Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெப்சி-தயாரிப்பாளர் பிரச்சனைக்கு சிம்பு படம் காரணமா? ஆர்கே செல்வமணி அறிக்கை

பெப்சி-தயாரிப்பாளர் பிரச்சனைக்கு சிம்பு படம் காரணமா? ஆர்கே செல்வமணி அறிக்கை
, ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (08:53 IST)
சிம்பு படத்தின் விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சி அமைப்பு இருக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில் நேற்று திடீரென தயாரிப்பாளர் சங்கம் இனிமேல் பெப்சி தொழிலாளர்கள் இன்றி படப்பிடிப்பு நடத்துவோம் என அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பெப்சி தொழிலாளர்களின் சார்பில் பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
அன்புடையீர்‌ வணக்கம்‌,
 
தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ நேற்று அவசர செயற்குழு கூட்டி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்‌ சம்மேளனத்துடன்‌ உள்ள ஒப்பந்தம்‌ அவர்களை கட்டுப்படுத்தாது என தீர்மானம்‌ எடுத்ததாக பத்திரிக்கைளில்‌ அறிவித்துள்ளார்கள்‌. இதுவரை எங்களுக்கு எந்த கடிதமும்‌ முறைப்படி அனுப்பவில்லை.
 
சம்மேளனத்தின்‌ தலைவராகிய நான்‌ தயாரிப்பாளர்களின்‌ நலனை சீர்குலைக்கும்‌ வகையில்‌ தன்னிச்சையாக செயல்படுவதாக தவறான குற்றச்சாட்டை முன்‌ வைத்துள்ளார்கள்‌. இது முற்றிலும்‌ தவறான தகவலாகும்‌. தற்போது தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தில்‌ நிர்வாகிகளாக உள்ள அனைவரையும்‌ விட தயாரிப்பாளர்‌ நலனுக்காக நாங்கள்‌ பல விஷயங்களை செய்து தந்துள்ளோம்‌.
 
இது படமெடுக்கின்ற அனைத்து தயாரிப்பாளர்களுக்கும்‌ நன்கு தெரியும்‌. தற்போது தமிழ்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க தலைவராக உள்ள திரு. முரளி அவர்கள்‌ எங்கள்‌ இனிய நண்பர்‌ மறைந்த இயக்குநர்‌ திரு. இராமநாராயணன்‌ அவர்களின்‌ புதல்வர்‌ ஆவார்‌. அவர்‌ மீது உள்ள மரியாதையில்‌ நான்‌ கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த விரும்பவில்லை. இருப்பினும்‌. நடந்த விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்‌.
 
நடிகர்‌ சிம்பு சம்மந்தப்பட்டு நான்கு தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை இருப்பதால்‌ சிம்பு நடிக்கும்‌ திரைப்படத்திற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என்று தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ சம்மேளனத்தை கேட்டுகொண்டது. சம்மேளனமும்‌ அதன்‌ படியே நடந்து வந்தது. இதற்கிடையே தயாரிப்பாளர்‌ ஐசரி கணேசன்‌ தயாரிக்கும்‌ புதிய படத்திற்கு 'நான்கு நாட்கள்‌ மட்டும்‌ வெளியூரில்‌ படப்பிடிப்பு நடத்தி கொள்கிறோம்‌. என்றும்‌, மேலும்‌ சென்னையில்‌ படப்பிடிப்பு நடைபெறுவதற்குள்‌ அனைத்து பிரச்சனைகளையும்‌ பேசி சரி செய்த பிறகே சென்னையில்‌ படப்பிடிப்பை துவங்குவோம்‌ என்ற உத்திரவாதத்தை சம்மேளனத்திற்கு வைக்க அதன்‌ படி தயாரிப்பாளர்கள்‌ சங்கத்திடம்‌ ஐசரி கணேசனின்‌ கோரிக்கையை சம்மேளனம்‌ தெரிவித்தது. தயாரிப்பாளர்கள்‌ சங்கமும்‌ தயாரிப்பாளர்‌ ஐசரி கணேசனுக்கு பட்ப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி தந்த பிறகே நாங்களும்‌
அப்படப்பிடிப்பில்‌ கலந்துகொண்டோம்‌. இதில்‌ சம்மேளனத்தின்‌ தவறு ஏதும்‌ இல்லை
 
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்‌ சம்மேளனமோ அல்லது அதன்‌ தலைமை பொறுப்பில்‌ இருக்கின்ற ஆர்‌.கே. செல்வமணியாகிய நானோ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்திற்கும்‌ இடையேயான 'கையெழுத்திடப்பட்ட எந்த ஒப்பந்த்தத்தின்‌ விதிகளையும்‌ மீறவில்லை.
 
ஏதோ காழ்ப்புணர்ச்சியில்‌ பின்புலத்தில்‌ யாரோ இருந்து வழி நடத்துகிறார்களோ என்ற சந்தேகம்‌ எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. நியாயத்திற்கு புறம்பாக எங்கள்‌ சம்மேளன தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால்‌ தமிழ்நாடு முதல்வர்‌ மாண்புமிகு மு.க.ஸ்டாலின்‌ அவர்களிடம்‌ முறையிட்டு தொழிலாளர்களுக்கும்‌ தயாரிப்பாளர்களுக்கும்‌ எந்த பாதிப்பும்‌ இல்லாமல் சுமூகமான தீர்வு கிடைக்கப்பெறுவோம்‌ என்பதை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்‌ சம்மேளனம்‌ சார்பில்‌ தெரிவித்து கொள்கிறோம்‌
 
இவ்வாறு ஆர்கே செல்வமணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரொனா தடுப்பூசி இலவசமாக வழங்கும் நடிகர்!