மனிதனை பேய், பிசாசு என்றெல்லாம் அழைக்கப்படும் ஆவிகள் பிடிக்கின்றனவா? அப்படி யாரையாவது ஆவிகள் பிடித்திருந்தால் சில வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதன் மூலம் அவைகளின் பிடியில் இருந்து விடுபட முடியுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் காண இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் காளி மசூதி என்றழைக்கப்படும் புகழ்பெற்ற ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.பேய், பிசாசு பிடித்தவர்களை குணப்படுத்த ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த மசூதிக்கு அழைத்து வருகின்றனர்.
காளி மஸ்ஜித் என்றழைக்கப்படும் இந்த வழிபாட்டுத் தலத்திற்கு அருகில் ஒரு சமாதி உள்ளது. இந்த சமாதியில் புதைக்கப்பட்டவர் யார் என்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால், வெகு தூரத்தில் இருந்தெல்லாம் மக்கள் இந்த சமாதியில் புதைக்கப்பட்டுள்ள பாபாவிடம் ஆசி பெற வருகின்றனர்.
இந்த சமாதி 1,100 வருடங்களாக உள்ளது என்று கூறுகின்றனர், சிலர் 101 ஆண்டுகளாக இந்த சமாதி உள்ளதென்று கூறுகின்றனர். ஆனால் எவ்வளவு காலமாக இந்த சமாதிக்கு மக்கள் வந்துக் கொண்டிருக்கின்றனர் என்பது எவருக்கும் தெரியவில்லை.
இங்கு அர்ஜூன் சிங் என்ற பூசாரியுடன் பேசினோம். பேய், பிசாசு மற்றும் துர் ஆவிகள் பிடித்துள்ளவர்கள் இந்த சமாதிக்கு 5 வியாழக்கிழமைகளுக்கு தொடர்ந்து கொண்டு வர வேண்டும் என்றும், அப்பொழுதுதான் அவர்களின் பக்தியை ஏற்று பாபா அவர்களை முழுமையாக குண்படுத்துகிறார் என்று கூறினார்.
இத்தலத்திறகு அடிக்கடி வந்து செல்லும் வாமிக் ஷேக் என்பவரிடம் பேசினோம். வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சோதனை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தான் இங்கு வந்து செல்வதாகவும், தனது எதிர்ப்பார்புகள் நிறைவேறுவதாகவும் கூறினார்.பேய், பிசாசு பிடித்தவர்கள் மட்டுமின்றி, மன நோயாளிகளும், பல்வேறு நோய், நொடிகளால் வருந்துவோரெல்லாம் கூட இங்கு வந்து சென்றபின் குணமடைந்ததாகவும் கூறினார்.இந்த தலத்திற்கு அருகே நாக்தாம் என்ற புனித நதி ஓடிக்கொண்டிருந்ததாகவும், ஆனால் அது தற்பொழுது சாக்கடையாகிவிட்டது என்றும் கூறுகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் நபிகள் நாயகம் மறைந்த நாளன்று இங்கு உரூஸ் என்றழைக்கப்படும் சந்தனக் கூடு விழா நடைபெறுகிறது. இவ்விழா நிறைவடைந்ததற்குப் பிறகு மக்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்படுகிறது.
இந்த விஞ்ஞான யுகத்தில் பேய், பிசாசு என்பதற்கெல்லாம் எந்த முக்கியத்துவமும் இல்லை. இவையெல்லாம் வெற்று மூட நம்பிக்கைகளாகவே கருதப்படுகின்றன. இயற்கைக்கு அப்பாற்பட்ட மேன்மையான சக்தி ஒன்று உள்ளது என்று நிரூபிக்கபடாத நிலையில், இதையெல்லாம் எப்படி நம்புவது? காளி மசூதி போன்ற தலங்களுக்கு மக்கள் செல்வதும், பேய், பிசாசு பிடியில் இருந்து தாங்கள் விடுபடுகிறோம் என்று கூறுவதையும் எப்படி ஏற்பது என்ற கேள்வி எழுகிறதல்லவா? இதைப்பற்றியெல்லாம் நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? எங்களுக்கு எழுதுங்கள்.