மரணத்தை ஏற்படுத்தும் மான்பூர் மலைப் பாதை!
மராட்டிய - மத்தியப் பிரதேச மாநிலங்களை இணைக்கும் ஆக்ரா-மும்பை சாலையில் அமைந்துள்ள ஒரு மலைப் பகுதியை இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
இந்த மலைப் பகுதியில் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. அதற்குக் காரணம் அங்கு ஆவிகள் உலவுவதாகவும், அதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுவதை கேள்விப்பட்ட நாங்கள் அவவிடத்திற்குச் சென்றோம். மான்பூர் மலைப் பாதை பல பயங்கரமான வளைவுகளை கொண்டுள்ளது. சில இடங்களில் திரும்பும் போது ஒன்றுமே தெரியாத அளவிற்கு சுற்றி வளைந்து மேலேறுகிறது. சிறிது தூரத்தில் பைரவரின் கோயில் ஒன்றைக் கண்டோம். அந்தக் கோயிலைக் கடக்கும் வாகனத்தில் இருந்த ஓட்டுநர்கள் சிரம் தாழ்த்தி அக்கோயிலை நோக்கி வணங்கிவிட்டு தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச் செல்வதையும் பார்த்தோம். எல்லா வாகன ஓட்டிகளும் பைரவர் கோயில் முன்பு நிறுத்தி பக்தியுடன் வணங்கிவிட்டுச் செல்வது ஏன் என்று அறிந்துகொள்ள ஆசைப்பட்ட நாம், பப்பு மால்வியா என்ற லாரி ஓட்டுநரிடம் பேசினோம். தான் இந்த மலைப் பகுதியில் பல ஆண்டுகளாக வாகனத்தை ஓட்டி வருவதாகவும், ஏராளமான விபத்துகளை பார்த்திருப்பதாகவும் கூறியவர், இங்கு ஏராளமான ஆவிகள், குறிப்பாக நிராசையுடன் மரணமடைந்தவர்களின் ஆவிகள் உலவுவதாகக் கூறினார். பைரவரை வணங்கிவிட்டுச் செல்பவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை என்றும் அவர் கூறினார். இந்த மலைப்பாதையில் ஆங்காங்கு எச்சரிக்கைகள் எழுதப்பட்ட பலகைகளை போக்குவரத்துத் துறை வைத்துள்ளது. அந்த எச்சரிக்கைகளின்படி ஓட்டாமல், வேகமாக பல வாகனங்கள் ஓட்டிச் செல்லப்படுவதையும் கண்டோம். இப்படி ஓட்டிச் செல்லப்படும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் வாய்ப்பு அதிகமிருப்பதையும் உணர்ந்தோம்.
ஆனால், நாங்கள் பேசிய மற்றொரு லாரி ஓட்டுநரான விஷ்ணுபிரசாத் கோஸ்வாமி, பைரவரை வணங்கிவிட்டுச் சென்றால்தான் இந்த மலைப்பாதையை பாதுகாப்பாக கடந்து செல்ல முடியும் என்று கூறினார்.
பல வாகன ஓட்டுநர்கள் வணங்கிவிட்டுத்தான் செல்கின்றனர். நாங்கள் பார்க்கச் சென்றபோது கூட லாரி ஒன்று விபத்திற்குள்ளாகி, அதன் ஓட்டுநர் மரணமடைந்துவிட்டார். இப்படி இங்கு பல விபத்துகள் நடந்தவண்ணம்தான் உள்ளன என்று அங்கிருந்த காவல் அதிகாரிகளும் எங்களிடம் கூறினார்.
இதற்குக் காரணம் அபாயகரமான அந்த மலைப்பாதைதானே தவிர, ஆவிகள் அல்ல என்று கூறுகின்றனர். நீங்கள் என்ன கூறுகின்றீர்கள். எங்களுக்குத் தெரியுங்கள்.