இரயில்கள் நின்று அஞ்சலி செலுத்தும் இந்தியாவின் ராபின் ஹூட்!
, செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (10:14 IST)
நம்பினால் நம்புங்கள் தொடரில் இந்த வாரம் உங்களுக்கு மறைந்தும் மறையாமல் வாழ்ந்துவரும் ஒரு வீரரை அறிமுகப்படுத்துகிறோம். மத்தியப் பிரதேச மாநிலம் மோவ் எனும் பகுதியில் வாழ்ந்து வருபவர்களுக்கு இன்றளவும் அவர் வாழ்ந்து வருகிறார். டாண்டியா பீல் என்பவரைப் பற்றிய கதை இது. இந்தியாவின் ராபின் ஹூட் என்றழைக்கப்பட்ட தாண்டியா பீல், இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது வெள்ளையர்களை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார்.
மத்தியப் பிரதேசத்தின் மோவ் என்றழைக்கப்படும் மால்வா பகுதியில் இருந்து சாத்பூரா மலைத் தொடர்களில் உள்ள ஜால்காவ் வரை அவர் முடிசூடா மன்னராக இருந்துள்ளார்.
பிரிட்டிஷ்காரர்களிடம் கொள்ளையடித்து அதனை ஏழை மக்களுக்கும் மழைவாழ் மக்களுக்கும் டாண்டியா பீல் பகிர்ந்தளித்து அவர்களின் வறுமையைப் போக்கியுள்ளார்.
டாண்டியா பீலைப் பிடிப்பதற்கு உதவி செய்தால் பெரும் சன்மானம் கிடைக்கும் என்று வெள்ளையர்கள் அறிவித்தும் அவரைப் பிடிக்க முடியவில்லை. அவருக்குச் சில அதிசயச் சக்திகள் இருந்ததா அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள பாட்டால் பாணி என்ற நீர் வீழ்ச்சிக்கு அருகே செல்லும் இரயில் பாதையில், டாண்டியா பீலுக்கும் பிரிட்டிஷ் படையினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. அதில் டாண்டியா பீல் கொல்லப்பட்டார். அவர் இறந்ததற்குப் பிறகு அந்த இரயில் பாதையில் பல விபத்துக்கள் ஏற்பட்டன. இதற்குக் காரணம் டாண்டியா பீல் இறந்ததே என்று கூறிய அப்பகுதி மக்கள், அந்த இரயில் பாதைக்கு அருகிலேயே அவருக்கு கோயிலைக் கட்டினர். அந்தக் கோயில் கட்டப்பட்டதற்குப் பிறகு, அந்த வழியாகச் செல்லும் இரயில்கள் அனைத்தும் அங்கு சிறிது நேரம் நின்று டாண்டியா பீலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கின்றன. அப்படியேதுமில்லை என்று இரயில்வே நிர்வாகம் மறுக்கிறது.
பாட்டால் பாணியில் இருந்து காலாகுண்ட்டிற்குச் செல்லும் இரயில் பாதை இங்கு பிரிவதால், சிறிது நேரம் இரயில்கள் நின்று பாதை மாற்றப்பட்ட பிறகு செல்வதாகவும், இந்த இரயில் பாதை மேட்டுப் பகுதியில் செல்வதால் பிரேக் சோதனை செய்ய நிறுத்தப்படுவதாகவும், அப்பொழுது இரயில் பயணிகள் தங்களது சிரத்தைத் தாழ்த்தி டாண்டியா பீலை வணங்குவதாகவும் அவர்கள் கூறினர்.
ஆனால், அந்த வழியாகச் செல்லும் பயணிகளுக்குத் தெரியும் உண்மை என்னவென்று. இங்கு நிறுத்தாமல் சென்ற இரயில்கள் விபத்திற்கு உள்ளானதாக அப்பகுதி மக்கள் சொல்கின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு விடயத்தைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள். எங்களுக்கு எழுதுங்கள்.