உலகம் முழுவதும் வாழும் கோடான கோடி இந்துக்களின் தெய்வமாக, ஏன் உலகத் தாயாக கருதப்படும் பார்வதி தேவியின் அவதாரங்களில் ஒன்றுதான் துர்கா தேவி. பார்வதி தேவி பல்வேறு சூழ்நிலைகளில் எடுத்துள்ள அவதாரங்களில் உமாமகேஸ்வரி, கெளரி, ஜகத் மாதா, துர்கா, காளி, சாண்டி மற்றும் பைரவி ஆகியவை முக்கியமானவை. துர்கா தேவி என்றால் சர்வ வல்லமை பொருந்திய, செல்வம் மற்றும் இரக்க குணம் கொண்டவள் என்று பெயர். இந்த வகையில் நாடு முழுவதும் துர்கா தேவியின் பேரில் எண்ணற்ற திருக்கோயில்களை எழுப்பி மக்கள் தேவியை வழிபட்டு வருகின்றனர். இந்த வகையில், ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடா அருகே இந்துக்களின் புனித நதியான கிருஷ்ணா நதிக்கரையின் ஓரத்தில் உள்ள இந்திரகீழாத்ரி மலையில் குடிகொண்டுள்ள ஜெய் கனக துர்கா தேவியைக் காண வரும் பக்தர்கள் எழுப்பும் பக்தி கோஷங்கள் அந்த மலைப் பகுதி முழுவதும் ஆன்மீக மணத்தை வீசச் செய்கிறது.
இந்த மலைக் கோயிலிற்குச் செல்வதற்கு காட்டு வழி சாலையும், படிக்கட்டுகளும் உள்ள நிலையில், தேவியை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் படிக்கட்டுகள் வழியாகவே செல்கின்றனர். குழந்தைகளும், பெண்களும் இந்தக் காட்டுப் பாதையில் படியேறிச் செல்வது கடினமாக இருக்கும் நிலையிலும், பக்திப் பெருக்கோடு அந்தப் படிகளுக்கு பூஜை செய்து வண்ணக் கோலப் பொடிகளால் அழகுபடுத்தியபடியே அன்னையை தரிசிக்கச் செல்கின்றனர். இந்த படிக்கட்டுப் பூஜை மெட்லா பூஜை என்று அழைக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தின் பிரதான கடவுள்களில் முதலிடத்தைப் பெறுபவர் இந்த ஜெய் கனக துர்கா தேவியே. ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்களை தன்பால் ஈர்க்கும் சக்தியுடைவளாக ஜெய் கனக துர்கா தேவி திகழ்ந்து வருகிறார். மேலும் இங்கு நடைபெறும் நவராத்திரி விழா கொண்டாட்டங்களின் போது தங்களை அரவணைத்து பாதுகாத்து வரும் அன்னையை தரிசிக்க நீண்ட நெடிய வரிசையில் நின்று பக்தர்கள் தங்கள் காணிக்கையை செலுத்தி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகளை செய்கின்றனர்.
இக்கோயிலில் உள்ள மூலவர் சிலையானது எப்போது, யாரால் அமைக்கப்பட்டது என்பது யாருக்குமே தெரியாத ஒன்றாகும். இங்குள்ள அம்மன் சிலை தானாகவே அமையப்பெற்றது என்று பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் ஜெய் கனக துர்கா தேவியை சுயம்பு என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். மேலும் அவள் இயற்கையாகவே அமையப் பெற்றமையால், பலம் வாய்ந்தவளாகவும் பக்தர்கள் கருதுகின்றனர். இத்திருத்தலம் அமைந்துள்ள இடத்தில்தான் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன், சிவபெருமானை வேண்டி நீண்ட நெடுநாட்களாக உடலை வருத்தி தவம் இருந்து பசுபாத அஸ்திரத்தை பெற்றதாக ஐதீகம் உள்ளது. இத்திருக்கோயில் அர்ஜுனனால் நன்றிக் கடனாக கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்து சமயப் பெரியவர்களில் முதன்மையானவராக கருதப்படும் ஆதிசங்கரர் இங்கு வந்து அம்மனை தரிசித்த பின்னர் ஸ்ரீசக்கரத்தை வைத்து வேத உடநிடதங்கள்படி பூஜைகள் செய்துள்ளார்.
பார்வதி தேவி உலகில் எப்போதெல்லாம் அசுரர்களின் வெறிச்செயல் அதிகரிக்கின்றதோ, அப்போதெல்லாம் வெவ்வேறு அவதாரங்களில் தோன்றி அவர்களை அழித்துள்ளார். அந்த வகையில், சம்பு, நிசாம்பு ஆகிய அரக்கர்களைக் கொல்ல கெளசிக் அவதாரத்திலும், மகிசாசுரனைக் கொல்ல மகிசாசுரமர்த்தினி அவதாரத்திலும், துர்கமாசுரனைக் கொல்ல துர்கா தேவி அவதாரத்திலும் தோன்றியுள்ளார்.
தனது பக்தர்களின் ஒருவரான கீலுடு என்பவரை மலைக் கோயிலில் தங்கி பூஜை மற்றும் சடங்குகளை நடத்தி வருமாறு துர்கா தேவி பணித்ததாகவும் கூறப்படுகிறது. இந்திரகீழாத்ரி மலையில் அசுரச் செயல்களில் ஈடுபட்டு மக்களை வதம் செய்து வந்த மகிசாசுரனை வதம் செய்வதற்காக துர்கா தேவி மகிசாசுரமர்த்தினியாக சிங்கத்தின் மேல் அமர்ந்து எட்டு கைகளிலும் எட்டுவிதமான ஆயுதங்களோடு வந்து அவனை வதம் செய்த இடம்தான் இத்திருக்கோயில் அமைந்துள்ள இடம்.
இந்த மலைக்கு அருகே உள்ள மலையில் ஜோதி லிங்கம் வடிவாக சிவபெருமானும், பார்வதி தேவியும் காட்சியளித்த போது பிரம்மன் மல்லிகைப் பூக்களுடன் சிவபெருமானை வணங்கியதால் அவருக்கு மல்லேஸ்வரசுவாமி என்ற பெயர் வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இந்திரகீழாத்ரியில் நடைபெறும் விழாவின் போது சக்தியுடன் மல்லேஸ்வரரின் திருவுருவமும் ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது. மேலும் இங்கு நடைபெறும் விழாவில் துர்கா தேவியை, பாலதிரிபுரசுந்தரி, காயத்ரி, அன்னபூரணி, மகாலட்சுமி, சரஸ்வதி, லலிதாதிரிபுரசுந்தரி, துர்கா தேவி, மகிசாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அலங்கரித்து ஊர்வலமாக நவராத்திரி திருவிழாவின் போது பக்தர்கள் எடுத்து வருகின்றனர். விஜயதசமி நாளன்று ஆயுதங்களை வணங்கி ஆயுதபூஜை கொண்டாட்டங்களை இங்கு பக்தர்கள் கொண்டாடுகின்றனர். பெருகிவரும் பக்தர்கள் கூட்டத்தின் விளைவாக கோயில் நிர்வாகத்திற்கு ஆண்டிற்கு 40 கோடி ரூபாய் காணிக்கையாக வருமானம் வருகிறது. இத்திருத்தலத்தில் செய்யப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் இங்கு வரும் பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அதிக அளவில் ஈர்த்து வருகிறது. பல்வேறு சிவாலயங்கள், சக்தி மகிமைகளை விளக்கும் விதமாக கோயிலைச் சுற்றி பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது தத்ரூபமாக காட்சி அளிக்கிறது.
இத்திருத்தலம் அமைந்துள்ள பகுதியில் நிலவும் ஆன்மீகச் சூழல் மேலும் மேலும் பக்தர்களை தன்பால் ஈர்த்து வருகிறது.
இத்திருத்தலம் விஜயவாடா நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து 10 நிமிடங்களில் கோயிலிற்கு எளிதில் சென்றடையலாம். ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 275 கி.மீ. தொலைவில் உள்ள இத்திருக்கோயிலிற்குச் செல்ல பேருந்து, ரயில் மற்றும் விமான வசதிகள் உள்ளது.