நாசிக்கின் முக்கிய ஸ்தலங்களில் ஒன்றான காலாராம் மந்திர் பஞ்சாவதி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலுள்ள கோயில்களிலேயே மிகப் பெரியதும், மிகவும் எளிமையானதுமான கோயில்தான் காலாராம் மந்திர்.இந்தக் கோயிலின் கருவறையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ராமர் சிலை முழுவதும் கறுப்பு நிறக் கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இந்தக் கோயில் அனைவராலும் காலாராம் மந்திர் (கறுப்பு ராமரின் கோயில்) என்று அழைக்கப்படுகிறது. ராமரைப் போலவே சீதை, லட்சுமணன் ஆகியோரின் சிலைகளும் கறுப்பு நிறக் கல்லில் கண்ணைப் பறிக்கும் அணிகலன்களுடன் பக்தர்களுக்கு அருளுகின்றனர். கோயில் வளாகத்திற்குள் விநாயகர், அனுமன் ஆகியோருக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன.1790
க்கும் முற்பட்ட காலத்தில் பேஷ்வாவைச் சேர்ந்த சர்தார் ஒதேக்கர் இந்தக் கோயிலைக் கட்டியதுடன், ராமருக்கு அர்ப்பணித்துள்ளார். இந்தக் கோயிலைக் கட்டுவதற்குத் தேவைப்பட்ட கருங்கற்கள் ராம்சேஜ் என்ற இடத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் 23 லட்சம் ரூபாய் செலவில் 2,000 பேருடைய 12 ஆண்டு கால உழைப்பில் இந்தக் கோயில் உருவாகியுள்ளது.
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 4 திசைகளையும் நோக்கிய 4 பிரமாண்டமான வாயில்களைக் கொண்டுள்ள இந்தக் கோயில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோயில் கோபுரம் 32 டன் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
கறுப்பு ராமர் கோயிலை 96 வலுவான தூண்களுடன் கூடிய உயர்ந்த சுற்றுச் சுவர்கள் பாதுகாக்கின்றன. பக்தர்கள் உள்ளே நுழைவதற்கு கிழக்குப்புறத்தில் உள்ள வாயில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
கறுப்பு ராமர் கோயிலின் கோபுரம் 70 அடி உயரமுள்ளது. அதன் உச்சிப் பகுதி முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. அதன் அருகில் அமைந்துள்ள மற்றொரு கருவறை சீதா கம்பா (குகை) என்று அழைக்கப்படுகிறது. சீதை வனவாசத்தின் போது இந்தக் குகையில்தான் தங்கினார் என்று நம்பப்படுகிறது. அதன் அருகில் மிகப் பெரிய ஆலமரம் ஒன்றும் வளர்ந்துள்ளது.கடந்த 1930 ஆம் ஆண்டிற்கு முன்னர் தாழ்த்தப்பட்டவர்கள் இந்தக் கோயிலிற்குள் அனுமதிக்கப்பட்டதில்லை. அதன்பிறகு டாக்டர் அம்பேத்கார் நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்திற்குப் பின்னர், தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.ராமநவமி, தசரா, சித்ரா பெளர்ணமி ஆகியவை ஆண்டுதோறும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாக்கள் ஆகும். அந்த நேரங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு திரண்டு வந்து ராமரை வணங்கி அருள்பெற்றுச் செல்வர்.
எப்படிச் செல்வது?
சாலை மார்க்கம்: இந்தக் கோயில் மும்பையில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவிலும், புனேவில் இருந்து 210 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இரயில் மார்க்கம்: மத்திய இரயில்வே வழித்தடத்தில் நாசிக் இரயில் நிலையம் மிக முக்கியமான ஒன்றாகும்.
விமான மார்க்கம்: நாசிக்கிலேயே விமான நிலையம் உள்ளது. மும்பையில் இருந்தும் அடிக்கடி விமானம் உள்ளது.