புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், அம்மாநில கவர்னருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடு இருந்து வரும் நிலையில் அவை நாளாக நாளாக முற்றிக்கொண்டே வருகிறது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுவதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட ஆளுநருக்கு எந்த வகையிலும் உரிமையில்லை என்றும் அவர் ஆளுனராக செயல்படாமல், மகாராணி போல் செயல்படுவதாகவும் கூறினார். ஆளுனரை நேரடியாக தாக்கும் வகையில் முதல்வர் கருத்து கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.