Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமானுஜர் சிலை: இந்தியாவின் 2வது உயரமான சிலையின் சிறப்பு என்ன?

Advertiesment
ராமானுஜர் சிலை: இந்தியாவின் 2வது உயரமான சிலையின் சிறப்பு என்ன?
, சனி, 5 பிப்ரவரி 2022 (14:10 IST)
ஹைதராபாத் புறநகரில் உள்ள முச்சிந்தலா கிராமத்தில் ஷம்ஷாபாத் விமான நிலையம் அருகே ராமானுஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இது குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது உயரமான சிலை என்றும், உலகின் 26வது பெரிய சிலை என்றும் கூறப்படுகிறது.
 
'சமத்துவத்துக்கான ராமானுஜர் சிலை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையின் பயன்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று மாலை 5 மணியளவில் தொடங்கவுள்ள நிகழ்வின்போது தொடங்கி வைக்கவுள்ளார்.
 
தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் புகழ்பெற்ற ஸ்ரீ வைஷ்ணவ பீடாதிபதி திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமி தனது ஆசிரம வளாகத்தில் கட்டுகிறார். இத்திட்டத்திற்கான முன்மொழிவுகள் 2014 முதல் தொடங்கியிருந்தாலும், 2021ஆம் ஆண்டு முழு திட்டமும் நிறைவடைந்தது.
 
விசிஷ்டாத்வைத கோட்பாட்டாளரான ராமானுஜரின் 1000வது பிறந்தநாளை விழாவின் போது, இந்த சிலை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
 
ராமானுஜர் இந்து பக்தி வழிபாட்டு மரபில் ஒரு முன்னோடியாவார். இவர் 1017 முதல் 1137 வரையிலான ஆண்டுகளில் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது.
 
இவர் விசிஷ்டாத்துவைதத்தை முன்வைத்தவர். இவரைப் பின்பற்றுபவர்கள் ஸ்ரீ வைணவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
 
ராமானுஜர் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர். காஞ்சிபுரத்தில் கல்வி பயின்றவர் இவர். காஞ்சிபுரம் வரதராஜ சுவாமியின் பக்தர் இவர்.
 
இவரது சமய நடவடிக்கைகள் பெரும்பாலும் ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டிருந்தன. இவரது கல்லறை ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி கோயிலில் உள்ளது.
 
சில கோயில்களில் தலித்துகள் நுழைவது, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களை கோயில் அர்ச்சகர்கள் ஆக்கியது, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களை வைணவத்துக்குள் கொண்டு வந்தது உள்ளிட்டவற்றில் இவர் பங்காற்றியுள்ளார்.
 
சிலையின் சிறப்பம்சங்கள்:
இந்த ராமானுஜர் சிலையின் உயரம் 108 அடி. இதன் மேடையின் மொத்த உயரம் 54 அடி மற்றும் பத்ம பீடத்தின் உயரம் 27 அடி. அந்த இடத்திற்கு பத்ரபீடம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
கீழே உள்ள பீடத்துடன் சேர்த்து இந்த சிலை 216 அடி உயரம் உள்ளது. பீடத்தில் 54 தாமரை இதழ்கள், அவற்றின் கீழ் 36 யானை சிற்பங்கள், அல்லி இதழ்களில் 18 சங்குகள், 18 சக்கரங்கள், சிலைக்கு அருகில் ஏற 108 படிகள் ஆகியவை உள்ளன.
 
பல்வேறு திராவிட சாம்ராஜ்யங்களின் சிற்ப பாணிகளின் கலவையாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. விரல் நகங்களிலிருந்து 135 அடி உயரமுள்ள பிரமாண்டமான மந்திரக்கோல் வரை இந்த சிலையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையில் ராமானுஜர் தியான நிலையில் காட்சியளிக்கிறார்.
 
பீடத்தின் மேலே உள்ள முக்கிய சிலை அல்லாமல், பத்ரபீடத்தில் 120 கிலோ எடையுள்ள தங்க சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. ராமானுஜாச்சாரியார் 120 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படுவதால், அதே கிலோ எடையுள்ள தங்கச் சிலையை நிறுவிவுள்ளனர்.
 
இந்த பிரம்மாண்ட சிலை தவிர, மேலும் 108 சிறிய கோயில்கள் அங்கு கட்டப்படுகின்றன. இந்த மொத்த 108 கோயில்களை, ஸ்ரீ வைஷ்ணவ சமூகப் பிரிவினர், இதனை விஷ்ணு மற்றும் விஷ்ணுவின் அவதாரங்களின் 108 திவ்ய தேசங்களாகக் கருதுகின்றனர்.
 
திவ்ய தேசங்களில் உள்ள மாதிரி கோயில்கள் இங்கு கட்டப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக, கற்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்புகள் ஹோய்சாலக் (Hoyasala) கட்டடக்கலை பாணியில் உள்ளன. இங்கு மொத்தம் 468 தூண்கள் உள்ளன. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிற்பிகளும் வல்லுனர்களும் இதற்காகப் பணியாற்றினர்.
 
இந்த சிலைகள் தவிர, ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தொகுப்புகள் உள்ள இடம், வேத நூலகம், அறிஞர் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கான அரங்கம், ஆம்னி மேக்ஸ் திரையரங்கம் ஆகியவை உள்ளன. அங்கு இசை நீரூற்று (musical fountain) அமைக்கப்பட்டு வருகிறது. ராமானுஜ சிலைக்கு அபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்படும்!