நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், அரசியல் கட்சிகள், திரையுலகினர் உள்பட பல்வேறு அமைப்புகள் எதிர்த்து வரும் நிலையில் தற்போது மாணவர்களின் போராட்டம் உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த அ.தி.மு.க -வின் துணை பொதுச்செயலாளர் தினகரன் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை சமீபத்தில் அறிவித்துள்ளார். இந்த நிலையில் சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசிய்யின் மகள் கிருஷ்ணவேனி என்பவரும் நீட் தேர்வுக்கு எதிராக போராட போவதாக தெரிவித்துள்ளார். சமூக சேவை செய்து இவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:
'அனிதாவின் மரணம் தமிழக மக்களாகிய நம் அனைவரையும் ஆழமான துயரில் ஆழ்த்தியிருக்கிறது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. எதிர்காலத்தில் இம்மாதிரி துயர சம்பவங்கள் தொடராது தடுக்கும் கடமையும் கண்ணுக்கு தெரியாத லட்சோப லட்சம் அனிதாக்களை காப்பாற்றும் கடமையும் பொறுப்பும் சாமானிய மக்களாகிய நம் ஒவ்வொருக்கும் உள்ளது.
பள்ளிக்கூடங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளிடேயே வேறுபாடு, பாடத்திட்டத்தில் வேறுபாடு, கல்வித்தரத்தில் வேறுபாடு, வசதி படைத்திட்டோருக்கு ஒரு கல்வி முறை, ஏழை எளிய மக்களுக்கு மற்றொரு கல்வி முறை என கல்வியில் எத்தனையோ வேறுபாடுகள் தமிழகத்தில் நிலவும்போது இந்தியா முழுக்க ஒரே தேர்வு என்பது ஏழை எளிய மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியில்லையா' என்று கூறியுள்ளார். மேலும் வரும் 10ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.