சரஸ்வதியின் கோயில் 'போஜ்சாலா'
Publish Date: Mon, 11 Feb 2008 (12:36 IST)
Updated Date: Mon, 11 Feb 2008 (12:33 IST)
வரலாற்றுச் சிறப்புமிக்க 'தார்' நகரத்தில் அமைந்துள்ள கல்விக் கடவுள் சரஸ்வதியின் கோயிலான 'போஜ்சாலா'வில் ஒவ்வொரு ஆண்டும் வசந்த பஞ்சமி விழாவன்று பெருமளவிலான பக்தர்கள் கூடுகின்றனர்.
பர்மார் வம்சத்து மன்னர்களின் தேர்ந்த கட்டடக் கலைக்கு அடையாளமாக போஜ்சாலா திகழ்கின்றது. வசந்த பஞ்சமி நாளன்று, இந்த இடத்தின் பெருமை மிகுந்த வரலாற்றை உணர்த்தும் விதமாக சிறப்புமிக்க 'யாக்னா' உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டும் இங்கு வசந்த பஞ்சமி விழா வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி மிகுந்த கோலாகலமாகவும் பக்திப் பரவசத்துடனும் நடக்க உள்ளது.வரலாற்றின்படி, 'தார்' நகரத்தை ஆண்ட மன்னன் போஜ் ஒரு சிறந்த சரஸ்வதி பக்தனாக இருந்தான். இவனுடைய ஆட்சி காலத்தில் சரஸ்வதி வழிபாட்டின் பெருமை போற்றப்பட்டது. பண்பாடு, கலை, சமஸ்கிருதம் உள்ளிட்ட துறைகளின் முக்கியக் கல்வி மையமாகத் 'தார்' நகரம் திகழ்ந்தது. சரஸ்வதியின் அருளால், அரசியல், வாஸ்து சாஸ்திரம், சாங்கியம், ஜோதிடம், யோகா போன்ற பல்வேறு துறைகளில் புலமை பெற்றான் போஜ். அவன் எழுதிய புத்தகங்கள் இன்றைய காலத்திற்கும் பொருந்துவதாக உள்ளன.
கி.மு. 1000 முதல் 1055 ஆம் ஆண்டுவரை ஆண்ட மன்னன் போஜ் உருவாக்கிய உயர்கல்வி மையம்தான் பின்னர் 'போஜ்சாலா' என்று அழைக்கப்படுகிறது. அக்கால இலக்கியங்கள் தார் நகரத்தின் பெருமைகளையும், அதன் பழமையையும் முற்றுமுழுதாக விளக்கிக் கூறுகின்றன. கட்டக்கலை...
உயர்ந்த சுவர்களால் சூழப்பட்ட திறந்த வெளியில் போஜ்சாலா கட்டப்பட்டுள்ளது. பிரதான கூடத்திற்கு அருகில் கலைநயம் மிக்க தூண்களும், சிற்பங்கள் நிறைந்த மிகப்பெரிய வழிபாட்டுக் கூடமும் உள்ளன. கூடங்களின் மேற்கூரையில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மனதை ஈர்க்கின்றன. தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் அக்காலக் கலைஞர்களின் திறனைப் பறைசாற்றுகின்றன.
போஜ்சாலாவில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காவியம் கூறப்பட்டுள்ளது. ராஜ்குரு மதன் என்பவரால் எழுதப்பட்ட இக்காவியம் அர்ஜூன் வர்ம தேவின் காலத்தில் கல்வெட்டுகளாகச் செதுக்கப்பட்டது. புகழ்பெற்ற சமண மதக் கல்வியாளர் ஆஷாதரின் மாணவர் தான் ராஜ்குரு மதன் ஆவார். ஒவ்வொரு ஆண்டும் வசந்த பஞ்சமி விழாவில் இவரின் காவியம் நாடகமாக நிகழ்த்தப்படுகிறது. லண்டனில் சரஸ்வதி... முன்பு ஒரு காலத்தில் போஜ்சாலாவின் வளாகத்திற்குள் வாக்தேவி(சரஸ்வதி) கோயில் இருந்தது. அதிலிருந்த சரஸ்வதி சிலை மிகப்பெரியதாகவும் பிரமிக்க வைப்பதாகவும் இருந்தது. ஆனால், ஆங்கிலேயர்கள் அந்தச் சிலையை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். தற்போது அந்தச் சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளதால், வசந்த பஞ்சமியன்று போஜ்சாலாவிற்கு வரும் பக்தர்கள், சரஸ்வதியின் ஓவியத்தை வழிபடுகிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் கருதி போஜ்சாலாவை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. மத்திய அரசின் உத்தரவின் பேரில், ஒவ்வொரு ஆண்டும் வசந்த பஞ்சமி நாளன்று மட்டும் ஹிந்து பக்தர்கள் இங்கு வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். இதுதவிர ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அரிசி, மலர்களைக் கொண்டு வழிபட ஹிந்துக்களுக்கு அனுமதி உண்டு.
எப்படிச் செல்வது?
சாலை மார்க்கமாக: இந்தூரில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும், ரட்லம் நகரிலிருந்து 62 கி.மீ. தொலைவிலும் உள்ள இத்தலத்திற்கு பேருந்து, காரில் சென்று அடையலாம்.
அருகில் உள்ள இரயில் நிலையம்: இந்தூர் (60 கி.மீ.), ரட்லம் (62 கி.மீ.)
அருகில் உள்ள விமான நிலையம்: இந்தூர் தேவி அகல்யா விமான நிலையம் (60 கி.மீ.)