உத்திரப்பிரதேசத்தில் மக்களால் பெரிதும் அறியப்படும் ஷஹ்ஜஹன்புரத்தில் அமைந்திருக்கும் பரசுராமர் பிறந்த திருத்தலத்தை இந்த வார புனிதப் பயணத்தில் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.ஜலாலாபாத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்த திருத்தலம். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த இடம் கேடா பரசுராமபுரி என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.இந்த இடத்தில்தான் பரசுராமர் பிறந்ததாக மக்கள் நம்புகின்றனர். இந்த இடத்தை முக்கிய சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இது பற்றி அம்மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜிதின் பிரசாத் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார்.
இந்த திருத்தலத்தை வைத்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசியலும் நடத்தப்படுகிறது. அதாவது பரசுராமர் பெருமைக்கும், மரியாதைக்கும் உரியவராக அங்குள்ள பிராமணர்கள் கருதுகின்றனர். எனவே அப்பகுதியில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர், பரசுராமர் கோயிலுக்கு வந்து பூஜைகளும், விரதங்களும் மேற்கொள்வதன் வாயிலாக பிராமணர்களின் வாக்குகளைப் பெறும் தந்திரமும் வெகு நாட்களாக நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த கோயிலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கி சிறப்பாக நடந்து முடிந்துள்ளன.
இந்த தலத்தின் வரலாறை புரட்டிப் பார்க்கும்போது, ஜலாலுதினின் இளைய மகன் ஹபிஸ் கானிற்கு திருமணம் நிச்சயம் செய்த போது, அவருக்கு மனைவியாக வரும் மருமகளுக்கு இந்த கோயில் இருக்கும் இடம் ஜலாலுதினால் வழங்கப்பட்டுள்ளது. அப்போது இந்த கோயில் பரசுராம்புரியில் இருந்து ஜலாலாபாத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலின் உள் பகுதியில் சிவலிங்கம் உள்ளது. சிவலிங்கத்தின் முன்பு பரசுராமரின் திருவுருவச் சிலை அமைந்துள்ளது. இங்கு சிவலிங்கத்தை அமைத்து அதற்கு முன்பு பரசுராமரே வந்து அமர்ந்து கொண்டதாகவும், அதன் பின்னர்தான் இங்கு கோயில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த கோயில் சுமார் 20 அடி உயரத்துடன் காணப்படும் இந்த கோயில் இஸ்லாமியர்களால் பல முறை இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் பக்தர்களால் அதே இடத்தில் மீண்டும் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை கோயில் அமைக்கும் பொழுதும் பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு முறை 8 அடி உயரமுள்ள ஒரு பசுவின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த சிலை தற்போதுள்ள கோயிலின் நுழைவாயிலில் வலது புறத்தில் வைக்கப்பட்டுள்ளது.கோயிலின் மேற்கு புறத்தில் தாட்சாயினி, தாட்சாயின் ஆகியோரது சன்னதிகள் உள்ளன. கோயிலை ஒட்டி ஜிக்தினி ஏரியும் உள்ளது. கோயிலின் முன் புறத்தில் ராம்தால் என்ற அழகிய குளமும் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களும் பூர்த்தியாவதாக நம்புகின்றனர். புதிதாக திருமணமாகும் தம்பதிகள் முதலில் இக்கோயிலுக்கு வந்து இறைவனின் ஆசியைப் பெறுவது அங்கு வழக்கமாக உள்ளது.
வெகு தொலைவில் இருந்தெல்லாம் இந்த கோயிலைக் காண பக்தர்கள் வருகின்றனர்.
மொட்டை அடித்தல், அன்னதானம், காது குத்துதல் போன்றவற்றை பக்தர்கள் இங்கு செய்கின்றனர்.
தற்போது மஹந்த் சத்யதேவ் பாண்டியா என்பவரது கண்காணிப்பின் கீழ் இக்கோயிலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. நவதுர்கா சிலை அமைக்கப்பட்டுள்ளது.
நவதுர்காவின் 24 விதமான உருவங்களைக் கொண்ட சிலைகள் கோயிலின் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
அங்கு வாழும் மக்களால் அதிகமாக நம்பப்படும் இந்த கோயிலில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகின்றன.