வட இந்தியாவில் தற்பொழுது கொண்டாடப்படும் சைத்ர நவராத்ரா என்றழைக்கப்படும் சித்திரை நவராத்திரி விழா, அங்குள்ள கோயில்களில் களைகட்டியுள்ளது!மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜாசென் மாதா கோயிலில் தற்பொழுது நடைபெற்று வரும் சச்சாண்டி மகா யாக்னம் என்றழைக்கப்படும் யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். வைஷ்ண தேவி மாதா ஆலயத்தைப் போல இக்கோயிலிலும் இங்குள்ள மாதாவின் திருவுருவச் சிலை கல்லால்தான் ஆனதாகவே உள்ளது. ஆனால், இந்த உருவம் சுயம்புவாக உருவெடுத்தது என்று அங்குள்ள பூசாரி கூறுகிறார். அதன் வரலாறு அங்கிருக்கும் எவருக்கும் தெரியவில்லை. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் இம்மாதாவை வணங்கி வருவதாக இக்கோயில் பூசாரி கூறுகிறார். இக்கோயில் அமைந்திருக்கும் பகுதியை ஹோல்கர் வம்சத்தினர் ஆண்டபோது, வேட்டையாடும் காடாக இருந்ததாம். 1920 ஆம் ஆண்டு ஒரு அரச குடும்பமே இம்மாதாவிற்கு கோயில் கட்டியதாகக் கூறப்படுகிறது. இம்மாதாவின் அருளைப் பெற்றவர்கள் எதிர்பார்த்தது நிறைவேறும் என்கின்ற நம்பிக்கை பக்தர்களுக்கு உள்ளது.
இக்கோயிலை ஒட்டியுள்ள குளத்தில் வாழும் மீன்களுக்கு உணவளிப்பதால் கூட தங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.
நவராத்திரி காலத்தில் இக்கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. இக்கோயிலிற்கு அருகே கோமத் கிரி, ஹிங்கார் கிரி என்ற இரண்டு சமணர் கோயில்கள் உள்ளன. இங்கு சமணத் துறவிகள் ஒவ்வொரு ஆண்டும் வருகை தருகின்றனர்.