மொஹாலியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங், ஜாகீர்கான் ஆகியோரின் அபார பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸ்ட்ரேலியா அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து 320 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
மொஹாலியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் பூவா தலையா வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கங்கூலியின் அபார சதத்தாலும், தோனி, சச்சின், கெளதம் கம்பீர் ஆகியோரின் அபார அரை சதத்தாலும் இந்திய அணி, முதல் இன்னிங்சிஸ் 469 ரன்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ஆஸ்ட்ரேலியா அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய தரப்பில் மிஸ்ரா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்பஜன் சிங், இசாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அந்த அணியின் ஹஸ்ஸி (54), வாட்சன் (78) ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடினார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதைத் தொடர்ந்து இந்திய அணி 201 ரன்கள் முன்னிலை பெற்று தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் சேவாக்- கம்பீரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி ரன் குவித்தது.
அபாரமாக விளையாடி சேவாக் 90 ரன்னில் ஆட்டம் இழந்தார். சதம் அடித்த கம்பீர் 104 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த தோனி அதிரடியாக விளையாடி 68 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இழந்தார்.
முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய கங்கூலி 2வது இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.
3 விக்கெட் இழப்புக்கு 314 ரன் குவித்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதையடுத்து ஆஸ்ட்ரேலியா அணிக்கு வெற்றி இலக்காக 516 ரன்னை நிர்ணயித்தது இந்திய அணி.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ஆஸ்ட்ரேலிய வீரர்கள், ஹர்பஜன் சிங் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு கட்டத்தில் 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்ட்ரேலியா அணி, 8 ரன்கள் எடுப்பதற்குள் மேலும் 3 விக்கெட்டுகளை இழந்தது.
ஆஸ்ட்ரேலியா அணி நேற்று ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்ட்ரேலியா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 195 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
அந்த அணியின் கிளார்க் கடைசி வரை போராடி பார்த்தும் பலன் இல்லாமல் போய்விட்டது. கடைசி விக்கெட்டாக வீழ்ந்த அவர், 68 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் சொல்லும் படியாக விளையாடவில்லை.
இந்திய தரப்பில் ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இசாந்த் சர்மா, மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்
ஆட்டநாயகனாக தோனி தேர்ந்தெடுக்கப்பட்டார். 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
3வது டெஸ்ட் போட்டி வரும் 29ஆம் தேதி டெல்லியில் தொடங்குகிறது.