ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு தரிசிக்க வரும் இந்தியாவின் புகழ்பெற்ற புனிதத் தலங்களில் ஒன்று சபரிமலை. முகமதியர்களின் புனிதத் தலமான மெக்காவிற்கு ஹஜ் பயணம் செல்வோருக்கு அடுத்தபடியாக அதிகளவில் பக்தர்கள் வரும் இரண்டாவது புனிதத் தலமாக சபரிமலை உள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஜனவரி வரை 5 கோடி மக்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி ஸ்ரீஐயப்பனை வணங்கி தரிசனம் பெற்று சென்றுள்ளனர்.தர்மசாஸ்தா என்று அழைக்கப்படும் ஐயப்பன் சுவாமியே சபரிமலை கோயிலின் தெய்வமாகும். கேரள - தமிழக எல்லைப் பகுதியின் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளைக் கொண்ட 18 மலைகள் சூழ்ந்த பூங்காவனம் என்று அழைக்கப்படும் புனிதத் தலத்தில் சுவாமி ஐயப்பன் எழுந்தருளியுள்ளார்.சபரிமலையில் ஐயப்பனின் சிலையை வைத்து வழிபட்டது, விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒருவராகக் கருதப்படும் பரசுராமரே என்று கூறப்படுவதுண்டு.புராணத்தின்படி சிவபெருமானுக்கும் விஷ்ணுவிற்கும் பிறந்தவர் சுவாமி ஐயப்பன். தான் வரமளித்ததால் அசுரபலம் பெற்ற பஸ்மாசுரன் எல்லோருடைய தலையிலும் கையை வைத்து அழித்ததனால் அவனை அழிக்க விஷ்ணுவை நாடினார் சிவபெருமான். விஷ்ணுவும் மோகினி அவதாரம் தரித்து பத்மாசுரன் முன் நாட்டியமாடி தன் தலையில் கை வைக்க அதே போல நடனமாடிய பத்மாசுரனும் தனது தலையிலேயே தன் கையை வைக்க எரிந்து பஸ்மமானான். மோகினியின் அழகிய ரூபத்தைக் கண்டு சிவபெருமான் காமுற்றதாகவும், அதனால் ஐயப்பன் பிறந்ததாகவும் அப்புராணம் கூறுகிறது.
காட்டில் விடப்பட்ட ஐயப்பனை அங்கு வேட்டைக்கு வந்த பந்தல அரசர் கண்டெடுத்து பிள்ளையில்லாத குறையை ஐயப்பனை சுவீகாரம் செய்து தீர்த்துக் கொண்டார். பிறகு பந்தலராசாவிற்கும் மகாராணிக்கும் குழந்தை பிறந்த போது அவனுக்கு இளவசரர் பட்டம் சூட்டி வாரிசாக்குவதற்கு ஐயப்பன் தடையாக இருந்ததால் அவரை காட்டிற்கு அனுப்பி புலிப்பால் கொண்டு வர அனுப்பியதாகவும் புலியால் கொல்லப்படுவார் என்று சதி திட்டம் தீட்டியவர்கள் எதிர்பார்க்க, பெரும் புலிப் படையுடன் ஐயப்பன் திரும்பி வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக புராணம் கூறுகிறது.
தனது சகோதரனுக்காக காடேகிய ஐயப்பன், மானுட வாழ்வை சீரழிக்கும் காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய 6 குணங்களையும் அழித்தொழிக்க பெரும் தவம் மேற்கொண்டார்.
அதற்கு அவர் தேர்வு செய்த இடமே சபரி மலையாகும். இன்றைக்கும் ஐயப்ப சுவாமி வீற்றிருப்பது அந்த தவ நிலையில்தான். அதனால் தான் அவரை வணங்கச் செல்வோர் 41 நாட்கள் கடுமையான விரதம் இருந்து ருசியற்ற உணவு உண்டு, சம்சார ஆசைகளைத் தவிர்த்து, இறையையே நினைத்து, இரு முறை குளித்து, திருநீர் ஏகி வழிபட்டு, இருமுடியுடன் தன்னை தரிசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பக்தர்கள் இருமுடியை தலையில் சுமந்து ஐயப்பா சரணம் என்ற பக்தி முழக்கத்துடன் நடந்து சென்று அவரை வழிபட்டு வருகின்றனர். நவம்பர் 15ஆம் தேதி மண்டல பூஜையில் துவங்கி, ஜனவரி 16ஆம் தேதி அல்லது 15ஆம் தேதி மகர நட்சத்திரத்தில் சபரி மலையில் தென்படும் மகர விளக்கை காணும் வரை அந்த முக்கிய காலக் கட்டத்தில் ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்கின்றனர். தாங்கள் தலையில் சுமந்து வரும் இருமுடியில் உள்ள ஒரு தேங்காயில் நிரப்பப்பட்ட நெய்யை எல்லாம் கொட்டி அதன் மூலம் ஐயப்பனை வழிபட்டு அந்த நெய்யையே பிரசாதமாக மீண்டும் கொண்டு செல்கின்றனர்.ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே என்கின்ற அத்வைத தத்துவத்தையும், இறைவனே நீ என்கின்ற அகம், பிரம்மாஸ்மி, தத்வமசி ஆகிய பேருண்மைகளை உணர்வதே ஐயப்பனை தரிசிக்கச் செல்வதன் சூட்சுமம் ஆகும்.ஐயப்பன் கோயிலின் சன்னிதானத்துக்கு கிழக்குப் பகுதியில் அவருடைய நண்பராயிருந்த வாவரின் சன்னிதானம் உள்ளது. சபரி மலைக்கு இந்துக்கள் மட்டுமல்ல எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வருகின்றனர். இருமுடி கட்டியவர்கள் மட்டுமே 18 படிகள் ஏறி கோயிலுக்குச் செல்ல முடியும். மற்றவர்கள் வேறு பாதை வழியாகத்தான் சென்று தரிசிக்க முடியும்.
ஐயப்பனை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் பலர் 60 கி.மீ. நீள ஒற்றையடி காட்டுப் பாதையில் 3, 4 நாட்கள் பாதையில் நடந்து சென்று ஐயப்பனை வழிபடுகின்றனர். பெரும்பாலான மக்கள் பம்பையில் குளித்து அங்கிருந்து மலைப் பாதையில் நான்கறை கி.மீ. தூரம் நடந்து சாஸ்தாவை வழிபடுகின்றனர்.
எப்பொழுது செல்லலாம்
நவம்பர் முதல் ஜனவரி வரை முக்கியக் காலமாகும். மண்டல விளக்கு பூஜையில் இருந்து மகர விளக்கு வரையிலான காலக்கட்டத்தில் மலைக்குச் செல்வோர் கடுமையான விரதமிருந்து செல்கின்றனர். ஒவ்வொரு மலையாள -தமிழ் மாதங்களின் முதல் 5 நாட்களுக்கு சன்னிதானம் திறக்கப்படும். அப்பொழுதும் பல லட்சம் மக்கள் தரிசனம் செய்கின்றனர். இதுமட்டுமின்றி விஷூ, ஓணம் பண்டிகைகளை ஒட்டியும் நடை திறக்கப்படுகிறது. அப்பொழுதும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம்.சபரிமலைக்கு எப்படிச் செல்வதுசென்னையில் இருந்து ரயிலில் சென்று கோட்டையம் அல்லது செங்கானூரில் இறங்கி அங்கிருந்து பத்தனம்திட்டைக்கு பேருந்தில் சென்று, பத்தனம் திட்டையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் மூலம் பம்பா செல்லலாம்.
இதுமட்டுமின்றி மற்றொரு பாதையும் உண்டு. கம்பம் வழியாக கேரளத்தின் வண்டிப்பெரியார் வந்து அங்கிருந்து எரிமேரி வழியாக பம்பா வருவதும் உண்டு. பேருந்து மட்டுமின்றி ஜீப் வசதியும் உண்டு. சாலக்காயின் வழியாக எரிமேரி சென்று கரிமலை ஏறி இறங்கி வெறுங்காலுடன் 50 கி.மீ. நடந்து சென்று ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் ஏராளம்.
பெரும்பாலான பக்தர்கள் கோட்டையம் அல்லது செங்கானூரில் இறங்கி அங்கு வேன் பேசிக் கொண்டு சபரிமலை சென்று திரும்புவார்.
விமானம் மூலம் திருவனந்தபுரம் அல்லது கொச்சியில் இறங்கி அங்கிருந்து சாலை வழியாக வாகனத்தில் செல்ல வேண்டும்.