறிப்பிட்டுள்ளது.

 

"இத்துறையில் உள்ள பல ஆண்கள் தங்கள் ஆணையம் முன்பு, பிரபலமான நடிகர்கள் உட்படத் தனிப்பட்ட நபர்கள் பலர் சினிமாவில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக அழுத்தமாகத் தெரிவித்தனர். அவர்களின் பெயர்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

“நாட்டிலுள்ள பல மொழி திரைத்துறையில் மலையாள திரையுலகம் சிறிய திரைத்துறைகளுள் ஒன்றாக உள்ளது. ஆனால், இழிவான பெயரெடுத்த துறையாகவும் இது உள்ளது. பெண்கள் மற்றும் மக்களுக்கு எதிரான பெரிய மாஃபியா இத்துறையில் உள்ளது,” என சினிமா வரலாற்று எழுத்தாளர் ஓ.கே.ஜானி பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

நடிகைகளுக்கு அற்ப ஊதியம் வழங்கப்படுவது, எவ்வித ஒப்பந்தமும் கையெழுத்தாகாத காரணத்தால், அதை யாரும் கேள்வி கேட்க முடியாதது அல்லது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாததை ஆணையம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

 

சில இயக்குநர்கள், நடிகைகளிடம் நிர்வாண காட்சிகள் அல்லது உடலை வெளிப்படுத்தி நடிக்கும் காட்சிகள் குறித்து முன்பே சொல்லாமல் புறக்கணித்ததாக அந்த ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சில பெண்கள் படங்களில் இருந்து வெளியேறிய பின்னர், மூன்று மாதங்கள் வரை நடித்திருந்தாலும் எந்த ஊதியமும் வழங்கப்படாமல் இருந்துள்ளது. படப்பிடிப்பின்போது ஹோட்டல்களில் தங்குவதும் பாதுகாப்பற்றது எனப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

 

“(மதுபோதையில் உள்ள ஆண்கள்) கதவை பல நேரங்களில் வலுவாகத் தட்டுவார்கள். அப்போது அந்த கதவை உடைத்துவிட்டு, அவர்கள் அறைக்குள் வந்துவிடுவார்கள் என்பது போலத் தோன்றும்,” என நடிகைகள் தெரிவித்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.

 

அடிமைகளாகப் பயன்படுத்தப்படும் துணை நடிகர்கள்
 

ஹேமா அறிக்கைப்படி, துணை நடிகர்கள் மற்றும் சிகையலங்கார கலைஞர்ககளின் நிலைமை இன்னும் மோசமானது.

 

“துணை நடிகர்கள் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.” படப்பிடிப்புத் தளங்களில் அவர்களுக்கு கழிவறை வசதிகூடச் செய்து தரப்படுவதில்லை. காலை 9 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 2 மணிவரைகூட அவர்கள் பணிபுரிய வைக்கப்படுவதாக ஹேமா அறிக்கை கூறுகிறது.

 

“நாங்கள் கேள்வி கேட்கிறோம் என்ற உண்மையை எதிர்கொள்ள விரும்பாததால், அவற்றைப் புறக்கணிக்க நினைக்கின்றனர். எனவே, சில உறுப்பினர்கள் மிகவும் கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளனர்,” என்று பீனா பால் தெரிவித்தார்.

 

திரைத்துறையை நிர்வகிப்பதற்கென சட்டம் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண் நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் ஆகியவற்றை அமைக்க வேண்டுமென அந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

 

அரசாங்கத்தைச் சாடும் எதிர்க்கட்சிகள்
 

இந்த அறிக்கை வெளியான உடனேயே, இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை, அறிக்கையை வெளியிடுவதைத் தாமதித்ததாகவும் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

 

முதலமைச்சர் பினராயி விஜயன், அந்த ஆணையத்தின் சில பரிந்துரைகளைச் செயல்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

 

எந்தப் பெண்ணும் காவல் துறையில் புகார் அளித்தால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.

 

மலையாளம் திரைப்பட நடிகையர் சங்கமான ‘அம்மா’, இந்த அறிக்கையில் உள்ளவை குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை. பதில் தெரிவிப்பதற்கு முன்பாக அந்த அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டுமென அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

கேரளாவில் நிகழ்ந்தது எப்படி?
 

திரைப்படங்களுக்காக விமர்சகர்கள், பார்வையாளர்களிடம் இருந்து பாராட்டுகளைப் பெறும் கேரளாவில் இது எப்படி நடந்தது என பிபிசி கேட்டது.

 

புகழ்பெற்ற சினிமா விமர்சகரும் மலையாள சினிமா துறை குறித்து விரிவாகச் செய்தி சேகரித்து வருபவருமான ஆனா எம்.எம். வெட்டிகாட் இதுகுறித்து விளக்கினார்.

 

“தீவிரமான முற்போக்கு தன்மை மற்றும் தீவிரமான ஆணாதிக்கம் இரண்டுமே உள்ள கேரள மாநிலத்தின் நுண் உலகமாக மலையாள சினிமா திகழ்கிறது. இது மலையாளம் சினிமாவிலும் பிரதிபலித்துள்ளது. ஆணாதிக்கத்தை ஆய்வு செய்யும் சிறந்த இந்திய திரைப்படங்கள் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. அதே மலையாள சினிமாவில் பிற்போக்கான படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. அப்படியான சூழலில், படைப்புத் துறையில் பெண் வெறுப்பாளர்கள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பெண்களைச் சுரண்டுவது ஆச்சர்யம் அளிக்கவில்லை. அதேநேரம், இதே துறையில் சமத்துவத்திற்காகப் பெரியளவிலான பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

 

மாற்றம் நிகழுமா?
 

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் இயக்குநர் ஜியோ பேபி பிபிசி இந்தியிடம் கூறுகையில், “சில மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், பாலினம் காரணமாக அவர்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அதைத் தீர்ப்பதற்கான சரியான நேரம் இது. அதற்கு திரைத்துறை ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.

 

“ஒரே இரவில் மாற்றத்தை எதிர்பார்ப்பது தவறானது” என்பதில் உறுதியாக இருக்கிறார் பீனா பால்.

 

“மனோபாவத்தில் முதலில் மாற்றம் வரவேண்டும், அது மெதுவாகத்தான் நிகழும். ஆனால், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும், மற்றவர்களை இந்தத் தொழிலில் நுழைய ஊக்குவிக்கவும் ஓர் அமைப்பை ஏற்படுத்தலாம்’’ என்றார்.

 

ஆனா எம்.எம். வெட்டிகாட் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், “மலையாளத் திரையுலகில் ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துபவர்கள், பெண்கள் உரிமை இயக்கத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக் கடுமையாக முயன்றனர். ஆனால் WCC நம்ப முடியாத எதிர்ப்பைக் காட்டியதோடு கணிசமான மக்கள் ஆதரவையும் பெற்றுள்ளது. அதனால்தான் ஹேமா ஆணையத்தின் அறிக்கை நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை நம்புவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என்றார்.

 

அவர் கூறுகையில், “சமூக மற்றும் நிறுவன முன்னேற்றம் ஒருபோதும் ஒரே இரவில் நடக்காது, அதற்கான பாதை இன்னும் நீண்டது. ஆனால் இத்துறையைச் சேர்ந்த சிலரின் பதில்களில் உள்ள தற்காப்புத்தன்மை மற்றும் இந்த வாரம் பத்திரிகைகளில் மேற்கோள் காட்டப்பட்ட பிறரின் எதிர்வினைகள் அவர்கள் மாற்றத்தை உணர்ந்திருப்பதைக் காட்டுகிறது. அவர்களின் அசௌகரியம் ஒரு நேர்மறையான அறிகுறி” என்றார்.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளியில் சத்தம்போட்ட மாணவர்களை கண்டிக்க போலீசாரை வரவழைத்த ஆசிரியர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!