Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அர்மீனியா - அஜர்பைஜான் ராணுவ மோதல்: ஒருவர் மீது ஒருவர் குண்டு மழை

அர்மீனியா - அஜர்பைஜான் ராணுவ மோதல்: ஒருவர் மீது ஒருவர் குண்டு மழை
, திங்கள், 5 அக்டோபர் 2020 (10:12 IST)
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையான மோதல் ஒரு நாட்டின் பகுதி மீது இன்னொரு நாடு குண்டு வீசித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு மோசமாகியுள்ளது.

அஜர்பைஜான் நாட்டின் இரண்டாவது மிகப்பரிய நகரமான கஞ்சா மீது அர்மீனிய பாதுகாப்பு படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளன.
 
ஒரு குறிப்பிட்ட இலக்கு மீது தாக்குதல் நடத்தாமல், பரவலான நிலைகள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்துவது ஷெல் தாக்குதல் எனப்படும்.
 
குண்டுவீச்சில் இருந்து பொதுமக்கள் தப்பும் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. களத்தில் பிபிசி குழுவும் இருக்கிறது.
 
முதலில் தாக்குதல் நடத்தியது யார்?
 
நாகோர்னோ - காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே. 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் பிரச்சனை கடந்த வாரம் ஆயுத மோதலாக உருவெடுத்தது.
 
நாகோர்னோ - காராபாக் பகுதி அலுவல்பூர்வமாக அஜர்பைஜான் நாட்டுக்கு சொந்தமானது. ஆனால், அப்பகுதி அர்மீனிய இனத்தவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து  வருகிறது.
 
தங்கள் பிராந்திய தலைநகரான ஸ்டெப்பன்க்யர்ட் அஜர்பைஜான் படையினரால் ஷெல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதால் தாங்கள் கஞ்சா நகரில் உள்ள ராணுவ  விமானநிலையம் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக, தங்களைத் தாங்களே தன்னாட்சி அரசாக அறிவித்துக்கொண்டுள்ள நாகோர்னோ - காராபாக் பகுதி நிர்வாகம்  தெரிவித்துள்ளது.
 
எனினும் தங்கள் ராணுவ நிலைகள் எதுவும் தாக்கப்படவில்லை என்று அஜர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.
 
சோவியத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது நாகோர்னோ - காராபாக் பகுதி மக்கள் அர்மீனியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து வாக்களித்தனர்.
 
அது சோவியத்தின் குடியரசுகளாக அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இருந்தபோதும், சோவியத் ஒன்றியம் உடைந்த பின்னரும் 1988 முதல் 1994 வரையிலான போருக்கு வழிவகுத்தது.
 
1988 - 1994 காலகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் நடந்த போரில் குறைந்தது 30,000 பேர் கொல்லப்பட்டனர். பல லட்சம் பேரைத் தங்கள் பூர்விக இடங்களில் இருந்து வேறு இடத்துக்கு செல்லும் நிலைக்கு அந்தப் போர் தள்ளியது.
 
1994இல் இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்ட பிறகு தற்போது நிகழும் மோதல்தான் மிகப்பெரிய மோதலாக உள்ளது.
 
இருநாடுகளுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் செய்ய வைக்க சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் மேற்கொள்ளும் முயற்சி இதுவரை தோல்வியையே  சந்தித்து வருகிறது.
 
அர்மீனியா - அஜர்பைஜான் மோதல்: கொல்லப்பட்டது எத்தனை பேர்?
 
இதுவரை சமீபத்திய மோதலில் இரு தரப்பிலும் குறைந்தது 220 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இரு தரப்பிலும் பாதிப்பு எவ்வளவு என்பது சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை என்பதால் உண்மையான பலி எண்ணிக்கை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இதுவரை உறுதியாகியுள்ள 220 என்பதை விட அது அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
 
கடந்த ஞாயிறன்று ஏழு நாகோர்னோ - காராபாக் பகுதி கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அஜர்பைஜான் தெரிவித்துள்ளது. எனினும்,  தாங்கள் தொடர்ந்து முன்னேறி வருவதாக நாகோர்னோ - காராபாக் தன்னாட்சி பகுதி அரசு தெரிவிக்கிறது.
 
அர்மீனியா - அஜர்பைஜான் இடையே என்ன பிரச்சனை?
 
மலைகள் சூழ்ந்த பகுதியான நாகோர்னோ - காராபாக் பகுதிகள் யாருக்குச் சொந்தம் என்பதுதான் பிரச்சனை.
 
இது குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள இரண்டு தசாப்தங்கள் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.
 
அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா ஆகிய இருநாடுகளும், ஒருங்கிணைந்த சோவித் ஒன்றியத்தின் பகுதிகளாகக் கடந்த காலங்களில் இருந்து வந்தன.
 
1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றிய கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பிறகு, அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவை தனித்தனி நாடுகளாக உருவாகின.
 
இதில் அர்மீனியாவில் கிறிஸ்துவ மதத்தினரும், எண்ணெய் வளம் மிகுந்த அஜர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர்.
 
இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள நகோர்னோ-கராபக் என்ற சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில், 1988ம் ஆண்டு முதல் மோதல் நடைபெற்று வருகிறது. 1994ஆம் ஆண்டு இந்த சண்டை முடிவுக்கு வந்தது.
 
இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர், மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.
 
போரில் முடிவில் அந்த நாகோர்னோ - காராபாக் பகுதிகள் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் பிரிவினைவாத அர்மீனிய இனத்தவர்களால் இந்தப் பகுதி கட்டுப்படுத்தப்படுகிறது. அர்மீனிய அரசு இவர்களைக் கட்டுப்படுத்துகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளக்குறிச்சி எம் எல் ஏ சாதி மறுப்பு திருமணம்… வைரலாகும் புகைப்படம்!