ஆண்களை பெண்கள் அடிக்கும் வினோதத் திருவிழா!
இந்தியாவில் மத நம்பிக்கையும், மூட நம்பிக்கையும் ஒன்றாகவே இருக்கின்றன என்று நாம் சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு திருவிழா நமது நாட்டில் நடைபெறுகிறது.
இந்தவார நம்பினால் நம்புங்கள் பகுதியில் மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள புஞ்சாபூர் என்ற கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் 9 நாள் விழாவில் கடைசி நாள் நடத்தப்படும் ஒரு வினோத சடங்கை உங்களுக்கு வழங்குகிறோம். கான்கெளர் என்று தாங்கள் அழைக்கும் அம்மனுக்கு திருவிழா எடுக்கும் மக்கள், இந்த வினோதமான சடங்கை கொண்டாட்டத்துடன் நடத்துகின்றனர். மைதானத்திற்கு நடுவில் ஒரு நீண்ட கம்பை நடுகின்றனர். அந்த கம்பின் முனையில் குட் என்றழைக்கப்படும் வெல்லத்தை ஒரு பையில் கட்டி தொங்கவிடுகின்றனர். இந்த கம்பத்தைச் சுற்றி நின்றுக் கொண்டிருக்கும் பெண்கள், தங்கள் கைகளில் வேம்பங்குச்சி, புளியங்குச்சி ஆகியவற்றை வைத்துக்கொண்டு நெருக்கமாக ஒரு வளையம் போல் நின்றுவிடுகின்றனர். இந்த விழாவில் கலந்துகொள்ளும் ஆண்கள், பெண்களின் வளையத்தை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அந்த கம்பத்தை நிலத்தில் இருந்து பிடுங்கி எறிய வேண்டும். பின்னர் அந்தக் குழியை மண்ணால் நிரப்பி மூடவேண்டும். இதனைப் பெண்கள் அனுமதிக்கக்கூடாது.
வளையத்தை ஆண்கள் நெருங்கியதும், அவர்களை தங்கள் கைகளில் வைத்திருக்கும் குச்சியால் பெண்கள் அடிக்கின்றனர். அதனை உடைத்து முன்னேற முயற்சிக்கும் ஆண்கள், தங்கள் கைகளில் கொண்டு செல்லும் குச்சியால் தடுத்துக் காத்துக்கொள்ள வேண்டும்.
உள்ளே புகுந்து அந்த கம்பத்தை பெயர்த்து எறிவதற்குள் ஆண்கள் படாதபாடுபட வேண்டியதிருக்கும். அவர்கள் எவ்வளவு வேகமாக அந்தக் கம்பத்தைப் பிடுங்கி குழியை நிரப்புகிறார்களோ அந்த அளவிற்கு உதை மிச்சமாகும்.
இந்த விழாவின் நோக்கம் என்னவெனில், அந்த கிராமத்து மக்கள் வணங்கும் கான்கெளர் அம்மனின் வடிவங்களே பெண்கள் என்றும், அவர்களைத் துன்புறுத்துவது அந்த தெய்வத்தையே துன்புறுத்துவதற்கு ஒப்பாகும் என்கின்ற கருத்தை பறைசாற்ற இவ்விழா நடத்தப்படுகிறது.
இவ்விழாவில் கலந்துகொள்ளும் பெண்கள், தங்களின் கணவர் நீண்ட காலம் நோய்நொடியின்றி வாழவேண்டும் என்று பிரார்த்திக்கின்றனர். அவர்கள் செய்த பாவத்திற்கு தண்டனையாகவே அவர்களின் மனைவிகள் இவ்வாறு அடிக்கின்றனர் என்பது ஐதீகம்.
இப்படிப்பட்ட ஒரு விழா அல்லது சடங்கு பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள். எங்களுக்குத் தெரிவியுங்கள்.