மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜால்பூர் கிராமத்தில் நடைபெறும் ஒரு பூஜையின் போது கையில் ஆரத்தி தட்டுகளுடன் சென்று வழிபடும் பக்தர்களை பீடித்துள்ள ஆவிகள் நீங்கி, அவர்கள் முழுமையாக குணமடைவதாகக் கேள்விப்பட்டோம்!ஆவிகள் பீடித்துள்ளவர்களை இந்தப் பூஜையில் கலந்துகொள்ளச் செய்தால் அவர்களை பிடித்துள்ள ஆவி அகன்றுவிடும் என்று அப்பகுதி மக்கள் நம்புவதாக அறிந்ததும் மிகுந்த ஆர்வத்துடன் அந்தக் கோயிலிற்குச் சென்றோம். இந்தக் கோயில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று இக்கோயிலின் பூசாரி மகேஷ் மகராஜ் கூறினார். தனது குடும்பத்தினர் பல தலைமுறைகளாக இந்தக் கோயிலைப் பராமரித்து வருவதாகவும், தான் ஏழாவது தலைமுறை என்றும் கூறினார்.
தனது முன்னோர்களில் ஒருவரான ஹரினுமா சாஹேப் என்பவர் 12 ஆண்டுகள் தொடர்ந்து தவம் செய்ததன் காரணமாக அவர் முன் தத்தேத்ராயா தோன்றியதாகவும், அவர் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, இத்திருக்கோயிலில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்க வேண்டும் என்றும், இங்கு வரும் எவரும் வெறும் கையுடன் திரும்பக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.
அந்தநாள் முதல் இக்கோயிலில் தத்தேத்ராயாவின் சக்தி இருந்து வருவதாக மகேஷ் மகராஜ் கூறினார்.
கோயிலிற்குள் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அன்றைக்கு வெள்ளிக்கிழமை என்பதால் ஆவிகளைத் துரத்துவதற்கான மகா ஆரத்தி நேரம் நெருங்கியதும் ஆவி பீடித்துள்ளவர்கள் கற்பூரம் ஏற்றப்பட்ட தட்டுகளை ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டு அந்த மகா ஆரத்தி பூஜையில் கலந்துகொள்ளச் சென்றனர்.
அதில் கலந்துகொண்ட பெண்களின் நடத்தை வித்தியாசமாக இருந்தது. சிலர் கத்திக்கொண்டும், மேலும் சிலர் தரையில் உருள்வதுமாக இருந்தனர். அவர்கள் உடலில் புகுந்துள்ள ஆவியே இவ்வாறு அவர்களை ஆட்டுவிக்கிறது என்று அங்கிருந்தவர்கள் கூறினர். இந்த பூஜையில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த ஜித்தேந்திரா பட்டேல் என்பவரிடம் பேசினோம். தனது மனைவியின் உடலிற்குள் அடிக்கடி ஒரு ஆவி வந்து செல்வதாகக் கூறினார். அப்பொழுதெல்லாம் அவரது மனைவி மெளனமாகவும், எதையும் சாப்பிடாமலும் இருப்பார் என்று கூறிய ஜித்தேந்திரா, இந்தக் கோயிலில் நடைபெறும் ஆரத்தியில் கலந்துகொள்ளத் துவங்கியதிலிருந்து சற்று முன்னேற்றம் இருப்பதாகக் கூறினார்.
இந்தப் பூஜையில் கலந்துகொள்ள வந்த ஜமுனா பாய் என்ற பெண்மணி, தன்னை ஆவி பிடித்திருந்ததாகவும், தொடர்ந்து இப்பூஜையில் கலந்துகொண்டதனால் தான் பெருமளவிற்கு குணமடைந்துவிட்டதாகவும் கூறினார்.
இதற்குக் காரணம் இக்கோயிலில் வீற்றிருக்கும் தத்தேத்ராயா கடவுளின் அருளே என்று அவர் கூறினார்.
இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டதற்கு, இவர்களெல்லாம் ஏதாவது ஒரு வகையில் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும், அவர்களை பைத்தியம் என்று கூறிவிட முடியாது என்றும் கூறினார். அவர்களுக்கு உரிய வகையில் சிகிச்சை அளித்தாலே போதுமானது என்று கூறினர்.
இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையைப் பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள். எங்களுக்கு எழுதுங்கள்.