எல்லா நோய்களையும் தனது திரிசூலத்தைக் கொண்டு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் பாபா ஒருவரின் ரகசியங்களை இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டு வாழ்ந்துவரும் அந்த பாபாவின் பெயர் பாலே லால் சர்மா. முனிவர் ஒருவரின் ஆன்மா ஒன்று தனக்குள் இறங்குவதாக இவர் கூறிக்கொள்கிறார். அதனை அவருடைய குடும்பத்தார் உட்பட ஒருவரும் நம்பவில்லை. இந்த பாபா ஆணிகளால் ஆன ஆசனத்தில்தான் உட்காருகிறார் என்று கூறினார்கள். அந்த ஆசனத்தில் அமரும்போது மட்டும் குர்தா பைஜாமிற்கு பதில் ஜீன்ஸ் பேண்டை போட்டுக் கொண்டு வந்து அமர்வதை நாங்கள் கண்டோம். ஆணிகள் அவரை துன்புறுத்தாது என்றால், எதற்காக ஜீன்ஸ் போட வேண்டும்?
ஆடையை மாற்றிக்கொண்ட பிறகு 2 நிமிட நேரம் அந்த பாபா ஏதோ பிரார்த்தனை செய்தார். அப்போது அவரது உடல் நடுங்கியது. அங்கு கூடியிருந்த மக்கள் அவரை கும்பிட்டார்கள். பிறகு பாபா அந்த ஆசனத்தில் அமர்ந்தார். பல பக்தர்கள் அவரிடம் மலர்களை அளித்து மரியாதை செய்தனர். அப்பொழுது எங்களது புகைப்படக் கருவியைப் பார்த்து பாபா பேசினார்.
தன்னுடைய இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் பாபாவிடம் சிகிச்சைக்காக வந்திருந்தார்.
எலுமிச்சைப் பழத்தில் சில கோதுமைகள் இருப்பதை தான் கண்டுபிடித்தால்தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று பாபா கூறுகிறார். அவர் எதிர்பார்த்தபடியே அந்த அதிசயம் நிகழ்ந்தது. எலுமிச்சைப் பழத்திற்குள் சில கோதுமைகள் இருந்தன. பாபா அறுவை சிகிச்சைக்குத் தயாரானார்.
அந்த நோயாளியை ஒரு விரிப்பால் முழுமையாக மூடினார். அதன்பிறகு, அங்கிருந்த திருமணமாகாத பெண் ஒருத்தியை அழைத்து அவரிடம் தனது திரிசூலத்தை அளித்து அதனை அந்த நோயாளியின் தலையின் மீது வைத்து 4 முதல் 5 அங்குலத்திற்கு அழுத்துமாறு கூறினார். அந்தப் பெண்ணும் அவ்வாறே செய்தார். ஆனால், நோயாளியின் தலையில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் கூட வரவில்லை. நீதிமன்ற வழக்கால் பதற்றத்துடன் காணப்பட்ட மற்றொரு பக்தர் பாபாவிற்கு முன் வந்து நின்றார். அவரிடம் சில கோதுமைகளை எடுத்துக் கொடுத்துவிட்டு அவருடைய பிரச்சனை தீர்த்துவிடும் என்று பாபா கூறினார். தனது தலையில் ரத்தம் கட்டியுள்ளது என்று கூறிக்கொண்டு வந்த ஒரு நோயாளிக்கு முன்னர் கூப்பிட்ட அதே பெண்ணை அழைத்து தனது திரிசூலுத்தை அளித்து தலையில் அழுத்தச் சொன்னார். இப்போதும் ஒரு சொட்டு ரத்தம் கூட வரவில்லை. அறுவை சிகிச்சைக்காக ஒவ்வொரு முறையும் அதே பெண்ணை பாபா அழைத்தது, அவர் கையாளும் தந்திரத்தை எங்களுக்கு புரியவைத்தது. ஆனால், மற்றவர்கள் யாரும் அது குறித்து சிந்தித்ததாகத் தெரியவில்லை.நாங்கள் பணம் வாங்குவதில்லை. பணம் வாங்குவதற்காக எதையும் செய்துமில்லை என்று பாபா கூறினார். ஆனால், அவருக்கு மாலை போடவும், அவரிடம் வாசனை வத்திகளை அளிப்பதற்கும் பக்தர்களிடம் இருந்து காசு வசூலிக்கின்றனர். ஏனென்றால், பாபாவைப் பார்க்க வருபவர்கள் அவருக்கு மாலையிட வேண்டும், வாசனை வத்திகளைத் தரவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளனர். பாபாவின் பெருமையை அறிந்துதான் தாங்கள் அவரைக் காணவந்துள்ளதாக அங்கிருந்த பக்தர்கள் கூறினர்.
பாபாவின் சிகிச்சையால் தங்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது என்று பலரும் கூறுகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு புதுமையைச் செய்யும் இந்த பாபாவின் உண்மை என்பது குறித்து எங்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. மிகப் பெரிய ஒரு அறுவை சிகிச்சையை சாதாரண ஒரு பிளேடைக் கொண்டு செய்ததாகக் கூறுகிறார். சிறுநீரகத்தில் உள்ள கல்லை ஈர மாவைக் கொண்டு அகற்றியதாகக் கூறுகிறார்.
இப்படிப்பட்ட மனிதர்கள் கூறுவது உண்மையா? நீங்கள் என்ன கூறுகிறீர்கள்.