தமிழக வீரர் பாலாஜியின் அபார பந்து வீச்சால் பஞ்சாப் அணியை சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பாலாஜி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று 31-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. பூவா தலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரர் வித்யுத், சிறிசாந்த் வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிளமிங், சிறிசாந்த் வீசிய அடுத்த ஓவரிலேயே அவுட்டானார். ௦3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுரேஷ் ரெய்னாவும், ௦பத்ரிநாத்தும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ௦இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்யை உயர்த்தினர். ௦அணியின் எண்ணிக்கை 64ஆக இருந்த போது ரெய்னா ஆட்டம் இழந்தார். இவர் 4 பெளண்டரியுடன் 26 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் தோனியும், பத்ரிநாத்தும் இணை சேர்ந்து பஞ்சாப் பந்து வீச்சாளர்களை நொறுக்கினர். இவர்களின் அதிரடியான ஆட்டத்தினால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. 47 பந்தில் 64 ரன்கள் குவித்தபோது பத்ரிநாத் ஆட்டம் இழந்தார். இவர் 3 சிக்சர், 6 பெளண்டரிகளை விளாசினார்.
இந்த இணை 4-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தது. முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 43 பந்துகளில் 60 ரன்கள் குவித்திருந்த தோனி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவர் 4 சிக்சர், 2 பெளண்டரிகளை விளாசினார்.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகள் சரிந்தன. தொடக்க ஆட்டக்காரர் ஷான் மார்ஷ் 38 பந்தில் 58 ரன்கள் சேர்த்து அணியின் ரன் உயர்வுக்கு காரணமாக இருந்தார். இவர் 4 சிக்சர், 3 பெளண்டரிகளை விளாசினார். அணித் தலைவர் யுவராஜ்சிங் 2 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இருந்தாலும் பத்தான், பியுஷ் சாவ்லா அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கை உயர்த்தினர். கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற 27 ரன்கள் தேவைப்பட்டன. 20-வது ஓவரை தமிழக வீரர் பாலாஜி வீசினார். இதில் புல்டாசாக வந்த முதல் பந்தை பத்தான் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் 2 ரன் எடுத்தார்.
3-வது பந்தில் பத்தான் அவுட்டானார். இவர் 18 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்கள் விளாசினார். அடுத்த பந்தில் பியுஷ் சாவ்லா ஆட்டம் இழந்தார். இதனால் பாலாஜிக்கு `ஹாட்ரிக்' வாய்ப்பு உருவானது. 5-வது பந்தை எதிர்கொண்ட வி.ஆர்.வி.சிங் விக்கெட் கீப்பர் தோனிடம் கேட்ச் கொடுக்க, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் `ஹாட்ரிக்' விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற சாதனையை பாலாஜி படைத்தார்.
20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணியால் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. `ஹாட்ரிக்' உள்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பாலாஜி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.