இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா அணி 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது. பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்தது தென் ஆப்பிரிக்கா.
தொடக்க வீரர் ஸ்மித் அபாரமாக விளையாடி அரை சதம் எடுத்தார். 36 ரன்கள் எடுத்திருந்த மெக்கன்சி சாவ்லா பந்தில் ஆட்டம் இழந்தார். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது.
பின்னர் வந்த அம்லா அருமையாக விளையாடி அரை சதம் எடுத்தார். அணியின் எண்ணிக்கை 152 ஆக இருந்த போது ஸ்மித் ஆட்டம் இழந்தார். இவர் 8 பெளண்டரியுடன் 69 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து 51 ரன்கள் எடுத்திருந்த அம்லா யுவராஜ் சிங் பந்தில் ஆட்டம் இழந்தார். வந்த வேகத்தில் காலீஸ் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். இவரது விக்கெட்டை ஹர்பஜன் சிங் கைப்பற்றினார்.
பிரின்ஸ் 16 ரன்னில் அவுட்டானார். இவரது விக்கெட்டை சேவாக் எல்.பி.டபிள்யூ முறையில் கைப்பற்றினார். அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த டிவிலியர்ஸ் இந்த போட்டியில் 25 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் வந்த பெளச்சர் 29 ரன்னிலும், மோர்கெல் 17 ரன்னிலும், ஹரிஸ் 12 ரன்னிலும், ஸ்டெய்ன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். 87.3 ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணி 265 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய தரப்பில் சர்மா, ஹர்பஜன் சிங் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாவ்லா 2 விக்கெட்டும், யுவராஜ் சிங், சேவாக் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த போட்டியில் அணி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. நாளை 2வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.