Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்வான் தாக்குதலில் 5 பேர் மரணம்: முதல் முறையாக ஒப்புக் கொண்ட சீன ராணுவம்

Advertiesment
கல்வான் தாக்குதலில் 5 பேர் மரணம்: முதல் முறையாக ஒப்புக் கொண்ட சீன ராணுவம்
, வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (14:22 IST)
சீனாவின் அரசு நாளிதலான குளோபல் டைம்ஸ், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் அதிகாரபூர்வ நாளிதழ் பி.எல்.ஏ டெய்லியை மேற்கோள் காட்டி, சீனா முதல் முறையாக கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களைக் குறிப்பிட்டிருக்கிறது.

சீனாவின் மத்திய ராணுவ ஆணையம், காரகோரம் மலைத் தொடரில் ஐந்து சீன ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களைக் அடையாளம் கண்டு கெளரவித்திருக்கிறது என பி.எல்.ஏ டெய்லி பத்திரிகையில் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டுள்ளது.
 
முதல் முறையாக சீனா கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதல் தொடர்பாக அவ்வறிக்கையில் விரிவாக விளக்கம் கொடுத்திருக்கிறது. அதோடு இந்திய  ராணுவம் எப்படி அதிக அளவில் துருப்புகளை அனுப்பியது என்றும், இந்திய துருப்புகள் மறைந்து கொண்டு சீன ராணுவத்தை பின்வாங்கக் கட்டாயப்படுத்தியது  எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
 
அதே அறிக்கையில், சீன ராணுவ வீரர்கள் மீது இந்திய துருப்புகள் கற்களைக் கொண்டும், இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்கும் போதும், தங்கள் நாட்டின் இறையாண்மையை சீன வீரர்கள் எப்படிக் காத்தார்கள் எனவும் விவரித்திருக்கிறது சீனா.
 
"கடந்த ஏப்ரல் 2020 முதல், அந்நிய சக்திகள் தொடர்ந்து முந்தைய ஒப்பந்தங்களை மீறி, எல்லைகளைக் கடந்து வந்து சாலை மற்றும் பாலங்கள் போன்ற கட்டுமானங்களை நிர்மாணிக்கத் தொடங்கியது, பேச்சு வார்த்தைக்கு அனுப்பிய சீன துருப்புகள் மீதும் தாக்குதல் நடத்தியது" என பி.எல்.ஏ டெய்லி அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சென் சியான்க்ராங் என்கிற சீன ராணுவ வீரர் தன் டைரியில், "எதிரிகள் அதிக அளவில் இருந்த போதும் நாங்கள் விட்டுக் கொடுக்கவில்லை. அவர்களைப் பின்  வாங்க வைத்தோம்," என எழுதியிருந்ததைக் குறிப்பிட்டிருந்ததாக பி.எல்.ஏ டெய்லி தெரிவித்துள்ளது.
 
கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதல்
 
கடந்த 2020 ஜூன் 15-ல் கிழக்கு லடாக்கில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், இந்தியா மற்றும் சீன துருப்புகளுக்கு இடையில் ஒரு பெரிய கைகலப்பு  நடந்தது.
 
கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியா சீன எல்லை விவகாரத்தில் நடந்த மிகப் பெரிய கைகலப்பு அது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் இறந்து  போனார்கள். இந்தியா தன் தரப்பில் ஏற்பட்ட வீரர்களின் உயிரிழப்பு குறித்த விவராங்களை அப்போதே வெளியிட்டது. ஆனால் சீனா தன் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை.
 
சீனாவுக்கு சேதாரங்கள் ஏற்பட்டிருக்கும் என இந்திய தரப்பு தான் கூறியது. ரஷ்யாவின் செய்தி முகமையான டாஸ், சீன தரப்பில் 45 வீரர்கள் இறந்திருக்கலாம் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
 
சமீபத்தில் தான் இந்தியா மற்றும் சீனா என இருதரப்புமே பின்வாங்க முடிவு செய்தது. இந்த நேரத்தில், சீனா, இந்தியாவை விடக் குறைவான வீரர்களைத் தான்  கல்வான் பள்ளத்தாக்கு கைகலப்பில் இழந்திருக்கிறது என்பதைக் காட்டும் விதத்தில் தற்போது வாய்திறந்து ஐந்து வீரர்கள் இறந்திருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Drishyam - 2: திரை விமர்சனம்