இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீக வழிகாட்டிகளில் ஒருவராகவும், உலக மக்களுக்கு தொடர்ந்து அருள் பாளித்து வருபவராகவும் திகழும் ஷிர்டி சாய் பாபாவை இறைவனின் அவதாரமாகவே கண்டு பல கோடி மக்கள் வழிபட்டு வருகின்றனர். சாய் என்றால் ஷக்சாத் ஈஸ்வர் என்பதன் சுருக்கமாகும். அதன் பொருள் முழுமையான இறைவன் என்பதாகும். மராட்டிய மாநிலம் ஷிர்டியில் தோன்றி தனது வாழ்நாளை அங்கேயே கழித்து சமாதியடைந்த சாய் பாபா, தன்னைச் சந்தித்தவர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கியது மட்டுமின்றி, அவர்கள் மனதில் அன்பை விதைத்து, எப்பொழுதெல்லாம் அவர்கள் நாடுகின்றார்களோ, அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களின் வாழ்க்கையில் அமைதியையும், மகிழ்ச்சியையும் நிலவச் செய்தார். 19
ஆம் நூற்றாண்டில் பிறந்து 1918ல் சமாதியடைந்த பாபா, தனது பிறப்பின் நோக்கமே எவ்வித பாகுபாடும் பார்க்காமல் எல்லோருக்கும் ஆசி வழங்குவதே என்று கூறியுள்ளார். தன்னை நாடி வந்த நோயாளிகளை ஆசிர்வதித்து அவர்களை குணப்படுத்தினார். பலரின் உயிரைக் காத்தார். விபத்துகளை தவிர்த்தார். பிள்ளைப் பேறு வேண்டியவர்களுக்கு அப்பேற்றை வழங்கினார். ஏழ்மையில் வாடியவர்களுக்கு நல்வாழ்வை அளித்தார். மனிதர்களை அமைதிப்படுத்தியது மட்டுமின்றி, மற்றவர்களோடு இசைந்து வாழவும் உதவினார். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னிடம் அடைக்கலமான பக்தர்களை அந்த உன்னதமான ஆன்மீக பரிணாம வளர்ச்சிக்கும், திருவுருமாற்றத்திற்கும் வழிகாட்டினார்.
தனது வார்த்தையாலும், நடத்தையாலும் சாதகர்களுக்கு வழிகாட்டிய உன்னத பேரொளியின் அடையாளமாக பாபா திகழ்ந்தார் என்று அவரைக் கண்ட, அவர் காலத்தில் வாழ்ந்த ஒருவர் கூறியுள்ளார். பாபாவின் பக்தர்களுக்கு அவர்தான் கடவுள். இது அவர்களின் கற்பனை அல்ல. அனுபவப்பூர்வமாக அவர்கள் கண்டது. உலகெங்கிலிருந்தும் சாய் பாபாவின் ஆசியைப் பெற இன்னும் அவரது கோயிலிற்கு லட்சக்கணக்கானோர் வருகின்றனர்.
ஷிர்டி சாய் பாபாவின் கோயில் ஷிர்டி கிராமத்தில் 200 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயிலிற்கு ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் சராசரியாக 20 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். விழாக்காலங்களில் ஒவ்வொரு நாளும் சாய் பாபாவின் தரிசனத்தைப் பெற 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகின்றனர்.
1998-99 ஆம் ஆண்டுகளில் புனருத்தாரணம் செய்யப்பட்ட சாய் பாபா கோயிலில் இப்போது அவரை தரிசிப்பதற்கு என்று தனிப்பாதை, பக்தர்களுக்கு உணவளிக்க சாப்பாட்டுக் கூடம், நன்கொடை அளிக்கவும், பிரசாதம் வழங்கவும், ரயில் பயணச் சீட்டை முன் பதிவு செய்யவும், பாபாவின் அருளாசிகளை விளக்கும் புத்தகங்கள் விற்கும் கடையும், சிற்றுண்டி சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இவை யாவற்றையும் சாய் பாபா சன்ஸ்தான் செய்து வருகிறது.
ஷிர்டிக்குச் செல்வது எப்படி?
சாலை மார்க்கமாக : மும்பையில் இருந்து 161 கி.மீ., புனேயில் இருந்து 100 கி.மீ., ஹைதராபாத்தில் இருந்து 360 கி.மீ., மான்மாடில் இருந்து 29 கி.மீ., ஒளரங்காபாத்தில் இருந்து 66 கி.மீ., போபாலில் இருந்து 277 கி.மீ., பரோடாவில் இருந்து 202 கி.மீ. தூரத்தில் உள்ள ஷிர்டிக்கு எல்லா நாட்களிலும் பேருந்து வசதி உண்டு.
ரயில் மார்க்கமாகச் செல்வோர், ஷிர்டிக்கு அருகில் உள்ள மான்மாட் ரயில் நிலையத்தில் இறங்கிச் செல்ல வேண்டும்.
விமானம் மார்க்கமாகச் செல்வோர் மும்பை அல்லது புனேயில் இறங்கிச் செல்ல வேண்டும்.