நோபல் பரிசு வழங்குவதில் பெண்கள் அல்லது இன ஒதுக்கீடு தரும் எந்த நடைமுறையையும் அமல்படுத்தப் போவதில்லை என தகவல்.
உலகளவில் ஆண்டுதோறும் அறிவியல் துறைகளில் சிறந்த பங்களிப்பை தரும் அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் அல்லாமல் இலக்கியம் மற்றும் உலக அமைதிக்கும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நோபல் பரிசு வழங்குவதில் பெண்கள் அல்லது இன ஒதுக்கீடு தரும் எந்த நடைமுறையையும் அமல்படுத்தப் போவதில்லை என்று ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியின் தலைவர் கோரன் ஹன்சன் தெரிவித்தார். முக்கியக் கண்டுபிடிப்புக்காக மட்டுமே பரிசு வழங்கப்பட வேண்டும். பாலினம் அல்லது இனத்துக்காக அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
1901 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசுகளை இதுவரை 59 பெண்களே பெற்றிருக்கிறார்கள். இந்த ஆண்டு ஒரேயொரு பெண் மட்டுமே நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நோபல் பரிசை குறைந்த எண்ணிக்கையிலான பெண்களே பெறுகிறார்கள் என்பது மிகவும் கவலையளிக்கிறது. இது சமூகத்தின் நியாயமற்ற நிலையைப் பிரதிபலிக்கிறது. கடந்த காலங்களில் இது அதிகமாக இருந்தது, இப்போதும் தொடர்கிறது. இதற்காக நாம் நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது என்று ஏஃஎப்பி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒதுக்கீடு அளிப்பது குறித்து நோபல் கமிட்டி முடிவெடுக்காவிட்டாலும், பெண்களை அதிக எண்ணிக்கையில் பரிந்துரைக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.