நிலத்தடி நீரை கண்டுபிடித்துக் கூறும் கங்கா நாராயணன்!
, திங்கள், 16 ஜூன் 2008 (20:59 IST)
இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில், நிலத்தடி நீர்மட்டத்தை மிகச் சாதாரணமாக அறிந்து கூறும் ஒருவரின் திறனைப்பற்றியும், அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பற்றியும் உங்களுக்கு கூறப்போகின்றோம்.
ஆங்கில எழுத்தான ஒய் வடிவில் உள்ள ஒரு குச்சி, ஒரு தேங்காய் ஆகிய இரண்டின் உதவியால் நிலத்தடி நீர் மட்டத்தை கண்டறிய முடியுமா? மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஒருவர் இவ்விரண்டையும் பயன்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை அறியும் ஞானத்தைப் பெற்றுள்ளார் என்று கேள்விப்பட்டதும் அவரை உடனடியாக சந்தித்துவிட வேண்டும் என்று அவர் இல்லம் நோக்கி பறந்து சென்றோம்.அவர் பெயர் கங்கா நாராயண் சர்மா. ஒய் வடிவ குச்சியைக் கொண்டும், தேங்காய் ஒன்றின் உதவியுடனும் தன்னால் நிலத்தடி நீர் இருப்பை உறுதியாகக் கூற முடியும் என்றார். ஒரு கட்டுமனையில் எந்த இடத்தில் தரைக்கு அருகில் நீர் மட்டம் உள்ளது என்பதையும், எங்கு நீர் இருப்பு அதிகம் உள்ளதென்பதையும் தன்னால் கூற முடியும் என்கிறார் கங்கா நாராயண் சர்மா.
ஒய் போன்ற அந்தக் குச்சியின் முனைகளை தனது இரண்டு உள்ளங் கைகளுக்கு இடையே லேசாக பிடித்துக் கொண்டு வீட்டு மனைக்குள் மெதுவாக நடக்கும்போது எங்கு நிலத்தடி நீர் தரை மட்டத்திற்கு அருகே உள்ளதோ அங்கு அவர் கையில் பிடித்துள்ள குச்சி வேகமாக சுற்றுமென்றும், அதைக்கொண்டு அந்த இடத்தில் கிணறு வெட்டவோ அல்லது ஆழ் துளை குழாய் அமைத்து நீர் எடுக்கவோ தான் பரிந்துரைப்பதாக கூறுகிறார்.
இப்படி தான் கூறியதில் 80 விழுக்காடு வரை சரியாக இருந்துள்ளதெனக் கூறிய கங்கா நாராயணன், இதே போல தேங்காயை கையில் வைத்துக் கொண்டு ஒரு இடத்தில் நடக்கும்போது நீர் அதிகம் இருக்கும் இடத்தின் மீது வரும்போது அது செங்குத்தாக எழும் என்றும் கூறினார்.
இவருடைய உதவியை பெரும் கட்டடங்கள் கட்டும் பெரும் நிறுவனங்களும் நாடுகின்றன. நிலத்தடி நீர் மட்டத்தையும், நீர் இருப்பையும் அறிய இவரது முறையே குறைவான செலவில் முடிவதால் மக்கள் இவரையே அதிகம் நாடுகின்றனர்.நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நதிகள் சென்ற பாதையைக் கண்டுபிடிக்கவும், நிலக் கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கவும் தனது இந்த முறையை பயன்படுத்தலாம் என்றும் கங்கா நாராயண் சர்மா கூறுகிறார்.இவர் கூறிய சில இடங்களில் ஆழ் துளை குழாய் அமைக்க முயன்றபோது 150 முதல் 200 அடி ஆழத்திலும், சில இடங்களில் 400 அடி ஆழத்திலும் நீர் மட்டம் இருந்ததாக்க் கூறுகின்றனர். ஆயினும் இவர் மீது மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்.கட்டட ஒப்பந்தக்காரரான ரோஹித் காத்ரி என்பவர், கங்கா நாராயணின் உதவியைக் கொண்டே பல இடங்களில் தான் ஆழ்துளைக் குழாய்களை அமைத்ததாககவும் இதில் எந்த மூட நம்பிக்கையும் இல்லை என்றும்
கூறுகிறார். கோடையின் காரணமாக சில இடங்களில் தண்ணீரின் அளவு மிகவும் கீழிரங்கி விடுவதால் கங்கா நாராயணன் கூறுவது தவறாகி விடுகிறதே தவிர அந்த முறையை தவறாக்க் கூற முடியாது என்றார்.
இந்தூரில் நாளுக்கு நாள் நிலத்தடி நீர்மட்டம் இறங்கிக் கொண்டே செல்லும் நிலையில், குறைந்த செலவில் நிலத்தடி நீர்வளம் அறிய கங்கா நாராயணனையே மக்கள் நாடுகின்றனர்.
இப்படிப்பட்ட முறைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? எங்களுக்கு எழுதுங்கள்.