இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் நோயாளிகளைக் காலால் உதைத்துக் குணப்படுத்தும் வினோதமான சிகிச்சையை செய்யும் ஒருவரை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள மன்சாராம் நிஷாத் என்பவர் தனது இந்தச் சிகிச்சையின் மூலம் எந்த நோயையும் குணப்படுத்த முடியும் என்கிறார். இந்தச் செய்தியை நாங்கள் அறிந்தவுடன், இதுபற்றி தெரிந்து கொள்வதற்காகச் சத்தீஷ்கரை நோக்கிப் பயணித்தோம். மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 75 கி.மீ. தொலைவிலும், தம்தரி நகரில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் உள்ள லேடர் என்ற கிராமத்தில்தான் மன்சாராம் நிஷாத் இருக்கிறார். லேடரை நாங்கள் அடைந்ததும், தங்கள் நோய்க்குச் சிகிச்சை பெறுவதற்காகக் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கண்டோம். சிறிது நேரத்திற்குப் பிறகு, மன்சாராம் நிஷாத் ஒரு மரத்திற்கு அடியில் வந்து அமர்ந்தார். பின்னர் ஒவ்வொரு நோயாளியாக அழைத்துக் காலால் உதைத்தும் கையால் குத்தியும் தனனுடைய சிகிச்சையைத் துவங்கினார். மற்றவர்கள் தங்களின் முறைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தில் ஈடுபட்டிருந்த போது, தான் கண்ட கனவில் தோன்றிய தெய்வம், இந்த முறையில் மக்களை குணப்படுத்துமாறு தனக்கு அருளியதாக மன்சாராம் நிஷாத் கூறுகிறார். இதைவிட, தான் பல ஆண்டுகளாக எதையும் சாப்பிடவில்லை என்று அவர் கூறுவதுதான் மிகவும் ஆச்சரியம் ஆகும். இதனால், ஒவ்வொரு கடவுளின் சக்தியும் தனக்குக் கிடைப்பதாக அவர் கூறுகிறார்.
கூடியிருந்த நோயாளிகளை நாங்கள் சந்தித்தபோது, அவர்களில் பெரும்பாலானவர்கள் முதல்முறை வந்தவர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்களின் மூலம் மன்சாராம் நிஷாத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு வந்திருந்தனர். இதற்கிடையில், மன்சாராம் நிஷாத்தின் சிகிச்சையினால் தாங்கள் குணமடைந்ததாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் அப்படிக் கூறுமாறு சொல்லப்பட்டவர்களாகவே தெரிகிறது.
நிறைய நோயாளிகள் சிகிச்சைக்கு வரத் துவங்கியதில் இருந்து, புதிதாக உணவகங்களும் கடைகளும் இங்கு பெருக ஆரம்பித்து விட்டதையும் எங்களால் காண முடிந்தது. மன்சாராம் தனது சிகிச்சை அனைத்தையும் கட்டணமின்றி இலவசமாக வழங்குவதாக நோயாளிகள் தெரிவித்தனர். ஆனால், மக்கள் காணிக்கையாக பணத்தையும் பொருட்களையும் அளிக்கின்றனர். ஒவ்வொரு நோயாளியும் தங்கள் சிகிச்சைக்காக மூன்று முறை வரவேண்டும் என்று மன்சாராம் நிஷாத் கூறுகிறார். மூன்று முறையும் காணிக்கை தரப்படுகிறது.
அங்கே கூடியிருந்த நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் படிக்காதவர்களாகவும், ஏழைகளாகவும் மருத்துவ வசதிகளைப் பற்றி அறியாதவர்களாகவும் இருந்தனர். இதனால், அவர்கள் மன்சாராம் நிஷாத்தை நம்புகின்றனர் என்பதை நாங்கள் கண்டோம்.
இந்த வினோதச் சிகிச்சை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எங்களுக்குத் தெரிவியுங்கள்.