மத்தியப் பிரதேச மாநிலத்தில், நர்மதை ஆற்றங்கரையில் ஓம்காரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது!நர்மதை ஆற்றில் ஒரு கரையில் ஓம்காரேஸ்வரர் கோயிலும், மறு கரையில் மாமலேஸ்வர் கோயிலும் உள்ள இத்திருத்தலத்தின் பெருமையை புராணங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. ஓம்காரேஸ்வரர் கோயிலிற்குள் செல்வதற்கு இரண்டு அறைகளைக் கடந்து செல்ல வேண்டும். ஓம்காரேஸ்வரர் ஜோதிர் லிங்கமாக வீற்றிருக்கும் இத்திருத்தலத்தில் லிங்கத்தைத் தாங்கிய பீடம் தரையில் இல்லாமல் இயற்கையாகவே சற்று மேலாக அமையப் பெற்றுள்ளது. லிங்கத்தை எப்பொழுதும் நீர் சூழ்ந்துள்ளது. கோயிலின் விமானத்திற்குக் கீழே இந்த ஜோதிர் லிங்கம் அமைந்திருக்கவில்லை என்பது இங்கு சிறப்பிற்குரியதாகும். சிவபெருமானின் திருச்சிலை இக்கோயிலின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை பூர்ணிமா தினத்தில் இங்கு பெரும் விழா கொண்டாடப்படுகிறது. மால்வா என்றழைக்கப்படும் நர்மதை ஆற்றங்கரையில் இந்த ஜோதிர் லிங்கம் அமைந்துள்ளது.
கடவுள்களின் கடவுளாகக் கருதப்படும் சிவபெருமானின் ஓம்காரேஸ்வரர் லிங்கம், மான்தாட்டா மலையில் அமைந்துள்ளது.
ஓம்காரேஸ்வரர், மாமலேஸ்வரர் பெருமைகளை சிவபுராணம் ஆழமாக எடுத்துக் கூறுகிறது. சூரியவம்சத்தைச் சேர்ந்த மான்தாட்டாவின் புதல்வர்களான அம்பரீஷ், முகுந்த் ஆகிய இருவரும் சிவபெருமனை நோக்கி கடும் தவம் புரிந்தனர். அவருக்காக பெரும் தியாகங்களையும் செய்தனர். அதனால்தான் இப்பகுதியில் உள்ள மலைக்கு மான்தாட்டா என்று பெயர் வந்தது.
ஓம்காரேஸ்வரர் கோயில் வட இந்திய கட்டடக் கலையில் கட்டப்பட்டது. இக்கோயில் கிருத யுகத்தைச் சேர்ந்தது. ஒரு காலத்தில் நாரத முனிவர் விந்திய மலையிடம் வந்து மேரு மலையின் சிறப்பை புகழ்ந்து கூறினார். இதனால் வாட்டமுற்ற விந்திய மலை சிவபெருமானை நோக்கி தவம் செய்தது. சிவன் அந்த தவத்தை ஏற்று தானே ஓம்காரேஸ்வரராகவும், மாமலேஸ்வரராகவும் தோன்றி விந்திய மலை எப்போதும் வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஆனால் சிவ பக்தர்களுக்கு எந்தத் தடையும் ஏற்படுத்தக்கூடாது என்று அருளினார். விந்திய மலை தொடர்ந்து வளர்ந்தது. அதனால் சூரிய, சந்திரரும் மறைக்கப்பட்டனர். இதனைக் கண்ட அகத்திய முனிவர் தான் அங்கு வரும் வரை அது வளரக்கூடாது என்று கூறிவிட்டுச் சென்றார். அவர் மீண்டும் வரவே இல்லை. அதனால் விந்திய மலையின் வளர்ச்சி அத்தோடு நின்றது. ஓம்காரேஸ்வரர் எனும் இத்திருத்தலத்திற்கு ஓம்காரேஸ்வரரும், மாமலேஸ்வரரும்தான் உரிமையாளர்கள். ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் தங்களுடைய குடிமக்களைக் காண இவர்கள் வருகின்றனர். இதற்காக ஓம்காரேஸ்வரரின் உற்சவ மூர்த்தி, நர்மதை ஆற்றின் மறு கரையில் உள்ள மாலேஸ்வரருக்கு கொண்டுவரப்படும். அதே நேரத்தில மாலேஸ்வரரின் உற்சவ மூர்த்தி ஓம்காரேஸ்வரர் நகர் வழியாகச் செல்லும்.
சரவண மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் இங்கு நடைபெறும் விழாவைக் காண பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்கின்றனர். ஓம்காரேஸ்வரர் நகரின் வீதிகள் பக்தர்களால் நிரம்பியிருக்கும். ஓம்காரேஸ்வரரையும், மாலேஸ்வரரையும் தரிசிக்க அவர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பர். சரவண மாதத்தின் கடைசி திங்கட்கிழமை இவ்விழா உச்சகட்டத்தை எட்டும். பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு நடனமாடுவார்கள். எங்கு நோக்கிலும் வண்ணமயமாகக் காட்சியளிக்கும்.
ஒருபக்கத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய, காவடிகளில் புனித நீரைக் கொண்டுவரும் பக்தர்கள் ஆடல் பாடலுடன் சிவனின் நாமகரணத்தை உச்சரித்துக்கொண்டு வர, மற்றொரு பக்கத்தில் இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களைத் தூவி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். எங்கு நோக்கிலும் இப்படிப்பட்ட வண்ணமயமான காட்சிகளைக் காணலாம்.
5 முகம் கொண்ட ஓம்காரேஸ்வரரின் வெள்ளிச் சிலை கோடி தீர்த்த கரைக்கு கொண்டுவரப்படும். நகர உலா முடிந்ததும் படகுகளில் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டு அவர்களின் திருத்தலங்களுக்கு கொண்டு செல்லப்படும். சிவபெருமானின் மீதுள்ள பக்தி எங்கெங்கும் நிறைந்திருக்கும்.
எப்படிச் செல்வது?
சாலை மார்க்கமா :
இந்தோரில் இருந்து 77 கி.மீ., போபாலில் இருந்து 275 கி.மீ., கண்டுவாவில் இருந்து 77 கி.மீ., பேருந்து மற்றும் வாடகைக் கார் சேவைகள் உள்ளது.
ரயில் மார்க்கமாக :
இந்தோரில் இருந்தும், கண்டுவாவில் இருந்தும் ரயில்களில் சென்று ஓம்காரேஸ்வரர் சாலை ரயில் நிலையத்தில் இறங்கலாம். அங்கிருந்து 12 கி.மீ.