இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ மற்றும் வெளியுறவு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவை மீறி, கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் தங்களை தூண்டும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
ஆகஸ்டு 29 மற்றும் 30 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், ஏற்கனவே இருக்கும் நிலையை மாற்றும் முயற்சிகளில் சீன ராணுவம் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாங்கோங் த்சோ ஏரியின் வடக்கு கரையோரத்தில் நடந்த சீன ராணுவத்தின் இந்த முயற்சியை இந்தியப்படையினர் முறியடித்ததாகவும், சீன ராணுவம் தன்னிச்சையாக அங்கிருக்கும் சூழலை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டால் அதை தடுக்கும் விதத்தில் தங்களது நிலையை வலிமைப்படுத்தி கொண்டதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை மூலமாக அமைதியை நிலைநாட்ட இந்திய ராணுவம் உறுதி கொண்டுள்ள அதே சூழலில் தங்களது பிராந்தியத்தை காக்கவும் உறுதி ஏற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்காக பிரிகேட் கமாண்டர் மட்டத்திலான கொடி சந்திப்பு எல்லையில் உள்ள சுஷூலில் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.