Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சக்தி தேவதை துல்ஜா பவானி!

Advertiesment
சக்தி தேவதை துல்ஜா பவானி!
, ஞாயிறு, 17 பிப்ரவரி 2008 (17:05 IST)
webdunia photoWD
மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜியின் குடும்பத்தினர் வழிபட்ட குலதெய்வம் மட்டுமின்றி, மராட்டிய மாநிலத்தில் ஏராளமானவர்கள் வழிபடும் துல்ஜா பவானி சக்தி தேவதையின் கோயில், அம்மாநிலத்தின் உஸ்மனாபாத்தில் உள்ள துல்ஜாபூரில் உள்ளது!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மூன்று சக்தி பீடங்களில் ஒன்றான துல்ஜா பவானி, நமது நாடு முழுவதிலும் உள்ள 54 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

புராதண இந்தியாவில் இரண்டு வனப் பகுதிகள் இருந்ததாக இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவை ஒன்று நைமிஸ்ய ஆரண்யம், மற்றொன்று தண்டகாரண்யம்.

மராட்டிய மாநிலத்தின் மரத்வாடா பகுதி தண்டகாரண்யத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதிக்கு யமுனாச்சல பர்வதம் என்றும், பாலாகாட் என்றும் பெயருண்டு. யமுனாச்சலத்தின் மலைப் பகுதியில் துல்ஜாபூர் அமைந்துள்ளது. இந்த பகுதியில்தான் சாலிகிராமக்கல் என்றழைக்கப்படும் மிதக்கும் கல்லால் ஆன சுயம்பு மூர்த்தி உள்ளது.

மற்ற கோயில்களைப் போல் அல்லாமல், துல்ஜா பவானி ஆலயத்தின் கொடி மரம் ஓரிடத்தில் நிலைத்து நிற்காமல் மாறக்கூடியது என்று கூறப்படுகிறது. அதேபோல இக்கோயிலில் உள்ள சிலையும் இடம்பெயரக் கூடியதே. துல்ஜா பவானி விக்ரகத்தை ஒரு எந்திரத்தை உருவாக்கி ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இச்சிலை அதன் இடத்தில் இருந்து எடுக்கப்பட்டு கோயிலை பிரதக்ஷனம் செய்து அல்லது பரிக்கிராமா செய்யப்பட்டு ஸ்ரீ எந்திரம், மகாதியோ, காண்டிராவ் ஆகியவற்றுடன் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

webdunia
webdunia photoWD
துல்ஜா பவானி திருக்கோயில் ஹேமத் பண்டி எனும் கட்டட கலையின் வடிவத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. கோயிலிற்குள் நுழைய இரண்டு பெரிய கதவுகள் உள்ளன. கோயிலிற்குள் நுழைந்ததும் நாம் பார்க்கும் கல்லோல் தீர்த்தம் 108 புனிதத் தீர்த்தங்களின் சங்கமமாகும். அங்கிருந்து சில அடி தூரத்தில் கோமுக் தீர்த்தம் உள்ளது. இதில் உள்ள தண்ணீர் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. கோமுக் தீர்த்தத்திற்குப் பிறகு சித்தி விநாயகரின் கோயிலும், அதனைக் கடந்து செல்லும் போது சர்தார் நிம்பால்கர் உருவாக்கிய அழகிய வேலைப்பாடுகள் உள்ள கதவுகள் வருகின்றன. அதற்குள் நுழைந்ததும் ரிஷி மார்க்கண்டேயர் இடது புறத்திலும், நாகரா என்று சொல்லக்கூடிய பெரிய முரசு வலது பக்கத்திலும் உள்ளன.

webdunia
webdunia photoWD
கோயிலின் கருவறையில் தானாக உருவெடுத்த துல்ஜா பவானி விக்ரகத்தைக் காணலாம். கற்களாலும், நகைகளாலும் ஆன பீடத்தில் துல்ஜா பவானி விக்ரகம் உள்ளது. துல்ஜா பவானியை தரிசிக்கும் பட்சத்திலேயே மனம் சாந்தமடைகிறது. அதற்கு அருகிலேயே பவானி உறங்குவதற்கான வெள்ளியாலான படுக்கை உள்ளது. அந்தப் படுக்கைக்கு எதிரில் மகாதேவரின் லிங்க வடிவம் உள்ளது. பவானியும், சங்கரரும் நேருக்கு நேர் பார்த்திருப்பதை அங்கு காணலாம்.

இக்கோயிலில் உள்ள பல தூண்களில் ஒன்றில் வெள்ளியாலான வளையம் உள்ளது. நம் உடலில் எங்காவது வலி ஏற்பட்டால், ஏற்பட்டிருந்தால் இந்த வெள்ளி வளையத்தைத் ஏழு நாட்கள் தொடர்ந்து தொட்டு வந்தால் அது சரியாகிவிடும் என்று நம்பப்படுகிறது.

துல்ஜா பவானியை வணங்க சத்ரபதி சிவாஜி இங்கு வருவார் என்று சரித்திரம் கூறுகிறது. இக்கோயிலில் சகுன்வன்தி என்ற ஒரு கல் உள்ளது. அதனை அதிசயக் கல் என்று மக்கள் நம்புகின்றனர். இந்தக் கல்லின் மீது லேசாக கையை வைத்துக் கொண்டு மனதிற்குள் கேள்வியை எழுப்பினால் அதற்கு உண்டு, இல்லை என்ற பதில் கிடைத்துவிடும் என்று கூறுகின்றனர். அந்த உண்டு, இல்லை என்ற பதிலை கல் இடது பக்கமாகவே, வலது பக்கமாகவோ திரும்பி உணர்த்துமாம். வலது பக்கம் திரும்பினால் உண்டு, இல்லை என்றால் இடது பக்கம் திரும்பும். கல் அசையாமல் இருந்தால் நாம் எண்ணிய அந்தச் செயல் மிக மெதுவாக நிறைவேறும் என்று கொள்ளப்படுகிறது.

webdunia
webdunia photoWD
இதெல்லாம் அங்கு வரக்கூடிய பக்தர்களின் நம்பிக்கையாகும். ஆனால், போருக்குப் போகும் முன் சிந்தாமணி என்றழைக்கப்படும் இந்தக் கல்லைத் தொட்டு தனது கேள்விக்கு பதில் கிடைத்த பின்னரே சத்ரபதி சிவாஜி போருக்குச் செல்வார் என்று கூறப்படுகிறது.

துல்ஜா பவானி எட்டுக் கைகளுடன் காட்சியளிக்கின்றார். தனது காலால் மகிஷாசுரனை மிதித்துக் கொண்டு சூலத்தால் குத்தும் நிலையில் காட்சியளிக்கிறார்.

துல்ஜாபூர் செல்வது எப்படி :

மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து 560 கி.மீ. தூரத்தில் துல்ஜாபூர் உள்ளது. லாத்தூரில் இருந்து 75 கி.மீ. தூரம் உள்ள துல்ஜாபூருக்கு சோலாப்பூர், உஸ்மனாபாத், நால்துர்க் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் செல்கின்றன.

ரயில் மார்க்கம் : சோலாப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் துல்ஜாபூர் உள்ளது.

வான் மார்க்கமாக : புனே விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக துல்ஜாபூர் செல்லலாம்.

Share this Story:

Follow Webdunia tamil