பிரபல இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளார். 'நான் தான் சி.எம். என்ற தலைப்புடன், அரசியல் சார்ந்த திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக, "அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது," என்று பார்த்திபன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த போஸ்டரில், சிங்காரவேலன் என்ற பெயரில், 'சோத்துக் கட்சி' என்ற கட்சியின் தலைவராக, 'படகு' சின்னத்துடன், பார்த்திபன் முதல்வர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படம் குறித்து பார்த்திபன் வெளியிட்ட பதிவில், "பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன். என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தபிறகு போடப் போகும் முதல் கையெழுத்து, எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்," என்று குறிப்பிட்டுள்ளார்.