ஆவி உலவும் அதிசயக் கோயில்!
, திங்கள், 19 மே 2008 (21:11 IST)
நம்பினால் நம்புங்கள் பகுதியில் இந்த வாரம் நாம் பார்க்க உள்ள கோயிலைப் பற்றி மக்களிடையே பல்வேறு புரளிகள் நிலவுகின்றன. சிலர், இந்த கோயில் ஆசிர்வதிக்கப்பட்டது என்று சொல்கின்றனர்.
ஆனால் சிலரோ இந்த கோயில் சபிக்கப்பட்டது என்று கருதுகின்றனர்.பூஜையின் போது செய்யப்படும் நரபலிகளையும், படையல்களையும் கடவுள் ஏற்றுக் கொள்வதாக கூறுகின்றனர். ஆனால் ஒரு சிலரோ, இங்கு ஒரு பெண்ணின் ஆவி உலவுவதாகக் கூறுகின்றனர். எத்தனை மனிதர்கள், எத்தனை கருத்துக்கள்?மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள இந்த கோயிலின் முக்கிய தெய்வம் துர்கை அம்மன். இந்த கோயிலைப் பற்றி நிறைய புரளிகள் உள்ளன.இந்த கோயிலை, நிறுவிய காலத்தில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்தேறியுள்ளன. இந்த கோயிலை நிறுவியது தேவாஸின் மன்னன். கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்திருந்த நிலையில், மன்னனின் மாளிகையில் பல அசம்பாவித சம்பங்கள் நடந்துள்ளன. மன்னனின் மகள், இந்த கோயிலுக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதனை அடுத்து, இளவரசியை மிகவும் நேசித்து வந்த அந்நாட்டு படைத் தளபதியும், தனது காதலியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து இந்த கோயிலின் தலைமை பூசாரி, கோயிலின் புனிதத் தன்மை கெட்டுவிட்டது. இங்கிருக்கும் தெய்வச் சிலையை வேறு எங்காவது மாற்றி வைத்து விடுங்கள் என்று கூறினார்.
இதனால், கோயிலில் இருந்த துர்கை அம்மனை உஜ்ஜைன் நகரில் உள்ள பெரிய கணபதி கோயிலுக்குக் கொண்டு சென்று வைத்துவிட்டான் மன்னன். இந்த கோயிலில் துர்கை அம்மன் இருந்த இடம் காலியாக
இருந்துவிடக் கூடாது என்ற காரணத்திற்காக துர்கை அம்மனின் திருவுருவப் படத்தை நிறுவினார். ஆனாலும் இந்த கோயிலுக்குள் தொடர்ந்து சில அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் இருந்தன. இந்த கோயிலைச் சுற்றி வாழும் மக்கள், இந்த கோயிலில் இருந்து சில வித்தியாசமான சப்தங்கள் கேட்பதாகக் கூறுகின்றனர். சில நேரங்களில் சிங்கம் கர்ஜிப்பது போன்ற சப்தமும், கோயிலின் மணி ஓசையும் கேட்டுள்ளதாகக் கூறுகின்றனர். சில நேரங்களில் வெள்ளை நிற பெண் உருவம் ஒன்று இந்த கோயிலைச் சுற்றி நடமாடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த பயத்தின் காரணமாக மாலையில் சூரியன் மறைந்த பின்னர் இந்த கோயிலுக்குள் யாரும் செல்வதில்லை.இந்த கோயிலுக்கு வந்த பக்தர் சஞ்சய் மல்காவ்கர் இதுபற்றி கூறுகையில், தவறான நோக்கத்துடன் இந்த கோயிலுக்கு யார் வந்தாலும் அவர்கள் விபத்தில் சிக்குவார்கள். இந்த கோயிலை இடித்துவிட்டு நிலத்தை அபகரிக்கும் சதி திட்டத்தில் பலர் ஈடுபட்டனர். ஆனால் அவர்களது திட்டம் பலிக்கவில்லை.
அதே சமயம், சதியில் ஈடுபட்ட பலரும் தங்களது வாழ்க்கையில் பல அசம்பாவிதங்கைள எதிர்கொண்டனர் என்றார்.
இவை எல்லாம் உண்மைக் கதையா அல்லது வெறும் புரளியா! இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் வந்து வழிபடுகின்றனர். ஆனால், கோயிலுக்குள் வந்ததும் அவர்களுக்குள் ஒரு அச்ச உணர்வு தொற்றிக் கொள்கிறது. அந்த உணர்வு அவர்களை சீக்கிரம் அந்த கோயிலில் இருந்து சென்று விட காரணமாகிறது.
இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்... எங்களுக்குக் கூறுங்கள்.