அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் உள்ளனர் என தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியானது. சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியே தேர்தல் ஆணையத்தின் கையில் சிக்கியிருக்கும் வேளையில், அவரால் நியமிக்கப்பட்ட எந்த நியமனங்களும் செல்லாது, அதேபோல், அவரால் நியமிக்கப்பட்ட தினகரனின் நியமனங்கள் எதுவும் செல்லாது. மேலும், நமது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றை தினகரன் தரப்பிடம் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த தங்க தமிழ் செல்வன் “ அந்த கூட்டதில் 40 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. இதிலிருந்தே அவர்கள் யார் பக்கம் எனத் தெரிந்து கொள்ளலாம். மனதில் உள்ளதை பேச முடியாமல் பலர் உள்ளனர். விரைவில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்.
சசிகலா, தினகரன் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது. தினகரன் நியமித்த நியமனங்கள் செல்லாது என அறிவித்தவர்கள், சசிகலா நியமித்த நியமனங்கள் செல்லாது ஏன் என அறிவிக்கவில்லை?. பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே இருக்கிறது. அதையும் மீறி அவர்கள் செயல்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்” என அவர் தெரிவித்தார்.