லண்டன் 2012 ஒலிம்பிக்கில் சாதிப்பதே தனது தற்போதைய லட்சியம் எனக் குறிப்பிட்டுள்ள இந்திய வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, அதுவரையிலான காலகட்டத்தில் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று திறமையை மேம்படுத்திக் கொள்வேன் எனக் கூறினார்.
வில்வித்தையில் சிறந்த அனுபவம் மிக்க டோலா பானர்ஜி கொல்கட்டாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வில்வித்தைக் மகளிர் குழு காலிறுதியில் தோல்வி அடைந்தாலும், அணிக்கான தனது தனிப்பட்ட பங்களிப்பு சிறப்பாகவே இருந்ததாக குறிப்பிட்ட அவர், அடுத்த ஒலிம்பிக் போட்டிக்குள் நடைபெறும் 2 உலக சாம்பியன்ஷிப் மற்றும் 2010 காமன்வெல்த் போட்டியில் சாதிப்பேன் என நம்பிக்கை தெரிவித்தார்.
வரும் 2011ஆம் ஆண்டு வரை தொடர்ந்து வெற்றிகளை குவித்தால், லண்டன் ஒலிம்பிக்கிற்கான தகுதிப் போட்டியில் எளிதில் தேர்வாக முடியும் என்றும், லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக ஓய்வுபெறும் எண்ணம் தனக்கில்லை என்றும் டோலா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.