ஹர்பஜன் சிங்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஐதராபாத்துடன் நடைபெறும் போட்டியில் மும்பை அணித் தலைவராக சச்சின் விளையாடுவாரா என்று இரவு 8 மணிக்கு தெரிந்து விடும்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடை பெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை அணியின் தலைவரான கேப்டனான தெண்டுல்கர் காயத்தை காரணமாக வைத்து 3 போட்டியில் விளையாட வில்லை. இதனால் ஹர்ஜன்சிங் அணித் தலைவராக பணியாற்றினார். இந்த நிலையில் சிறிசாந்தை கன்னத்தில் அறைந்த ஹர்பஜன், ஐ.பி.எல். போட்டியில் விளையாட தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதனால் இன்று நடக்கும் போட்டியில் ஹர்பஜன் சிங் விளையாட முடியாது.
தொடர்ச்சியாக பெங்களூரு, சென்னை, ராஜஸ்தான் ஆகிய அணிகளுடன் தோல்வியை சந்தித்த மும்பை அணியை காப்பாற்ற டெண்டுல்கர் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் விளையாடுவது உறுதியாக தெரியவில்லை.
இதேபோல் ஐதராபாத்தின் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் 3 தோல்வியை சந்தித்து உள்ளது. எந்த அணி வென்றாலும் அது முதல் வெற்றியாக அமையும்.
முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் ஷேவாக்கின் டெல்லி அணியும், பஞ்சாபின் யுவராஜ்சிங்கின் அணியும் மோதுகின்றன.