Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அர்மீனியா - அஜர்பைஜான் ராணுவ மோதல்: முன்னாள் சோவியத் நாடுகள் சண்டையிடுவது ஏன்?

அர்மீனியா - அஜர்பைஜான் ராணுவ மோதல்: முன்னாள் சோவியத் நாடுகள் சண்டையிடுவது ஏன்?
, செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (14:07 IST)
முன்னாள் சோவியத் நாடுகளான அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா ஆகியவற்றின் படைகளுக்கு இடையே நடைபெற்ற தாக்குதலில் டஜன் கணக்கான பேர்  கொல்லப்பட்ட நிலையில், இருநாடுகளிலும் சில பகுதிகளில் ராணுவச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

நாகோர்னோ - காராபாக் எனும் மலைப்பகுதி ஒன்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் மோதல், சமீபத்திய இந்த போரைத் தூண்டியுள்ளது,
 
இருநாடுகளும் உடனடியாக சண்டை நிறுத்தம் செய்ய வேண்டும் என்கிறது ஐநா. இரு நாடுகள் இடையேயான போர் பதற்றத்தைத் தணிப்பதற்கு அமெரிக்கா முன்வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 
இரு நாட்டு ராணுவத்திற்கு இடையே திங்கட்கிழமை நடந்த சண்டையில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
 
நாகோர்னோ - காராபாக் பகுதி நிர்வாகம் 80 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாகத் தெரிவித்து உள்ளது.
 
இரு நாடுகள் இடையே என்ன பிரச்சனை?
 
மலைகள் சூழ்ந்த பகுதியான நாகோர்னோ - காராபாக் பகுதிகள் யாருக்குச் சொந்தம் என்பதுதான் பிரச்சனை.
 
இது குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள இரண்டு தசாப்தங்கள் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.
 
அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா ஆகிய இருநாடுகளும், ஒருங்கிணைந்த சோவித் ஒன்றியத்தின் பகுதிகளாகக் கடந்த காலங்களில் இருந்து வந்தன.
 
1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றிய கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பிறகு, அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவை தனித்தனி நாடுகளாக உருவாகின.
 
இதில் அர்மீனியாவில் கிறிஸ்துவ மதத்தினரும், எண்ணெய் வளம் மிகுந்த அஜர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர்.
 
இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள நகோர்னோ-கராபக் என்ற சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில், 1988ம் ஆண்டு முதல் மோதல் நடைபெற்று வருகிறது. 1994ஆம் ஆண்டு இந்த சண்டை முடிவுக்கு வந்தது.
 
இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர், மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.
 
போரில் முடிவில் அந்த நாகோர்னோ - காராபாக் பகுதிகள் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் பிரிவினைவாத அர்மீனிய இனத்தவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. அர்மீனிய அரசு இவர்களைக் கட்டுப்படுத்துகிறது.
 
பிரச்சனைக்குக் காரணமான நாகோர்னோ - காராபாக் பகுதி
 
மலைப் பகுதியான இதன் பரப்பளவு 4400 சதுர கிலோமீட்டர்கள்
 
கிறிஸ்தவ அர்மீனியர்களும், துருக்கிய இஸ்லாமியர்களும் இங்கு வசிக்கின்றனர்.
 
அஜர்பைஜானின் ஒரு பகுதியாகச் சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு இருந்தாலும், அர்மீனிய இனத்தவர்களே இங்கு அதிகம்.
 
1988 - 1994 இடையே இரு தரப்புக்கும் நடந்த சண்டையில் 30 ஆயிரம் பேர் பலியாகினர், 10 லட்சம் பேர் புலம்பெயர்ந்தனர்.
 
ரஷ்யாவின் ராணுவ தளம் அர்மீனியாவில் உள்ளது.
 
போர் பரவும் அச்சம்?
 
இரு நாடுகளுக்கு இடையேயான போர் பல நாடுகளுக்கும் பரவும் என அச்சமும் கவலையும் நிலவுகிறது.
 
குறிப்பாக அண்டை நாடுகளான துருக்கி, ரஷ்யா மற்றும் இரான் ஆகிய நாடுகள் இந்த சிக்கலில் தலையிடலாம் என்ற கவலை நிலவுகிறது.
 
குறிப்பாக எண்ணெய் குழாய்கள் இந்த பகுதியின் வழியே செல்கின்றன.
 
பல நாடுகள் தலையிட்டதால் 1994ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை முடிவுக்கு வந்திருந்தாலும், 2016ஆம் ஆண்டு முதல் இருநாடுகளுக்கு  இடையே மீண்டும் பதற்றம் நிலவுகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் குறைந்தது 200 பேர் இதன் காரணமாக பலியாகி உள்ளனர்.
 
யார் யாருக்கு ஆதரவு?
 
அஜர்பைஜானுடன் துருக்கி நெருக்கமான உறவைப் பேணி வருகிறது, அர்மீனியாவுடன் ரஷ்யா நெருக்கமாக இருந்தாலும் அஜர்பைஜானுடனும் நல்லுறவை பேணி  வருகிறது.
 
ரஷ்யா இருநாடுகள் இடையே உடனடி போர் நிறுத்தத்தைக் கோரி உள்ளது.
 
துருக்கி அதிபர் எர்துவான் அர்மீனியா தனது ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரி உள்ளார். இதன் மூலமாக மட்டுமே போர் நிறுத்தத்தைக்  கொண்டு வர முடியும் என அவர் கூறி உள்ளார்.
 
அதுமட்டுமல்லாமல், அஜர்பைஜானை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லுமாறு எர்துவானின் தலைமை ஆலோசகர் செவிக் அந்நாட்டிடம் கூறி உள்ளார்.
 
அஜர்பைஜானும், அர்மீனியாவும் என்ன சொல்கின்றன?
 
பிபிசியிடம் பேசிய அர்மீனியா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோக்ரப் அமைதி ஒப்பந்தத்தை நாசம் செய்தது அஜர்பைஜான்தான். நாங்கள் தற்காப்பு  நடவடிக்கையில்தான் ஈடுபட்டுள்ளோம் என குற்றஞ்சாட்டி உள்ளார்.
 
அர்மீனியாதான் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது. நாங்கள் எதிர் நடவடிக்கையில்தான் ஈடுபட்டோம் என்கிறது அஜர்பைஜான்.
 
உலக நாடுகள் என்ன சொல்கின்றன?
 
ஐ.நா செயலாளர் குட்ரோஸ் நிலைமை கவலை அளிப்பதாகக் கூறி உள்ளார். இருதரப்பும் சண்டையை நிறுத்த வலியுறுத்தி உள்ளார்.
 
ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர் இருநாட்டுத் தலைவர்களுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
அர்மீனிய மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் பிரான்ஸ் போர் நிறுத்தத்தையும், பேச்சுவார்த்தையும் கோரி உள்ளது.
 
இரு நாடுகளுடனும் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் இரான் அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்வதாக கூறி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தைக் கோரி உள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 தொகுதிகளுக்கு சம்மதித்து விட்டதா காங்கிரஸ்? பரபரப்பு தகவல்