பைரவ மூர்த்தம் என்பது சக்தி வாய்ந்த தெய்வம். எதிரிகளையும் துஷ்ட சக்திகளையும் அழிக்கவல்லவர் பைரவர். நமக்கு இதுவரை இருந்த தடைகளையெல்லாம் தகர்த்து அருளுபவர் பைரவர்.
சிவாலயங்களில், பிராகாரத்தைச் சுற்றி வரும்போது, காலபைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கும். தேய்பிறை அஷ்டமி, பைரவருக்கு உகந்த நாள். இந்த நாளில், காலையிலும் மாலையிலும் பைரவருக்கு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.
தேய்பிறை அஷ்டமியில், அவருக்கு உரிய நன்னாளில், பைரவரை வணங்கிட பயமெல்லாம் விலகிடும். இந்த நாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வணங்கி வழிபடுவது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்!
அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, பிராகாரத்தில் உள்ள காலபைரவரைத் தரிசிக்கலாம். செவ்வரளி மாலை சார்த்தி வழிபடலாம். மிளகு அல்லது தயிர்சாதம் நைவேத்தியமாக வழங்குங்கள். வெண்பொங்கல் நைவேத்தியமும் சிறப்பைத் தரும்.
இந்த தினங்களில் பைரவ வழிபாடு செய்வதும் பைரவாஷ்டகம் சொல்லி வணங்குவதும் பலன்களைத் தந்தருளும். பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம்.
தெருநாய்களுக்கு உணவளிப்பதும் பிஸ்கட் வழங்குவதும் எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கும். துஷ்ட சக்திகள் நம்மை நெருங்கவிடாமல் பைரவர் காத்தருள்வார். அஷ்டமி என்றில்லாமல், பைரவரை எப்போதும் வழிபடலாம்.