Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டயானா- ' மக்கள் இளவரசி' மறைந்து 25 ஆண்டுகள்

டயானா- ' மக்கள் இளவரசி' மறைந்து 25 ஆண்டுகள்
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (22:36 IST)
இளவரசி டயானா இறந்து ஆகஸ்ட் 31, 2022-உடன் இருபத்து ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் வாழ்வின் சில தருணங்களில் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பை வழங்குகிறோம்.
 
 
டயானா ஃபிரான்ஸஸ் ஸ்பென்சர் 1961ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் நாள் , நார்ஃபோக்கில் பிறந்தார். ஆல்தோர்ப்பின் வைகவுண்ட் மற்றும் வைகவுண்டஸ்ஸிற்க்கு இளைய மகளாக பிறந்தார் டயானா.
 
 
அவரின் பெற்றோரின் விவாகரத்திற்கு பிறகு நார்தம்டர்ஷையர் மற்றும் ஸ்காட்லாந்தில் இருந்த அவர்களின் வீடுகளுக்கு மத்தியில் அடிக்கடி பயணம் செய்ய வேண்டி இருந்தது.
 
 
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு அவர் லண்டனின் நைட்ஸ்ப்ரிட்ஜில் உள்ள கிண்டர்கார்டனில் , ஆயாவாகவும், சில சமயங்களில் சமையல்காரராகவும் பின் உதவியாளராகவும் பணிபுரிந்தார் டயானா.
 
 
வேல்ஸ் இளவரசரிடம் அவருக்குள்ள நட்பு தீவிரமாக மாறிவருவதாக வதந்திகள் பரவின. பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் அவர் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்தன; அவர் வேலையில் தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பு குறைந்தது. இந்த யூகங்களைக் குறைக்க அரண்மனையும் முயற்சி செய்தது ஆனால் அதில் பலனில்லை.

 
1981ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, அதிகாரபூர்வ நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த மோதிரத்தின் மதிப்பு 30,000 பவுண்ட் ஆகும். மேலும் அதில் நீலக்கல் சூழ 14 வைரங்கள் இருந்தன.

 
1981ஆம் ஆண்டு தூய பால் தேவாலயத்தில் லேடி டயானா தனது தந்தை ஏர்ல் ஸ்பென்சருடன் திருமண மேடையில் நடந்து வந்தார். அவரின் ஆடை டேவிட் மற்றும் எலிசபெத் இம்மானுவேல் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. 10 மீட்டர் நீளம் கொண்ட அந்த திருமண கவுன் டஃபேட்டா மற்றும் பழங்கால லேசால் ஆனது.
 
 
அச்சமயத்தில் டயானாவிற்கு வெறும் 20 வயது. தாயின் மேற்பார்வை, தந்தையின் அரவணைப்பு ஆகியவற்றிற்கு மத்தியில் டயானா தனது திருமண உறுதி மொழிகளை எடுத்தார். கணவரின் பெயரை சரியான வரிசையில் நினைவு கூரும் ஒரு தருணத்தில் மட்டும்தான் சற்று பதற்றப்பட்டார் டயானா.
 
 
மில்லியன் கணக்கானவர்கள் தொலைக்காட்சியில் அந்த திருமணத்தை கண்டு களித்தனர். மேலும் 6 லட்சம் பேர் பங்கிங்காம் அரண்மனையிலிருந்து தேவாலயம் வரை வழி நெடுக நின்றிருந்தனர்.
 
 
டயானா மற்றும் சார்லஸ் தங்களது தேனிலவை பிரிட்டானியா என்ற உல்லாச கப்பலில் கழித்தனர். அக்கப்பல் 12 நாள் பயணமாக கப்பல் மத்திய தரைக்கடல் வழியாக எகிப்திற்குச் சென்றது; பின் அவர்கள் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரச மாளிகையில் தங்கினர்.
 
 
டயானா எப்போதும் ஒரு பெரிய குடும்பத்திற்காக ஏங்கினார். டயானவின் திருமணம் நடந்த ஒரு வருடத்திற்கு பிறகு 1982ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி, ஒரே வருடத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அவர்தான் இளவரசர் வில்லியம். மகுடத்திற்கான இரண்டாவது இடத்தில் இளவரசர் வில்லியம் இருக்கிறார்.

 
ராஜ குடும்பம் அனுமதிக்கும் பட்சத்தில் தனது குழந்தைகளுக்கு ஒரு சாதரண வளர்ப்பை வழங்க வேண்டும் என்று விரும்பினார் டயானா. வில்லியம் நர்சரிக்குச் சென்றார். நர்சரிக்குச் சென்ற ராஜ குடும்ப முதல் ஆண் வரிசு இவரே ஆவார். டயானாவின் குழந்தைகள் தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் வைத்து கல்வி கற்காமல் பிற குழந்தைகளுடன் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.
 
 
1984ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வில்லியமிற்கு தம்பி பிறந்தார். அவருக்கு ஹென்றி என்று பெயர் சூட்டப்பட்டாலும் இளவரசர் ஹாரி என்று அழைக்கப்படுகிறார்.
 
 
இளவரசி டயானா மிக விரைவில் ராஜ குடும்பத்தின் கடமைகளில் ஈடுபடத் தொடங்கினார். நர்சரிகளுக்கும், பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் அடிக்கடி விஜயம் மேற்கொண்டார். மக்களுடன் விரைவாக தன்னை தொடர்புபடுத்திக் கொண்டார் அது மக்களுக்கு மத்தியில் அவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது.

 
 
அமெரிக்காவிற்கான தனது முதல் அதிகாரபூர்வ விஜயத்தை டயானா மேற்கொண்ட போது வெள்ளை மாளிகையில் நடிகர் ஜான் டிரவேல்டாவுடன் நடனம் ஆடினார். டயானாவின் அப்போதைய கணவருடன் சேர்ந்து நிகழ்த்திய முதல் பொது சந்திப்பு ஆக இது இருந்தது. அச்சமயத்தில் டயானாவின் ஆடை மிகுந்த கவனத்தை ஈர்த்தது.

 
டயானாவின் சமூகப் பணிகள் பொது மக்களின் மத்தியில் அவருக்கு புகழை ஏற்படுத்தி கொடுத்தன. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை வெளிக்கொண்டு வந்ததில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. எய்ட்ஸ் குறித்து அவர் வெளிப்படையாக பேசினார். எய்ட்ஸ் குறித்த பல கருத்துகளை அவர் தகர்த்தார். எய்ட்ஸ் நோயாளிகளிடம் கைகுலுக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு அவர்களுடன் பேசுவதாலோ பழகுவதாலோ எந்த பாதிப்பும் இல்லை என்று நிருபித்தார்.
 
 
வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி சேர்ந்து, பல சந்திப்புகளை நிகழ்த்தினர். மேலும் பல வெளிநாட்டுச் சுற்றுலாக்களுக்கும் சென்று வந்தனர். இருப்பினும் 1980ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அவர்கள் தனித்தனியாக வாழ்வது பொதுவெளிக்கு தெரியவந்தது.
 
 
1992ஆம் ஆண்டு இந்தியாவிற்கான அதிகாரபூர்வ விஜயத்தில், `காதல் சின்னமாக` கருதப்படும் தாஜ்மஹாலில் தனியாக அமர்ந்து இருந்தார் டயானா. அதன்மூலம் இளவரசரும் இளவரசியும் அதிகாரபூர்வமாக ஒன்றாக இருந்தாலும், அவர்கள் தனித்து உள்ளனர் என்பது பொதுவெளிக்கு சூட்சகமாக சொல்லப்பட்டது.
 
 
டயானா தனது இரண்டு மகன்களுக்கு அன்பு மிகுந்த தாயாக இருந்தார். டயானா “ஒரு குறும்புக்கார தாயாக” இருந்தார் என்றும் அவரின் “அன்பால் நிச்சயம் தங்களை மூழ்கடித்தார்” என்றும் இளவரசர் ஹாரி தெரிவித்திருந்தார்.
 
 
டயானா தனது வாழ்நாள் முழுவதும் அன்னை தெரேசாவுடன் நெருங்கிய நட்பை கடைப்பிடித்தார். இந்த புகைப்படம் ரோமில் உள்ள கான்வெண்ட் ஒன்றிற்குச் சென்ற போது எடுக்கப்பட்டது. மேலும் டயானா இறந்த ஆறு நாட்களில் அன்னை தெரேசா உயிரிழந்தார்.
 
 
1995ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிபிசியின் மார்டின் பஷிருக்கு குறிப்பிட தகுந்த வகையில் வெளிப்படையான ஒரு நேர்காணலை கொடுத்தார் டயானா. அதில் பேறுகாலத்திற்கு பிறகு ஏற்படும் மன அழுத்தம், இளவரசர் சார்லஸுடனான திருமண முறிவு, மற்றும் ராஜ குடும்பத்துடன் தனக்குள்ள பதற்றமாக உறவு ஆகியவற்றை குறித்து பேசினார்.
 
 
இந்த துயரங்கள் நிறைந்த காலத்திலும் டயானா தனது சமூக சேவையை தொடர்ந்து மேற்கொண்டார். பாகிஸ்தானின் லாகூரில், இம்ரான் கானால் நடத்தப்படும் புற்றுநோய் மருத்துவமனைக்கு ஆதரவு தெரிவிக்க இம்ரான் கானின் அப்போதைய மனைவியாக இருந்த ஜெமைமா கானை சந்தித்தார்.
 
 
1996ஆம் ஆண்டு டயானா மற்றும் சார்ல்ஸின் விவாகரத்து உறுதியானது. விவாகரத்திற்கு பிறகு டயானா அதிகாரபூர்வமாக `வேல்ஸ் இளவரசி` என்ற பெயரை பெற்றார். 1997ஆம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையின் அட்டைப் படங்களில் வெளியான ஆடைகளை அவர் ஏலம் விட்டார். அதன்மூலம் சமூகப் பணிகளுக்காக 3.5மில்லியன் பவுண்ட் சேகரிக்கப்பட்டது. அவரது கடந்த கால மண வாழ்க்கையை முடித்துக் கொள்வதைக் குறியீடாகக் காட்டும் ஒரு செயலாகவும் அது இருந்தது.
 
 
1997ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் தேதி பணக்கார தொழிலதிபரான முகமத் அல் ஃபயீத்தின் மகன், தோதி அல் ஃபயத்துடனான விருந்திற்கு பிறகு ஆடம்பர் வாகனம் ஏறிச் சென்ற , அவரை, புகைப்படக்கலைஞர்கள் பின் தொடர்ந்தனர். இளவரசியின் புதிய தோழரை புகைப்படம் எடுக்க விழைந்து அவர்களை பின் தொடர்ந்து அது விபத்தில் முடிந்தது.
 
 
டயானாவின் இறுதி ஊர்வலத்தில் ஒரு மில்லியனிற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அவரது மகன்கள் வில்லியம் மற்றும் ஹாரி,இளவரசர் சார்ல்ஸ், எடின்பரோ கோமகன், மற்றும் டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் ஆகியோரும் கலந்து கொண்டனர்

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8பேர் பலி!