புனித கையிலாய மலையும், மானசரோவர் ஏரியும்!
நம் நாட்டில் வடக்கு முதல் தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை சிவபெருமானின் திருத்தலங்கள் என்று ஏராளமாக இருந்தாலும், இமயமலைத் தொடரில் 22 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கையிலாய மலையே சிவபெருமானின் இருப்பிடமாக புராண இதிகாசங்களால் குறிக்கப்பட்டுள்ளது.கையிலாய மலைக்குச் செல்வதும், அதற்கு அருகில் உள்ள மானசரோவர் ஏரியில் நீராடுவதும் (மிகக் குளிர்ந்த நீராதலால் பலர் அதனை கொஞ்சம் எடுத்து தலையில் தெளித்துக் கொள்வர்) பெரும் புனிதமாகக் கருதப்படுகிறது.கையிலாயத்திற்கும், மானசரோவருக்கும் செல்வதற்கு நம்முள் உறையும் அந்தராத்மனுக்கு அழைப்பு இருந்தால் மட்டுமே செல்ல முடியும் என்பது நம்பிக்கை. ஆயிரக்கணக்கான முனிவர்களில் இருந்து தத்துவார்த்திகள், சாதாரண மக்கள் என இறையுணர்வு நிரம்பித் தவழும் அப்புனிதத் தலத்தின் ஆன்மீகப் பாங்கை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. பேரமைதியின் பிரம்மாண்டம் அது.
கையிலாய மலை என்று அழைக்கப்படும் மலையில் உள்ள அப்பாறைப் பகுதியிலுள்ள லிங்கம் இயற்கையாக உருவானது என்று (சுயம்பு) கூறுகின்றனர்.இப்புவியில் உயிரினங்கள் தோன்றிய காலத்தில் இருந்தே கைலாயமும், மானசரோவரும் இருந்துள்ளதாக புராணங்கள் பகர்கின்றன.வெள்ளிப் பனிமலையாய் மிளிரும் இந்த கைலாய சிகரத்தில்தான் நாத பிரம்மம் எனும் சப்தமும், ஒளியும் ஒன்றாகி ஓம் எனும் பிரணவ மந்திரத்தில் கலப்பதாக யோக பாதைகளில் கூறப்பட்டுள்ளது.கைலாய மலையும், மானசரோவரும் இந்தியாவின் ஆன்மீகத் தத்துவத்தையும் நாகரீகத்தையும் பறைசாற்றும் பேருணர்வின் இதயமாக கொள்ளப்படுகிறது. இம்மலையின் சரிவுகளில்தான் கல்ப விருட்சம் எனும் கேட்டதை அளிக்கும் தெய்வீக மரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கைலாய மலையின் தென்முகத்தை நீலக்கல்லையும், கிழக்கு முகத்தை படிகக் கல்லையும், மேற்கு முகம் சிவப்புக் கல்லையும், அதன் வடக்கு முகம் தங்கத்தையும் குறிப்பதாக கூறப்படுகிறது.
செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் இருப்பிடமும் இங்குதான் உள்ளது. கங்கை நதி மகாவிஷ்ணுவின் காலடியில் உற்பத்தியாகி வேகமாக புவியை நோக்கி இறங்கியபோது அதனை தனது சடை முடியில் தாங்கி வேகத்தைக் குறைத்து வழிந்தோடச் செய்தார் சிவபெருமான் என்று கூறப்படுகிறது.இந்துக்களை மட்டுமின்றி பெளத்தர்களுக்கும் இது புனிதத் தலமாகும். புத்தரின் கோபமான வடிவமான டெம்சோக், கைலாய மலைச் சிகரத்தில்தான் அமர்ந்திருப்பதாக பெளத்தர்கள் கூறுகின்றனர்.இவ்விடத்தை தர்மபாலா என்றும் அழைக்கின்றனர். இந்த இடத்திற்கு புனிதப் பயணம் வருபவர்கள், பந்தங்களில் இருந்து விடுபட்டு, நிர்வாண நிலை அடைவார்கள் என்பது புத்த மத நம்பிக்கை. சமணர்களுக்கும் இது புனிதத் தலம்தான். அவர்களின் முதல் தீர்த்தங்கரர் இங்குதான் நிர்வாண நிலையை எட்டியதாக கூறுகின்றனர். சீக்கிய மதத்தினர் வழிபடும் குருநானக் இங்கு தியானம் செய்ததாகவும் கூறப்படுவதுண்டு. எனவே கையிலாய மலையும் மானசரோவர் ஏரியும் எல்லா மதத்தினராலும் புனிதமாக கருதப்படும் புண்ணியத் தலமாகும். மதங்களின் ஆன்மீக ஒற்றுமையை இவ்வுண்மை புலப்படுத்துகிறது.மானசரோவர் தரிசனம்!மானசரோவர் ஏரியை மன்காட்டா மகாராஜா கண்டுபிடித்ததாகக் கூறுகின்றனர். மன்காட்டா என்ற (பின்னர் அவர் பெயர் சூட்டப்பட்ட) மலையின் அடிவாரத்தில் நின்று அவர் செய்த தவத்தினால் மானசரோவர் ஏரி உருவானதாகக் கூறப்படுகிறது. இந்த ஏரியின் மையப் பகுதியில் ஒரு மரம் இருப்பதாக பெளத்தர்கள் நம்புகின்றனர். அந்த மரத்தின் கனி இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா மருத்துவக் குணங்களையும் கொண்டதாகவும் அது மன, உடல் வியாதிகள் அனைத்தையும் தீர்க்கக் கூடியது என்பதும் அவர்களின் நம்பிக்கை.இவ்வளவு பெருமை மிக்க இந்தப் புண்ணிய தலத்திற்குச் செல்வதென்றால் அதற்கென தனித்த பயணம் மேற்கொள்ள வேண்டும்.இங்கு நிலவும் சூழ்நிலையும், இவ்விடத்தை அடையும் பாதையும் கடினமானது. கடல் மட்டத்தில் இருந்து 3,500 மீட்டர் உயரமுள்ள இப்பகுதியில் பிராண வாயு குறைவாக இருப்பதனால் தலைவலி, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும். ஆனால் சிறிது நேர ஓய்வில் எல்லாம் சரியாகிவிடும். அந்த சூழலுக்கு ஏற்றவாறு நமது உடலின் தன்மை மாறிக் கொள்ளும் என்று அங்கு சென்று வந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இருந்து புனித கையிலாயத்திற்கு எவ்வாறு செல்வது?1.
சாலை மார்கம்கைலாய மலைக்கும் மானசரோவர் ஏரிக்கும் இந்திய அரரே புனிதப் பயணத்தை ஏற்பாடு செய்து தருகிறது. 28 முதல் 30 நாட்கள் வரை அவ்வப்போது நடக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பயணத்தை அயலுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது.மிகக் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால் திருவுலச் சீட்டு மூலம் பயணிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.2.
விமான மார்கம்நேபாளத் தலைநகர் காட்மாண்டுவிற்கு விமானத்தில் சென்று அங்கிருந்து சாலை மார்கமாக மானசரோவருக்குச் செல்லலாம். 3.
ஹெலிகாப்டர்
காட்மாண்டுவில் இருந்து நேபாள் கஞ்ச் என்ற இடத்திற்கும் அங்கிருந்து சிமிகோட் என்ற இடத்திற்கும் சென்று பிறகு ஹெலிகாப்டர் மூலம் ஹில்சா என்ற இடத்திற்கு சென்று அங்கிருந்து சாலை வாகனங்களின் மூலம் மானசரோவரை அடையலாம்.
காட்மாண்டு சென்று அங்கிருந்து சீன நாட்டின் லாசா நகரத்திற்குப் போய், திபெத் பீடபூமியில் உள்ள ஷிகாட்சே - யான்சே - லாட்சே - பிரயாங் வழியாக மானசரோவரை அடையலாம்.