யோகேந்திர பாபா கோயிலுக்கு வரும் ஒவ்வொருவரும் அளவிட முடியாத அமைதியையும் பரவசத்தையும் உணர்கின்றனர். ஒவ்வொரு வியாழக் கிழமையும் பெருமளவிலான பக்தர்கள் பாபாவின் அருளைப் பெறக் குவிகின்றனர். யோகேந்திர ஷில்நாத் பாபாவின் முன்பு தலைவணங்கி வழிபடும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் அமைதியையும் நலன்களையும் பெறுகின்றனர்; வெற்றி அவரைத் தேடி வருகிறது. வாழ்வின் துன்பங்களை எளிதாகக் கடப்பதற்கு வழி கிடைக்கிறது. இந்த இடத்தின் தூய்மையையும் புனிதத்தன்மையையும் பாபா மிகவும் விரும்புகிறார் என்று பக்தர்கள் கூறுகின்றனர். இங்கு நிலவும் அமைதியை உடைக்க விரும்புபவர் யாராக இருந்தாலும் அவர் பாபாவின் கோபத்தைச் சந்திக்க வேண்டும். கோயில் வளாகத்தில் உள்ள பாபாவின் சமாதியிலும், மல்ஹார் தோனி எனப்படும் குண்டத்திலும் பக்தர்கள் நிறைந்துள்ளனர். அங்கு அவர்கள் பாபாவை நினைத்து மனமுருகி வேண்டுகின்றனர்.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியேதான் இப்போதும் இந்த இடம் உள்ளது. பாபாவின் படுக்கையும் மரத்தாலான காலணிகளும் இப்போதும் அங்குள்ளன.
வன விலங்குகளிடம் பாபா மிகுந்த அன்பு கொண்டிருந்தார். குண்டத்தின் அருகில் பாபா தியானிக்கும்போது விலங்குகள் எல்லாம் காட்டிலிருந்து வெளியேறி வந்து அவரைச் சுற்றிலும் அமர்ந்து கொள்ளுமாம். புலி ஒன்று எப்போதும் அவரைச் சுற்றி வரும். அந்தப் புலிக்காக பாபா தனியாக ஒரு கூண்டு செய்து வைத்திருந்தார்.
மனிதகுலத்தின் நலனிற்காக வாழ்ந்த யோகேந்திர பாபாவின் வரலாற்றில் பல்வேறு அற்புதங்கள் உள்ளன. அவர் இங்கு 1901 முதல் 1921 வரை தங்கியிருந்தார். பின்னர் 1977 சம்வந்த் மாதம் சைத்ர கிருஷ்ணா 14ஆம் நாள் ரிஷிகேஷ் புறப்பட்டுச் சென்றவர் விண்ணுலகத்தை அடைந்து விட்டார்.