விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற திரிசக்தி பீடம்!
, சனி, 1 டிசம்பர் 2007 (16:19 IST)
இச்சா சக்தியின் வடிவமாக ஸ்ரீமகாகாளியும், கிரியா சக்தியின் வடிவமாக ஸ்ரீமகாலட்சுமியும், ஞான சக்தியின் வடிவாக ஸ்ரீமகா சரஸ்வதியும் ஒன்றாக எழுந்தருளி அருள் புரியும் உன்னதத் தலம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள திரிசக்தி பீடமாகும்!விஜயவாடாவில் கிருஷ்ணவேணி நதிக்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோயில், ஸ்ரீகாளி மாதா அம்மாவாரி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.தல புராணம் :ஆந்திராவின் தென்பகுதியில் உள்ள நெல்லூர் மாவட்டத்தின் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சுயம்புவானா ஸ்ரீமகா காளியின் சிலையைக் கண்ட ராணுவப் பொறியாளர் ஒருவர் அதை விஜயவாடாவிற்கு கொண்டு வந்தார். அதனை 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி குஞ்சராமசாமி என்ற அம்மனின் பக்தர் கிருஷ்ணவேணி நதிக்கரையில் வைத்து பிரதிஷ்டை செய்தார்.
அடுத்த 11 ஆண்டுகளுக்கு அவர் அங்கு சிறிய கோயிலை கட்டி அம்மனை பூஜித்து வந்தார். அதன்பிறகு அந்த கோயில் மூடப்பட்டுவிட்டது. 7 ஆண்டுகளுக்கு பிறகு 1965ல் துராக வெங்கடேஸ்வரலு என்பவர் அந்தக் கோயிலை திறந்தபோது ஆச்சரியப்படத்தக்க வகையில் அங்கு அம்மன் இருந்த கருவறையில் ஒளி நிரம்பிய மகாகாளியின் சக்தி இருப்பதைப் பார்த்தனர். அதன்பிறகு பஞ்சாமிர்த ஸ்தாபனா, ஸ்ரீ லஷ்மி கணபதி ஹோமம், லட்ச குங்கும அர்ச்சனை ஆகியவற்றை செய்து அந்தக் கோயிலில் நிரந்தரமாக பூஜை செய்து வந்தனர். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி, தீபாவளி காலங்களில் சிறப்பு உற்சவங்கள் நடைபெற்று வருகிறது.
இங்குள்ள மகாகாளி 10 முகங்களுடனும், 10 கால்களுடனும் நீல நிறத்தில் உள்ளாள். 8 கைகளில் வாள், சாட்டை, சுதர்சன சக்கரம், வில், அம்பு, சுருக்குக் கயிறு, வெட்டப்பட்ட மனிதத் தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தி உள்ளாள். இது தேவியின் தமசிக குணத்தை வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
மகாகாளியே யோக நித்ரா என்றும் அழைக்கின்றனர். இவர் விஷ்ணுவை உறங்கவைத்து விட்டதாகவும், அசுரர்களான மது, காய்தபா ஆகியோரை அழிக்க உறக்கத்தில் இருந்து அவரை எழுப்புமாறு பிரம்மா கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த மகாகாளி அவரை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இங்குள்ள மகாசக்தி, தேவியின் ராஜசிக அம்சத்தை வெளிப்படுத்தும் விதத்தில் சிகப்பு நிறத்தில் பவள பிழம்பாக காட்சியளிக்கிறாள். தமது 18 கைகளில் ருத்ராட்சம், போர்க்கோடாரி, சாட்டை, அம்பு, தாமரை, வில், தண்ணீர் குடம், வாள், கேடயம், சங்கு, மணி, திருசூலம், சுருக்கு, சுதர்சன சக்கரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள்.இறை சக்தியை எதிர்க்கும் மாயாசக்திகளை அழிக்க இவர் வடிவம் பெற்றுள்ளதால் செந்நிறத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவரே மகிசாசுரனை வீழ்த்தியுள்ளார். இவரை மகிசாசுர மர்த்தினி என்று சக்தி உபாசகங்கள் வழிபடுகின்றன.
தேவியின் சாத்வீக குணத்தை வெளிப்படுத்துகிறார் மஹாசரஸ்வதி. கோடைக்கால சந்திரனைப் போல பளிச்சிடும் இந்த அம்மன், தனது எட்டு கரங்களில், மணி, திரிசூலம், ஏர், சங்கு, சுதர்சன சக்கரம், வில்-அம்பு ஆகியவற்றை ஏந்தியுள்ளார்.இயற்கையில் முழுமையையும், அழகையும், பரவசத்தையும் ஏற்படுத்துகிறார். இவரே வேலையின் சக்தியாகத் திகழ்கிறார். தும்ராலோச்சனா, சண்டா, முண்டா, நிசும்பா, சும்பா ஆகிய அரக்கர்களை மகாசரஸ்வதி அழித்துள்ளார். இங்குள்ள முப்பெரும் சக்திகளை லலிதா திரிபுர சுந்தரி என்றும் அழைக்கின்றனர். திரிசக்தி பீடத்தை காணவும், அம்மன்களை வழிபடவும் வெப்துனியா உங்களுக்கு நல்வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.எப்படிச் செல்வது?
விஜயவாடா நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயிலை ரயில் நிலையத்தில் இருந்து 10 நிமிட நேரத்தில் சென்றடையலாம். ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 265 கி.மீ. தூரத்தில் உள்ள விஜயவாடாவிற்கு, ரயில், பேருந்து, விமான வசதிகள் உள்ளன.