கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இதையடுத்து விடுதலை இரண்டாம் பாகம் நேற்று முன்தினம் வெளியானது.
படம் வெளியானது முதல் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் படத்தின் ஒரே குறையாக படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் அரசியல் சித்தாங்களையோ பொன்மொழிகளையோ உதிர்த்துக் கொண்டே செல்கிறது. அந்த வசனங்கள் எல்லாம் அரசியல் விழிப்புணர்வு வசனங்களாக இருந்தாலும் சினிமாவில் அதைக் காட்சியாகதானே வைக்கவேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன. ஆனாலும் படம் வசூல் ரீதியாக நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளது. முதல் மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படம் பார்த்துள்ள நடிகரும் வெற்றிமாறனின் நெருங்கிய நண்பருமான தனுஷ் “விடுதலை 2 பூச்சுகள் இல்லாத அப்பட்டமான விறுவிறுப்பான படம். முதல் ஷாட்டில் இருந்து கடைசி ஷாட் வரை என்னைக் கட்டிப் போட்டது. மாஸ்டர் பில்ம்மேக்கர் வெற்றிமாற்றனின் சிறந்த இயக்கம். இளையராஜா அவர்களின் இசையை பெரிதும் ரசித்தேன். எல்லா நடிகர்களும் தங்கள் வேலைகளை மிகச்சிறப்பாக செய்திருந்தார்கள். வேல்ராஜின் ஒளிப்பதிவு அபாரமாக இருந்தது. இப்படி ஒரு படத்தை சினிமா மீதான காதலோடு தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு வாழ்த்துகள். மொத்த படக்குழுவுக்கும் என்னுடைய அன்பு” எனப் பாராட்டியுள்ளார்.