உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் ஹனுமானின் பக்தர்களுக்காகவே ஓர் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. நாம் வணங்கும் கடவுளான ஹனுமானுக்கு அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டிருப்பது உலகிலேயே இங்கு மட்டும்தான் உள்ளது. இது லிம்கா உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. ஹனுமானின் பக்தரான சுனில் கோம்பார் என்பவர் பல்வேறு இடங்களில் இருந்து தான் சேகரித்த அரிய பொருட்களைக் கொண்டு தனது வீட்டின் முதல் தளத்தில் இந்த அருங்காட்சியத்தை அமைத்துள்ளார். லக்னோ நகரில் உள்ள இந்திரா நகரில் அமைந்துள்ள பஜ்ரங் லிங்குன்ச் என்று பெயரிடப்பட்டுள்ள இவரது வீட்டில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
ஸ்ரீராமனின் 48 குறிப்புகளைக் கொண்ட வெள்ளியிலான பாதுகைகளும்,. ஸ்ரீராமன் ஹனுமனை அழைத்த ஆயிரம் பெயர்களும் அருங்காட்சியகத்தில் உள்ளது. ஹனுமான் சகஸ்ரநாம ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருத புராணத்தில் இருந்து ஹிந்தி மொழிக்கு மாற்றப்பட்ட குறிப்புகள் உள்ளன. ஹனுமானின் கிடைத்தற்கரிய 600 படங்களை - அவற்றில் சில 17வது நூற்றாண்டைச் சேர்ந்தவை - சேகரித்துள்ள சுனில் கோம்பார், ஹனுமானின் மிக அரிதான சிலைகளையும் சேகரித்து வைத்துள்ளார்.
ஹனுமானின் தெய்வீக உருவத்தையும் சுவரில் சிற்பங்களாக செதுக்கி வைத்துள்ளார். அந்தச் சிற்பத்தில் ஹனுமானின் குடும்பம் மட்டுமின்றி, சிவபெருமான், ராமன்-சீதை, லட்சுமி அவரது ஆசிரியர் சூரியர், பவன்தேவ் ஆகியோரும் உள்ளனர். ஹனுமானின நண்பர்களான சுக்ரீவன், அங்கதன், நலன், நீலன், ஜாம்பவான் ஆகியோரும் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளனர். கோஸ்சுவாமி துளசிதாசின் திருவுருவமும் செதுக்கப்பட்டுள்ளது.
ஹனுமானை புகழ்ந்து பாடப்பட்ட ஏராளமான பாடல்களை குறுந்தகடுகளில் பதிவு செய்து வைத்துள்ளார். ஹனுமானைப் பற்றிய 250 புத்தகங்கள் மட்டுமின்றி, அவரது கிரீடம், கடுக்கண், கடா, கொடி, சிந்தூர் ஆகியனவும் இங்கு உள்ளன. நீம் கரெளலி பாபா, குரு சமர்த்தான் ராம்தாஸ் போன்ற முனிவர்களின் படங்களும் இங்கு உள்ளன. ஹனுமான் தொடர்பான தகவல்களைத் தரக்கூடிய 137 இணையதளங்களில் தகவல்களும் பொறிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், 2004 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி துவக்கப்பட்டது. ஹங்கேரியைச் சேர்ந்த ஓவியரான, தனது பெயரை ராதிகா பிரியா என்று மாற்றிக்கொண்ட ஹூமில் ரோஸிலியா ராமர் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வரைந்த 7 அழகிய ஓவியங்களும் இங்குள்ளன. 1864ல் மகாராஜா ரஞ்சித் சிங் வெளியிட்ட ஹனுமானின் உருவம் பதித்து நாணயங்களும் இங்குள்ளன. ஹனுமான் குரங்கு வடிவத்தில் உள்ள அரிதான சிலை ஒன்றும் இங்கு உள்ளது. ஹனுமான் கொடியை தாங்கிக் கொண்டு ஒட்டகத்தில் பயணிப்பது, குழந்தை ஹனுமான் யானை மீது சவாரி செய்வது போன்ற சிற்பங்களும் இங்கு உள்ளது.
இவைகள் மட்டுமின்றி, ராமனைப் பற்றியும், ஹனுமானைப் பற்றியும் எழுதப்பட்ட ஏராளமான தொகுப்பையும் சுனில் வைத்துள்ளார். 7வது வகுப்பு படிக்கும் போது ஏற்பட்ட ஆர்வத்தினால் தொடர்ந்து இப்பணியை செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு விபத்தில் இவரது மூக்கு உடைந்துவிட்டது. அதுவே தனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகி விட்டது என்று கூறும் சுனில், ஜெய் பஜ்ரங் என்ற ஒரு அறக்கட்டளையும் உருவாக்கியுள்ளார்.
இவர் ஹனுமானைப் பற்றி வெளியிட்ட 4 புத்தகங்களில் துளசிதாஸ் ஹனுமான் சாதனா சப்தமணி என்ற புத்தகம் மிக அதிகமாக விற்பனையானது. ஹனுமான் தரிசனம், சுந்தர காண்ட சுந்தர் கியூன், பக்தோகா திருஷ்டிகோன், ஹனுமானின் உலகம் ஆகியன மற்ற வெளியீடுகளாகும்.
ஹனுமானைப் பற்றிய எந்த விவரம் கிடைத்தாலும் அல்லது எந்தப் பொருள் கிடைத்தாலும் தனக்கு தகவல் அளிக்குமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் சுனில். அவர்கள் தரும் பொருட்களை தனது அருங்காட்சியகத்தில் பத்திரமாக வைக்கப்படும் என்று உறுதியளிக்கிறார். இந்த அருங்காட்சியகம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 முதல் 1 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி :
பஜ்ரங் நிக்குன்ச்,
14/1192, இந்திரா நகர்,
லக்னோ.
தொலைபேசி : 0522 - 2711172
செல்பேசி : 094150 11817