கனவுக்கும், நமது வாழ்க்கைக்கும், எந்த தொடர்பும் இல்லை என்று, எல்லோரும் கூறுவார்கள். ஆனால், இங்கு, ஒரு கனவுதான், ஒருவரின் வாழ்க்கையையே, மாற்றியுள்ளது என்று கூறினால், நீங்கள் நம்புவீர்களா?இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில், மத்தியப் பிரதேச மாநிலம், மனாசா என்ற சிறிய கிராமத்தில், கனவினால் தனது வாழ்க்கையே மாறிய, நிஜத்தை உங்களுக்குக் கூறுகிறோம்.
பபிதா, அந்த கிராமத்துப் பெண். பிறக்கும்போதே, உடல் ஊனமுற்றக் குழந்தையாக பிறந்தாள். கை, கால்களை அசைக்கக் கூட முடியாத நிலை. மற்ற உறுப்புகளும் கூட, இவளது அசைவுக்கு, அவ்வளவாக செவி சாய்ப்பதில்லை.
உட்காரக் கூட முடியாத நிலையில் நடப்பது எங்கே... தனது வாழ்க்கையை, படுக்கையில், படுத்தபடியே கழித்துக் கொண்டிருந்தாள்.
இளம் வயதை, நெருங்கத் தொடங்கியிருந்த, பபிதாவிற்கு, ஒரு நாள் இரவில் கனவு வந்தது. கனவில், பாபா ராம்தேவ்ஜி தோன்றி, எழுந்திரு, நட, உன் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவு, என்று கூறிவிட்டு மறைந்தார். ராஜஸ்தானில் புகழ்பெற்ற துறவியாவார் ராம்தேவ்ஜி.
இந்த கனவைக் கண்டதும், திடுக்கிட்டு எழுந்த பபிதா, தனது கால்களை அசைக்க முடிவதைக் கண்டாள். இப்போதோ, அவள், அவளது வேலைகளை செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், இயலாதவர்களுக்கும் உதவி செய்கிறாள்.
பபிதாவிடம் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்த விஜய் என்பவர் நம்மிடம் பேசுகையில், எனக்கு கையில் அதிகமான வலி இருந்தது. பபிதாவைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கு வந்தேன். பபிதாவின் சிகிச்சையால் தற்போது குணமடைந்து வருகிறேன். மசாஜ் சிகிச்சை செய்து கொள்வதற்காக, தினமும் வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார்.
பபிதாவிடம் சிகிச்சை பெற, மனாசாவில் இருந்து வந்திருந்த சந்தோஷ் பிரஜாபத் பேசுகையில், நான் முதுகுவலியால் சிரமப்பட்டு வந்தேன். பபிதாவின் மசாஜ் சிகிச்சையால் தற்போது முதுகுவலியில் இருந்து நிவாரணம் கிடைத்துள்ளது. இவரிடம் சிகிச்சைப் பெற பல்வேறு இடங்களில் இருந்தும் பலரும் வருகிறார்கள் என்றார்.
பபிதாவைப் பற்றி அந்த கிராமத்துப் பெண்மணி ஒருவர் கூறுகையில், பபிதா பிறந்ததில் இருந்து கை, கால்களை அசைக்கக் கூட முடியாமல் இருந்தாள். அவளது கனவில் பாபா ராம்தேவ்ஜி தோன்றியதில் இருந்து அவளால் நடக்க முடிகிறது. தற்போது அவளால் தனது கால்களைப் பயன்படுத்தி எல்லா வேலையும் செய்ய முடிகிறது.
கோதுமையை சுத்தம் செய்வது, வீட்டை தூய்மைப்படுத்துவது போன்ற வேலைகளை அவள் செய்கிறாள். இது ஒரு ஆச்சரியமான விஷயம்.
தற்போதெல்லாம் கிராமத்தினர் அவர்களது பிரச்சினைக்கு தீர்வு காண பபிதாவை நாடி வருகின்றனர் என்றார்.
கனவு கண்டால் வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை அடையலாம் என்று சொல்வார்கள். ஆனால் பபிதாவின் வாழ்க்கையையே ஒரு கனவு உருவாக்கியிருக்கிறது.
இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். இது கண்மூடித்தனமான நம்பிக்கை என்றா அல்லது நமக்கு மேல் இருக்கும் சக்தி என்றா?
உங்கள் கருத்தை எங்களுக்கு எழுதுங்கள்.