மாமாவுடன் பயணித்தால் படகு கவிழும்!
, திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (20:52 IST)
ஒரே படகில் தாய் மாமனும், சகோதரியின் மகனும் பயணம் செய்யக் கூடாது. அப்படி ஒன்றாகப் பயணம் செய்தால் அந்த படகு நிச்சயம் கவிழ்ந்துவிடும்- இப்படிச் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?இந்தக் கேள்விக்கு விடையைத்தான் இந்த வார நம்பினால் நம்புங்களில் சொல்லப் போகிறோம்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள நேமாவர் என்ற பகுதியில்தான் இந்தக் கதை துவங்குகிறது.நர்மதை நதியின் மத்தியப் பகுதியில் ஒரு சுழல் ஒன்று உருவாகிறது. அதாவது இப்பகுதியில் தண்ணீர் அப்பகுதியில் சுற்றியபடிச் செல்லும். இதனை 'நாபி குண்ட்' என்று அழைக்கின்றனர். இதனைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் படகில் வந்து பார்த்துச் செல்கின்றனர்.ஆனால், இப்பகுதியைக் காண தாய் மாமனும், சகோதரியின் மகனும் ஒன்றாக ஒரேப் படகில் வந்தால், அந்தப் படகு நிச்சயம் கவிழ்ந்து தண்ணீருக்குள் மூழ்கிவிடும் என்று நம்பப்படுகிறது.இதுபற்றி அப்பகுதியில் இருக்கும் படகோட்டி ஒருவர் கூறுகையில், "எல்லா பிரச்சனைகளுக்கும் எப்போதும் ஒரு தீர்வு உண்டு. அதுபோல இந்த நம்பிக்கைக்கும் ஒரு பரிகாரம் உள்ளது. அதாவது இங்கு வரும் மாமனும், சகோதரி மகனும் ஒன்றாகப் பயணம் செய்ய வேண்டி வந்தால், அவர்கள் செல்லும் படகுக்கு ஒரு சிறப்பு பூஜை செய்துவிட்டு பயணம் மேற்கொண்டால் எந்த பிரச்சனையும் வராது" என்றார்.தர்மேந்திரா அகர்வால் என்பவர் தனது சகோதரியின் மகனுடன் நேமாவருக்கு வந்திருக்கிறார். "நாங்கள் பயணம் செய்யப் போகும் படகுக்கு ஒரு பூஜை செய்துவிட்டு பின்னர் எந்த பயமுமின்றி எங்களது பயணத்தைத் தொடர்ந்தோம்" என்றார்.படகுகளுக்கு பூஜை செய்யும் பூசாரி அகிலேஷிடம் இந்த நம்பிக்கைப் பற்றி கேட்டோம்.
அவர் கூறுகையில், இந்த நம்பிக்கை உருவானதற்கு ஒரு கதை உள்ளது. மதுராவின் மன்னன் கம்சன், தனது சகோதரி மகன் கிருஷ்ணனுடன் கோகுலத்தில் இருந்து படகில் திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த படகு ஆற்று நீரில் சிக்கி கவிழ்ந்தது. அதனை நினைவு கூரும் வகையில்தான் நேமாவரில் இன்னமும் மாமாவும், சகோதரியின் மகனும் ஒரேப் படகில் செல்வதை அனுமதிப்பதில்லை' என்றார்.
இச் சம்பவம் மக்களின் பயமாகவும் இருக்கலாம், உண்மையாகவும் இருக்கலாம், நம்பிக்கையாகவும் இருக்கலாம், மூட நம்பிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் இப்பகுதியில் வாழும் மக்கள் ஏதோவொரு நம்பிக்கையில் இதனை தீவிரமாகப் பின்பற்றுகின்றனர்.
இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? உங்கள் கருத்தை எங்களுக்கு எழுதங்கள்!