ராஜ்கோட்டில் நடைபெறும் முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா இங்கிலாந்து பந்து வீச்சை ஆக்ரோஷமாக எதிர்கொண்டு 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்களை எடுத்துள்ளது. யுவ்ராஜ்சிங் 78 பந்துகளில் 16 பவுண்டரிகள் 6 சிக்சர் சகிதம் 138 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சேவாக், கம்பீர் கொடுத்த அதிரடித் துவக்கத்தை எந்த இடத்திலும் தொய்வடையச்செய்யாமல்ல் ரெய்னா, யுவ்ராஜ், தோனி ஆகியோர் அபாரமாக விளையாடினர்.
37ஆவது ஓவரில் ரெய்னா 43 ரன்களில் ஆட்டமிழந்த போது இந்தியா 242/3 என்று இருந்தது. அடுத்த 13 ஓவர்களில் யுவ்ராஜின் ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டத்தினால் 145 ரன்களை இந்தியா குவித்தது.
இந்தியாவில் ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச ரன் எண்ணிக்கையாகும் இது. இதற்கு முன்பு நியூஸீலாந்து அணிக்கு எதிராக 386 ரன்களை இந்தியா எடுத்துள்ளது.
உலக அளவில் 11ஆவது மிகப்பெரிய ஸ்கோராகும் இது.
யுவ்ராஜ் சிங் 64 பந்துகளில் சதம் எடுத்து அசாருதீனுக்கு பிறகு அதிவேக சத சாதனையைப் புரிந்துள்ளார். அசாருதீன் 62 பந்துகளில் நியூஸீலாந்திற்கு எதிராக அந்த சதத்தை எடுத்தார். அதன் பிறகு குறைந்த பந்தில் எடுத்த சதம் யுவராஜினுடையது.
யூசுஃப் பத்தான் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பிறகு தோனியும், யுவ்ராஜ் சிங்கும் இணைந்து 58 பந்துகளில் 105 ரன்களை விளாசினர்.
தோனி தன் பங்கிற்கு 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அதில் 3 பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும் விளாசி 48ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு கடைசி இரண்டு ஓவர்களில் இந்தியா 35 ரன்களை எடுத்தது. ரோஹித் ஷர்மா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு நிலவரம் படு மோசமாக உள்ளது. பிராட் 10 ஒவர்களில் 74 ரன்களையும், பிளின்டாஃப் 10 ஓவர்களில் 67 ரன்களையும், ஸ்டீவ் ஹார்மீசன் 10 ஓவர்களில் 75 ரன்களையும், ஸ்பின்னர் சமீத் படேல் 9 ஓவர்களில் 78 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.
பூவாதலையா வென்று இந்தியாவை பேட் செய்ய அழைத்த தன் முடிவை நினைத்து பீட்டர்சன் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்.