சமணர்களின் சித்தா ஷேத்ரா பாவங்கஜா!
இந்த வார புனிதப் பயணத்தில் நாங்கள் உங்களை உலகப் புகழ்பெற்ற சமணக் திருத்தலமான சித்தா ஷேத்ரா பாவங்கஜாவிற்கு அழைத்துச் செல்கிறோம். இங்கு இந்த நூற்றாண்டின் முதல் மஹா மஸ்ட்டகாபிஷேகம் மிக அண்மையில் சிறப்பாக நடத்தப்பட்டது. பாவங்கஜாவின் இருப்பிடமானது மிகப்பெரிய சமயச் சான்றோர்கள் பலரின் முக்திக்கு வழிகாட்டியுள்ளது.
காத்பூரா மலைத் தொடரின் நடுவில் 4,000 அடி உயரத்தில், சமண மதத்தை நிறுவியவரான முதல் தீர்த்தங்கரர் சிஷப் தேவின் திருவுருவச் சிலை, 84 அடி உயரத்துடன் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அமைந்துள்ளது. இந்த இடம் பாவங்கஜா எனப்படுகிறது. இந்தச் சிலை உலகிலேயே மதிப்பு மிக்கதுடன் கலை நயத்திலும் உயரியது. தியான நிலையில் காட்சியளிக்கும் இச்சிலை, ஒன்றாமை, அமைதி, கலை, வெளிப்பாடு உள்ளிட்ட உயரிய கருத்துகளை பறைசாற்றுகிறது. வரலாறு : இறுதியாக, பாவங்கஜா எப்போது உருவாக்கப்பட்டது என்பதை மிகச் சரியாகக் கணிக்க முடியாவிட்டாலும், 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு அமைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கோயிலுக்குச் செல்லும் சாலைகளில் காணப்படும் கல்வெட்டுகளில், விக்ரம வருடம் 1516 இல் பட்டாரக் ரட்டனகீர்த்தி என்ற மன்னர் கோயிலைப் புதுப்பித்த குறிப்புகள் உள்ளன. அத்துடன் மேலும் 10 சிறிய கோயில்களையும் (ஜைனாலயா) அருகிலேயே அவர் உருவாக்கியுள்ளார்.அடுத்து வந்த முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி காலத்தில், இச்சிலை கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு கடும் வெயிலிலும் சூரைக் காற்றுடன் பெய்த பலத்த மழையிலும் பாதுகாப்பின்றி விடப்பட்டதால் பெருத்த சேதமடைந்தது. இது திகம்பர் சமணர்களின் கவனத்தை ஈர்த்து, இதன் பாதுகாப்பில் கவனம் செலுத்தும்படி ஆக்கியது. பின்னர் தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களின் ஆலோசனையுடன் பாவங்கஜாவின் மறுசீரமைப்புக்கான திட்டம் உருவாக்கப்பட்டது.
விக்ரம வருடம் 1979 இல் மறுசீரமைப்புப் பணிகள் முடிந்தன. வெயிலிலும் மழையிலும் இருந்து சிலையைப் பாதுகாக்கும் வகையில், 40அங்குல நீள அகலம், 1.5 அங்குல தடிமன் என்ற அளவில் தாமிரத் தகடுகள் பொருத்திய கூறை அமைக்கப்பட்டது. பூஜைகள், அபிஷேகங்கள் செய்வதற்கான மேடை அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. சிலை முழுமையும் பளபளப்பு ஊட்டப்பட்டது. அந்தக் காலத்திலேயே பாவங்கஜாவின் மறுசீரமைப்புக்கு ரூ.59,000 செலவானதாம். இப்போது இச்சிலை மிகவும் பாதுகாக்கப்பட்டு உள்ளது.
சிலையின் விவரங்கள்:
மொத்த உயரம் : 89 அடி
இரு கைகளுக்குமான இடைவெளி : 26 அடி
ஒரு கையின் நீளம் : 46'-6"
இடுப்பிலிருந்து பாதம்வரை உள்ள நீளம் : 47'
பாதத்தின் நீளம் : 13'-09"
மூக்கின் நீளம் : 03'-03"
கண்ணின் நீளம் : 03'-03"
காதின் நீளம் : 09'-08"
இரு காதுகளுக்கும் இடையிலான இடைவெளி : 17'-06"
பாதத்தின் அகலம் : 05'-3"
மலை உச்சியில் அமைந்திருக்கும் இக்கோவில் சித்தா பூமி என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பாவங்கஜா சிலை கடவுள் ஆதிநாத் என்று அறியப்பட்டு வணங்கப்படுகிறது. மகா மஸ்ட்டகாபிஷேகம் :
பாவங்கஜாவின் கடவுள் ஆதிநாத்தின் மஹா மஸ்ட்டகாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. இது 2008 ஆம் ஆண்டு ஜனவரி 20 முதல் பிப்ரவரி 04 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாக் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாவங்கஜாவிற்கு வந்து புனிதமான தருணங்களை ரசித்தனர். மஹா மஸ்ட்டகாபிஷேகத்திற்கு தண்ணீர், பால், குங்குமம் பயன்படுத்தப்படுகிறது. துக்தாபிஷேகத்தில் கடவுளின் தலையிலிருந்து பாதம் நோக்கிப் பாலை ஊற்றும்போது, கூடி நிற்கும் லட்சக்கணக்கான பக்தர்களும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஆடிப்பாடி ஆர்ப்பரிக்கின்றனர். அதேநேரத்தில் குங்குமம் சிலையின் நிறத்தை பழுப்பிலிருந்து காவியாக மாற்றுகையில் பக்தர்களின் பரவசம் உச்சத்தை அடைகிறது. பாவங்கஜாவின் பளபளப்பான காவியைக் காண்பதற்காகவே திரண்டு வந்து, அது நிறைவேறியவுடன் பக்தர்கள் எழுப்பும் மகிழ்ச்சி ஆரவாரத்தை காணக்காணத் திகட்டுவதில்லை. பக்தி, பரவசம் மற்றும் உண்மையைத் தேடி அவர்கள் ஓடுகின்றனர். இவ்விழாவில் பழங்குடியினரும், மலைவாழ் மக்களும் திரளாகப் பங்கேற்கின்றனர். அவர்கள் தங்கள் வீட்டுப் பெண்கள், குழந்தைகளுடன் இத்திருவிழாவை மலை முகடுகளில் நின்று ரசிக்கின்றனர்.
அழகு: பர்வானியில் இருந்து பாவங்கஜாவிற்குச் செல்லும் மலைப் பாதை வளைவுகள் நிறைந்தது. மழைக் காலத்தில் கூட சிறிது இடையூரின்றி வனப்புடன் நம்மை வரவேற்கிறது. சாத்பூரா மலைகளின் அழகில் தங்கள் மனதைப் பறிகொடுத்த சுற்றுலாப் பயணிகள் மீண்டும் மீண்டும் பாவங்கஜாவிற்கு வருகின்றனர். மாநில அரசு கூட அண்மையில் பாவங்ஜாவை பக்திச் சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது.
எப்படி அடைவது : இத்திருத்தலத்திற்கு இந்தூர் (155 கி.மீ) மற்றும் கண்ட்வாவில் (180 கி.மீ) இருந்து பேருந்து அல்லது காரில் செல்ல முடியும்.
அருகில் உள்ள விமான நிலையம்: தேவி அகல்யா விமான நிலையம், இந்தூர் (155 கி.மீ)
அருகில் உள்ள ரயில் நிலையம்: இந்தூர், கண்ட்வா
எங்கு தங்குவது : பள்ளத்தாக்கில் 50 அறைகளைக் கொண்ட 6 தர்மசாலாக்கள் உள்ளன. பாவங்கஜாவில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பர்வானியில் அனைவருக்கும் ஏற்ற வாடகை விடுதிகள் உள்ளன.