உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவையும் கன்னி மரியாளையும் தங்களது தெய்வமாக வணங்கி வருகின்றனர். கிறிஸ்து பிறப்பு நன்னாளையொட்டி கேரள மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க செருதலை புனித அமலோற்பவ மாதா ஆலயத்தின் வரலாற்றினை காண்போம்.
கிறிஸ்மஸ் விழாவின் போது குழந்தை இயேசுவையும் அவரது தாய் மரியாளையும் உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் வணங்கி ஆராதிக்கின்றனர். பரிசுத்த தேவமாதா இயேசுவின் தாயாக இருப்பதுடன், அவரை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் தாயாக இருந்து வருகிறார். இறைமகன் இயேசு கிறிஸ்து தனது உடலையும், இரத்தத்தையும் திருப்பலி மூலம் கிறிஸ்தவர்களுக்கு நாள்தோறும் வழங்கி வருகிறார்.உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடவுளின் அருளை பெற ஒரு பாலமாக அன்னை மரியாளை கருதுகின்றனர். மரியாள் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றும், திருக்குடும்ப வாழ்க்கையில் இறைமகன் இயேசுவுடன் வாழ்ந்ததாகவும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அதன் அடிப்படையில் பக்தி முயற்சிகள் மற்றும் திருப்பலிகளில் பங்கேற்பதின் மூலம் நற்கருணையையும், அவரின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்கின்றனர்.கன்னி மேரி இறைமகன் இயேசு கிறிஸ்துவின் தாய் என்பதை எல்லோரும் அறிவோம். கடந்த 1854ஆம் ஆண்டு மாதா விண்ணேற்றம் அடைந்த நாளன்று போப்பாண்டவர் 9ஆம் பயஸ் மாதா ஜென்ம பாவம் இல்லாமல் உற்பவித்தவள் என்றும், இந்த உண்மையை கிறிஸ்தவர்கள் முழு மனதுடன் நம்ப வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.கன்னிமேரி பரிசுத்தமானவள் என்ற நம்பிக்கை 4ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்களிடம் இருந்து வந்தது கவிஞர் புனித ஆஃப்ரேம் எழுதிய 'நிஷிபியான்' கவிதைகளில் இருந்து தெரியவருகிறது. மாதா பரிசுத்தமானவள் என்பதன் கொண்டாட்டங்கள் 7ஆம் நூற்றாண்டில் இருந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1854 ஆம் ஆண்டு மாதாவை ஜென்ம பாவம் இல்லாமல் உற்பவத்த பரிசுத்தமானவள் என்ற பிரகடனத்தை போப் 9வது பயஸ் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் (வத்திக்கான் சங்க ஏட்டில்) பதிவு செய்தார்.
கத்தோலிக்க திருச்சபையின் இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக புதிய ஏற்பாட்டின் சில பகுதிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. லூக்காஸ் எழுதிய திருமுகத்தில் முதல் அதிகாரம் 48வது வசனத்தில், தேவ தூதர் மரியாளின் முன் தோன்றி அருள் நிறைந்தவளே வாழ்க. ஆண்டவர் உம்முடனே என்று தொடங்கி உச்சரித்த வார்த்தைகள் மரியாளை பரிசுத்தமானவள் என்று குறிப்பிடுவதை கத்தோலிக்க குருக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதனையே கத்தோலிக்க திருச்சபையின் தத்துவயியலும் தொடர்ந்து பறைசாற்றி வருகிறது. கிறிஸ்துவும் அன்னை மரியாளும் பிரிக்க முடியாதவர்கள் இதுவே மரியாள் பாவங்களில் இருந்து முற்றிலும் விடுபட்டவள் என்பதற்கு சிறந்த ஆதாரமாகும்.
புனித மரிய அன்னை திருத்தலம் முட்டம்
கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம் செருதலையில் அமைந்துள்ள புனித மேரி ஃபெரோனா தேவாலயம், அம்மாநிலத்தில் உள்ள மரியாயின் பக்தர்களின் முக்கிய திருத்தலமாக விளங்கி வருகிறது. இத்திருத்தலத்திற்கு பல்வேறு மதங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து அன்னை மரியாளிடம் தங்களது வளமான வாழ்விற்காக பிரார்த்தனை செய்கின்றனர்.புனித அமலோற்பவ மாதா ஆலயத்தில் முழு மனத்துடன் ஜெபம் செய்யும் பக்தர்களுக்கு அன்னை அரும்பெரும் செயல்களை செய்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர். மரியாளின் பக்தர்கள் தங்களுடைய வியாபாரம், புதிய வீடு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நல்ல காரியங்களை செய்யும் முன் இத்திருத்தலத்திற்கு வந்து அன்னையின் பாதத்தில் வணங்கி தொடங்குகின்றனர். அதே போன்று இக்கட்டான நேரங்களில் மன ஆறுதலுக்காக அன்னையின் திருத்தலத்திற்கு அவளுடைய கருணைக்காக பிரார்த்தனை செய்கின்றனர்.மரியாளின் பக்தர்கள் தங்கள் வாழ்வில் நடைபெறும் திருமணம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட நல்ல கொடைகளை இறைவனிடம் பெற்றுத்தரும் பாலமாக அன்னை மரியாளை கருதுகின்றனர்.
இத்திருத்தலத்தின் பலி பீடம் போர்த்துக்கீசிய கட்டிடக் கலை முறைப்படி வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த பீடத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னையின் திருவுருவம் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரான்சில் இருந்து கொண்டுவரப்பட்டது.வரலாற்று சிறப்பு மிக்க செருதலை முட்டம் புனித மேரி பெஃரோனா திருத்தலம் 900 ஆண்டு வரலாற்றை கொண்டது. செருதலா ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு வணிக நகரமாக விளங்கியுள்ளது. ஆரம்ப காலங்களில் யூதர்கள் இங்கு வந்து வணிகம் செய்துள்ளனர். இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் இப்பகுதிக்கு வந்தபோது கொக்கமங்கலம் என்ற இடத்தில் தங்கி இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அவர் கேரள மாநிலத்தில் உருவாக்கிய ஏழு திருத்தலங்களில் ஒன்றாக இத்திருத்தலம் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் பிற்காலத்தில் அதிக செல்வாக்குடன் வளர்ச்சி அடைந்த காலத்தில் செருதலாவை அடுத்த முட்டத்தில் ஒரு புதிய ஆலயத்தை கடந்த 1023ஆம் ஆண்டு கட்டியுள்ளனர். அத்திருத்தலத்தில் பரிசுத்த தேவமாதாவின் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.கன்னிமரியானின் பரிசுத்தத்தை போற்றும் நாளாக ஆண்டு தோறும் டிசம்பர் 8ஆம் தேதி விழா கொண்டாடப்படுகிறது. இதனை கடந்த 1476 ஆண்டு போப்பாண்டவர் 6ஆம் சிக்ஸ்டர்ஸ் தொடங்கி வைத்துள்ளார். இது காலம் காலமாக தொடர்ந்து கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முட்டத்தில் உள்ள இத்திருத்தலத்தில் ஆண்டிற்கு இரண்டு விழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்னையின் திருவிழா டிசம்பர் மாதம் 8ஆம் தேதிக்கு பின்னர் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையும், ஜனவரி மாதம் 21ஆம் தேதி அன்னையின் திருமண நாளும் கொண்டாடப்படுகிறது. அன்னையின் திருமண நாள் விழா உலகிலேயே முட்டம் திருத்தலத்தில் மட்டும் கொண்டாடப்படுவது இத்திருத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். இந்த இரு விழாக்களின் போது அன்னை மற்றும் குழந்தை இயேசுவை திருவுருவங்கள் பவனியாக எடுத்து வரப்படுகின்றன.
இத்திருத்தலத்தின் பீடம் புதுப்பிக்கப்பட்டு பெரிய திருத்தலமாக கடந்த 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் வடிவமைப்பு போர்த்துக்கீசிய கட்டிடக்கலையை எதிர்ரொலிப்பதாக அமைந்துள்ளது. புனித பிரான்சிஸ் சவேரியார் கோவாவிற்கும் கேரளாவிற்கும் வந்தபோது இத்திருத்தலத்தில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சவேரியார் இறந்து குழந்தை ஒன்றுக்கு உயிர் கொடுத்ததாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த திருத்தலத்தின் தெற்கு மூளையில் ஒரு சிலுவை அமைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் எர்ணாகுளம்-அங்கமாலி உயர் மறைமாவட்டம் இத்திருத்தலத்தை மரியாளின் திருத்தலமாக அறிவித்துள்ளது. கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மரியாளின் பக்தர்கள் அன்னை தங்களுக்கு செய்த கொடைகளுக்கு நன்றி தெரிவித்து இத்திருத்தலத்திற்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.
புனித மரியாள் என்பது மனித குலத்தின் பாதுகாவளி என்று பொருள். மரியாளின் அன்பு, அருள், ஆசீர்வாதத்தை பெறுவதற்காக மதம், இனம், மொழிகளை கடந்து ஏராளமானோர் இத்திருத்தலத்திற்கு வருகின்றனர். பரிசுத்தமான புனித வாழ்க்கை, ஆசீர்வாதத்தையும், அவளுடைய ஆதரவையும் பெற இந்த புனித மரியாளின் முன்பு முழந்தாள் இடுவோமா?