Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடக்நாத் கோழி: பிராய்லர், நாட்டுக்கோழிகளை விட அதிக நோய் எதிர்ப்பு மற்றும் ஆண்மை சக்தி தருமா?

Advertiesment
Kadaknath Chicken

Prasanth Karthick

, புதன், 21 ஆகஸ்ட் 2024 (12:25 IST)

கடக்நாத் கோழி அல்லது கருங்கோழி என அறியப்படும் ஒரு வகை நாட்டுக்கோழி வகை பற்றிக் கடந்த சில ஆண்டுகளில் நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம்.

 

 

இந்தக் கோழியைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது போன்ற கருத்துகளையும் சமூக ஊடகங்களில் படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம்.

 

முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா மாநிலங்களில் மட்டுமே அதிகம் காணப்பட்ட இந்தக் கோழி இனம், இப்போது இந்தியா முழுக்கப் பரவலாக காணப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபுவா என்ற பகுதியில் கிடைக்கும் கருங்கோழி இறைச்சிக்குக் கடந்த 2012ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு அளிக்கப்பட்டது.

 

கருங்கோழி என்ற பெயர் வருவதற்கு முக்கியக் காரணமே அதன் கருமை நிறம்தான். கருமை என்றால் அதன் இறகுகளோ, கொண்டையோ மட்டுமல்ல. கோழியின் மொத்த உடலுமே கருப்புதான் என்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முனைவர் ப.குமரவேல்.

 

முட்டைகளை அடைகாக்க முடியாத கருங்கோழிகள்

கருங்கோழி என்று தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் கடக்நாத் கோழியின் “இறகுகள் மட்டுமின்றி, அதன் கொண்டை, கண்கள் முதல் அதன் மற்ற உறுப்புகள் வரை அனைத்துமே கருமை நிறத்தில்தான் இருக்கும். அவ்வளவு ஏன், அதன் ரத்தம் கூட கருஞ்சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். மற்ற நாட்டுக்கோழிகளின் எலும்பு மஞ்சள் நிறத்திலானது என்றால், இவற்றின் எலும்புகள் கருமஞ்சள் நிறத்தில் இருக்கும்,” என்று விவரிக்கிறார் முனைவர்.குமரவேல்.

 

பெருவாரியான நாட்டுக்கோழி வகைகளைப் போல் இந்தக் கோழி இனத்தில் இருக்கும் கோழிகள் அனைத்துமே அடைகாக்கும் பழக்கம் கொண்டவை கிடையாது என்கிறார் முனைவர் குமரவேல்.

 

அவரது கூற்றுப்படி, நாட்டுக் கோழிகள் அனைத்துமே முட்டையை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் தன்மை கொண்டவை. ஆனால், “இந்தக் கோழிகளைப் பொருத்தவரை. மற்ற நாட்டுக் கோழிகளைப் போல் முட்டையிட்ட பிறகு எல்லா சூழ்நிலைகளிலும் முட்டை மீது அமர்ந்து அடைகாப்பதில்லை. அவற்றுக்காகவே அடைகாக்கும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன" என்கிறார் அவர்.

 

கடந்த 23 ஆண்டுகளாகக் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் தமிழ்செல்வன் இந்தக் கூற்றை ஆமோதிக்கிறார்.

 

ஓர் ஆண்டுக்கு 180 முட்டைகள் வரை கருங்கோழிகள் இட்டாலும்கூட மற்ற கோழி வகைகளுடன் ஒப்பிடுகையில் அடை காப்பது என்பது சற்றுக் குறைவுதான் என்கிறார் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் வெண்ணாங்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன்.

 

ஆகையால், “சில நேரங்களில் அவற்றின் முட்டைகளை அடைகாக்க மற்ற நாட்டுக் கோழிகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். அல்லது அதற்காக இன்குபேட்டர் இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்,” என்கிறார் அவர்.

 

இன்குபேட்டர் இயந்திரம், தாய்க்கோழி அடை காக்கும்போது இருக்கும் சூழலை முட்டைக்கு வழங்கி குஞ்சு பொறிக்க வைக்கும் செயல்முறையை மேற்கொள்ளும். இந்தச் செயல்முறையில் தாய்க்கோழி தொடர்ச்சியாக முட்டையை சுமார் 36% செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருப்பது போலவே இயந்திரமும் முட்டையை வைத்திருந்து குஞ்சு பொறிக்க வைக்கும்.

 

கடக்நாத் கோழியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா?

 

“இந்தக் கோழி இந்திய நாட்டுக்கோழி இனங்களில் ஒன்று. இவற்றுக்கான வளர்ப்பு முறையைப் பொறுத்தவரை, பண்ணை முறையைவிட மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது அதிக நோய் எதிர்ப்புத் திறனுடன் வளர்கின்றன, நல்ல லாபம் கிடைக்கும்.

 

அதன்படி பார்த்தால், பொதுவாக 1000 கோழிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் கண்டிப்பாக வேண்டும். அதில் அவற்றை இயற்கையான மேய்ச்சலில் விட்டு வளர்க்கும் போதுதான் ஆரோக்கியமானவையாக வளரும்,” என்கிறார் விவசாயி தமிழ்செல்வன்.

 

கருக்கோழிகளைப் பொறுத்தவரை, “முட்டையிடும் பருவத்தை அடைய 23 முதல் 28 வாரங்கள் வரை ஆகும். அவற்றை ஐந்து முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு விற்பனைக்குக் கொண்டு செல்லலாம்,” என்கிறார் அவர்.

 

கடக்நாத் இறைச்சியின் ஊட்டச்சத்து குறித்து தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு, அவற்றில் கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் இரும்புச் சத்து அதிகமாகவும் இருப்பதாகக் கூறுகிறது.

 

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் தரவுகள்படி, கடக்நாத் எனப்படும் கருங்கோழியில் 1.94% முதல் 2.6% வரை கொழுப்பு இருக்கும். ஆனால், பிராய்லர் கோழியில் 13 முதல் 25 சதவீதம் வரை கொழுப்பு இருக்கும்.

 

கருங்கோழி இறைச்சியில் 100 கிராமுக்கு 59-60 மி.கி. கொழுப்பும், பிராய்லர் கோழியில் 100 கிராமுக்கு 218.12மி.கி. கொழுப்பும் இருக்கும்.

 

கடக்நாத் கோழிகளின் கருமை நிறத்திற்குக் காரணமாக முனைவர் குமரவேல் கூறுவது அவற்றில் இருக்கும் அதீத அளவிலான நிறமிகள்தான்.

 

பொதுவாக உடலில் கருமை நிறத்திற்குக் காரணமாக இருப்பது மெலனின்(Melanin) எனப்படும் நிறமி. "இந்த நிறமி கருங்கோழியின் உடலில் அதிகளவில் இருப்பதே அவற்றின் உடலின் மேல்புறத்தில் இருந்து ரத்தம் மற்றும் எலும்பு வரைக்கும் கருமையாக இருப்பதற்குக் காரணம்,” என்கிறார் அவர்.

 

ஆனால், அவற்றின் உடலில் மற்ற கோழிகளைவிட அதிக நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதற்கு அதீத மெலனின் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்பட்டாலும், அது இன்னும் ஆதாரப்பூர்வமாக முழுதாக நிரூபிக்கப்படவில்லை என்கிறார்.

 

அதேபோல், இந்தக் கோழிகளைச் சாப்பிடுவதால் ஆண்மை அதிகரிக்கும் என்ற கூற்றுக்கும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்கிறார் அவர்.

 

‘காலநிலை மாற்றங்களைச் சமாளிக்கும்’

 

இந்தக் கோழிக்காக வழங்கப்பட்ட புவிசார் குறியீடு தொடர்பான தரவுகள் இவை எந்தவித தீவிர காலநிலைகளிலும் உயிர் வாழக் கூடியவை என்று கூறுகின்றன.

 

அதில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்த உயிரினம் தீவிர தட்பவெப்ப நிலைகளையும் தாங்கி வளரக்கூடியது. அதீத வெப்பம், அதீத குளிர் போன்ற சூழ்நிலைகளிலும் அதிக அழுத்தங்களுக்கு உட்படாமல் இவை வாழப் பழகிக்கொண்டுள்ளன.

 

அதுமட்டுமின்றி, “சுற்றுப்புறம், சுகாதாரம், ஊட்டச்சத்துகளுக்கான கூடுதல் உணவுகள் போன்ற குறைந்தபட்ச நிர்வாகத் தேவைகள் இல்லாதபோதும்கூட இவை செழித்து வளர்வதாக” புவிசார் குறியீடு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

 

இருப்பினும், கருங்கோழிகள் மத்தியில் வளர்ச்சி வேகம் மெதுவாக இருப்பதோடு, இவற்றின் உடல் அளவு சிறிதாகவும் பாலியல் முதிர்ச்சி தாமதமாகவும் இருப்பதாக புவிசார் குறியீடு ஆவணம் கூறுகிறது.

 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ-வின் கிளை அமைப்பான, டி.ஐ.ஹெச்.எ.ஆர் (DIHAR), கடந்த 2022ஆம் ஆண்டு நடத்திய ஓர் ஆய்வில், கருங்கோழியில் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவப் பயன்கள் அதிகம் என்று கூறுகிறது.

 

மேலும், “இதை அதிக உயரத்திலுள்ள நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான மிகச் சிறந்த உணவு எனவும், அதன் இறைச்சியின் கடினத்தன்மை, நோய் எதிர்ப்பு, ஊட்டச்சத்து நன்மைகள், லடாக் போன்ற கடுமையான காலநிலைகளைக் கொண்ட நிலப்பகுதிகளில் வளர்ப்பதற்குக்கூட பரிந்துரைக்கப்படுகிறது” என்று அந்த ஆய்வு கூறுகிறது.

 

லடாக் போன்ற மலைப்பாங்கான உயர்ந்த இடங்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் கருங்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

 

இதன் மூலம், கருங்கோழிகள் எந்தவித தட்பவெப்ப நிலையிலும் வாழக்கூடியவை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

 

கருங்கோழிகள் காட்டில் வாழ்ந்தவையா?

 

பொதுவாக, இந்தக் கோழிகள் காட்டில் வாழ்ந்ததாகவும் அவை கடந்த நூற்றாண்டில்தான் வளர்ப்புக் கோழியாக மாற்றப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், இது நிரூபிக்கப்பட்ட கூற்று இல்லையென்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

 

அதாவது, காட்டுக் கோழியாக இருந்த கருங்கோழிகள் முதலில் மத்திய பிரதேச பழங்குடி மக்களால் உணவுக்காகப் பிடிக்கப்பட்டதாகவும் பின்னர் இதன் நன்மைகளை உணர்ந்து, அது வளர்ப்புக் கோழியாக மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படும் கூற்று ஏற்புடையதாக இல்லை என்று காட்டுயிர் மற்றும் கால்நடை வல்லுநர்கள் சிலரிடம் பேசியபோது தெரிவித்தனர்.

 

கடைசியாக மனிதர்கள் மத்தியில் வளர்ப்பு உயிரினமாக மாற்றப்பட்டது பறவைகள்தான் என்றாலும், அதுவும் சுமார் 2,000-2,500 ஆண்டுகளுக்கு முன்புதான் கடைசியாகப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

 

“இந்தியாவில் உள்ள நாட்டுக் கோழி இனங்கள் அனைத்துக்குமே மூலமாகக் கருதப்படுவது, தற்போது காடுகளில் காணப்படும் சிவப்புக் காட்டுக்கோழி (Red Jungle Fowl) என்ற காட்டுக்கோழி இனம்தான். இருப்பினும், அவற்றில் இருந்து தற்போது வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் பிரிந்து வந்து பல்லாண்டு காலம் ஆகிவிட்டது,” என்கிறார் முனைவர்.குமரவேல்.

 

அவரது கூற்றுப்படி, கடக்நாத் மட்டுமில்லை, மொட்டைக் கழுத்துக் கோழி, அசில் கோழி (சண்டைக் கோழி) என்று அனைத்து வகையான நாட்டுக் கோழிகளுமே இந்த சிவப்புக் காட்டுக் கோழியில் இருந்து பிரிந்து வந்தவைதான்.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குரங்கம்மை தொற்றுக்கு தடுப்பூசி தயாரிப்பு.! சீரம் இந்தியா நிறுவனம் தகவல்..!