இந்த வார புனிதப் பயணத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆத்துக்கால் பகவதி அம்மன் திருக்கோயிலை பார்க்கப் போகிறோம்.பெண்களின் சபரிமலை என்று இந்த ஆத்துக்கால் பகவதி அம்மன் கோயில் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் பெரும்பாலானவர்கள் பெண்கள்தான் என்பதுதான் இதற்குக் காரணம்.இந்த கோயிலில் நடைபெறும் பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பொங்கல் விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். இதனால் உலகில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று பொங்கல் வைத்ததற்காக கின்னஸ் புத்தகத்திலும் இக்கோயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.சிலப்பதிகாரத்தில் கோவலனை கள்வன் என்று கூறி மரண தண்டனை விதித்த பாண்டிய மன்னனின் அரசை கண்டித்து மதுரையை எரித்த பின், கண்ணகி திருச்சூர் அருகே உள்ள கொடுங்கலூருக்குச் சென்றார். அப்போது ஆத்துக்கால் வழியாகச் சென்ற கண்ணகி அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைக் கொண்டாடும் வகையில்தான் இந்த கோயிலில் பெண்கள் பொங்கலிட்டு கண்ணகியை வழிபடுகின்றனர்.
பகவதி அம்மன் கோயிலைச் சுற்றி உள்ள இடத்தில் பெண்கள் சக்கரைப் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். சர்க்கரைப் பொங்கலில் தேங்காய், வெல்லம், பழங்கள், நறுமணத்தைச் சேர்க்கும் பொருட்களையும் போடுகின்றனர். இந்த விழாவின்போது பெண்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பூசாரிகளைத் தவிர இவ்விழாவில் வேறு எந்த ஆணையுமேக் காண முடியாது.
பொங்கல் விழாவிற்கு முந்தைய இரவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் இக்கோயிலுக்கு வந்துவிடுகின்றனர். மறுநாள் காலையில் நீராடி கோயிலை ஒட்டியுள்ளப் பகுதியில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.பொங்கல் பொங்கும் வேளையில் தேங்காய் எண்ணெயின் வாசமும், புகையின் வாசமும் கலந்து காற்றில் கமழும். வத்த மரத்தின் இலைகளைக் கொண்டு செய்யப்படும் இலை அப்பம், புட்டு போன்றவைகளையும் சர்க்கரைப் பொங்கலுடன் வைத்து நைவேத்தியம் செய்கின்றனர்.மலையாளத்தில் மகரம் - கும்பம் மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் முடியும் இந்த பொங்கல் விழா சுமார் 10 நாட்கள் கொண்டாடப்படும் வைபவமாகும்.இந்த விழா நடைபெறும் நாள் முழுவதும் தொட்டாம்பட் என்ற பகவதி அம்மனின் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். குத்தியோட்டம் விரதம் என்ற நிகழ்ச்சியில் இளைஞர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் பல நாட்கள் இந்த கோயிலில் தங்கியிருந்து 1008 ஸ்லோகங்களை சொல்கின்றனர்.
9
ஆம் நாள் இரவுதான் ஆத்துக்கால் பகவதி அம்மன் கோயிலின் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கோயிலில் திரள்கின்றனர். மொழி, இனம் மறந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடுகின்றனர். அன்றைய தினம் கோயிலைச் சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த பொங்கல் விழாவின் எதிரொலி தான் கேட்டுக் கொண்டே இருக்கும்.இந்துக்கள் பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்த அந்த சர்க்கரைப் பொங்கலை தங்களது அக்கம் பக்கத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வழங்குகின்றனர். கேரளாவில் கொண்டாடப்படும் இந்த ஆத்துக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா பல்வேறு மக்களையும் கவர்ந்துள்ளது. பொங்கல் விழாவில் பங்கேற்கும் அனைவரும் சமம், யாருக்கும் எதுவும் உரிமையானதல்ல, இறைவனிடம் இருந்து அசி பெறுதலே மனதில் இருக்கும் ஒரே எண்ணமாகக் கருதி மக்கள் கோயிலுக்கு வருகின்றனர்.கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருக்கும். பொங்கல் வைக்கும் பெண்கள் அன்று நாள் முழுவதும் விரதமிருக்கின்றனர். தாங்கள் வைத்த பொங்கலை இறைவனுக்கு படைத்து பூஜை செய்யப்பட்ட பின்னர் பூசாரி அளிக்கும் புனிதத் தீர்த்தத்தை தெளித்த பின்னர் தான் விரதத்தை முடிக்கின்றனர்.
காலையில் 11 மணியளவில் கோயிலுக்குள் செல்லும் பூசாரி, பூஜைகள் முடிந்து மாலை 4 மணியளவில்தான் வெளியே வருகிறார். அவர் பூஜை செய்து வைத்திருக்கும் புனிதத் தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார். அதைப் பெற்ற பக்தர்களும், மன நிறைவுடனும், மகிழ்வுடனும் இல்லம் திரும்புகின்றனர்.
பொங்கல் விழாவின் நிறைவாக யானை மீது வைக்கப்படும் தேவி மனசெளட் சாஸ்தா கோயிலுக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறார். இந்த ஊர்வலத்தின்போது நாதஸ்வரம், மேளங்கள், நையாண்டி மேளம் என பல்வேறு இசை வாத்தியங்களும் இசைப்படும்.
செல்வது எப்படி :
ரயில் மார்கம் : திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கிமீ. தூரத்தில் தான் ஆத்துக்கால் பகவதியம்மன் கோயில் அமைந்துள்ளது.
விமான மார்கம் : திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தூரம் பயணம் செய்தால் இந்த கோயில் வந்துவிடும்.