சாபத்தால் கல்லாய் மாறிய கிராமம்!
நம்பினால் நம்புங்கள் தொடரில் இந்த வாரம் நாம் காணவிருப்பது பண்டைய காலத்தில் சபிக்கப்பட்ட ஒரு கிராமம். சாபத்தால் கிராமம் முழுதும் கல்லாய் சமைந்தது. அனைத்து பிராணிகள், பறவைகள், ஏன் மனித உயிர்களும் கல்லாய் மாறிய சோகம் இங்கு நடந்துள்ளது. அந்த கிராமம் முழுதும் புதையுண்டு போனது.
தேவாஸ் தாலுக்காவில் கந்தர்வபுரி என்ற கிராமம் இருந்தது. இந்த கிராமம் பவுத்த மத வரலாற்றின் சாட்சியாய் திகழ்ந்திருந்தது. முன்பு இந்த கிராமத்தின் பெயர் சம்பாவதி என்று இருந்தது. அதன்பிறகு சம்பாவதியின் ஆண் வாரிசு கந்தர்வாசென் என்பவரின் பெயருக்கு மாறியது. இன்றும் இந்த கிராமம் கந்தர்வபுரி என்றே அறியப்படுகிறது.அரசன் விக்ரமாதித்தன் மற்றும் பார்திஹரி ஆகியோரின் தந்தை கந்தர்வாசென். இந்த ஊரில் உள்ள கமல் சோனி என்பவர், இது ஒரு புராதன ஊர் என்றும், இன்றும் இந்த இடத்தை தோண்டினால் சிலைகள் வெளிவரும் என்றார்.மன்னர் ஒருவரின் விருப்பத்திற்கு எதிராக அவரது மகள் கந்தர்வாசென்னை திருமணம் செய்து கொள்கிறாள். பகலில் கந்தர்வசென் கழுதை உருவில் தோன்றினான். இரவு வேளைகளில் கழுதை சருமத்தை உதறி அழகிய இளவரசனாக மாறினான். இது அரசருக்கு எப்படியோ தெரிந்துவிட, கந்தர்வாசென் கழுதை சருமத்திலிருந்து வெளிவரும்போது கழுதையின் சருமத்தை எரித்து விடுமாறு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் கந்தர்வாசென் உயிரோடு எரிக்கப்பட்டான். இதனால் கோபமடைந்த அவன் இந்த ஊரில் தங்கியிருக்கும் யாவரும் கல்லாக மாறிவிடுவார்கள் என்று சபித்தான் என்று கமல் சோனி கூறுகிறார்.
இது குறித்து கிராமத் தலையாரி விக்ரம் சிங் சவுகானிடம் பேசினோம், அவரும் சபிக்கப்பட்ட இந்த ஊர் பூமிக்கு அடியில் புதையுண்டிருப்பதாகக் கூறினார். ஆயிரக்கணக்கான கற்சிலைகள் பூமிக்கு அடியில் புதைந்து கிடப்பதாக அவர் தெரிவித்தார்.
புத்தர், மாஹாவீரர், விஷ்ணு மட்டுமல்லாமல் கிராமத்தினரின் தினசரி வாழ்க்கை முறைகளை சித்தரிக்கும் பல சிலைகளோடு சுமார் 300 சிலைகள் அருங்காட்சியகத்தில் உள்ளன. திருட்டுப் போன சிலைகளின் எண்ணிக்கை மட்டும் 1000 இருக்கும் என்று அந்த கிராம மக்கள் பலர் தெரிவித்தனர்.
சாபம் ஒரு கிராமத்தையே கல்லாக மாற்றி விடுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்புங்கள்.